உலகின் முதல் தலித் அர்ச்சகர் பணியில் சேர்ந்தார்!
பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற கேரள அரசின் அறிவிப்பை அடுத்து, தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் தலித் அர்ச்சகர் நேற்று பணியில் சேர்ந்தார்.

கேரள பொதுப்பணித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில், ஆறு தலித்துகள் மற்றும் 30 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் திருவாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோவில்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இவர்களில் திருச்சூர் அருகிலுள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த யேது கிருஷ்ணன் (வயது 22) எனும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரும் ஒருவர். இவர் அர்ச்சகர் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் நான்காவது இடத்தில் தேர்ச்சியடைந்து வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மணப்புறம் சிவன் கோவிலில் அர்ச்சகராகும் பணி ஆணை வழங்கப்பட்டதை அடுத்து, நேற்று அந்த கோவிலில் பணியில் சேர்ந்தார். இவரை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் மேளதாளங்களோடு வரவேற்றனர். அந்தக் கோவிலின் தலைமை அர்ச்சகரான கோபகுமார், யேது கிருஷ்ணாவை கோவில் கருவறைக்கு அழைத்துச் சென்று, மூல மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
உலகிலேயே முதல்முறையாக தலித் ஒருவர் கோவில் கருவறைக்குள் சென்று, பூஜை நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு கேரளத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. கேரள அரசின் சமூகநீதியை நிலைநாட்டும் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினராலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.