கேரளாவில் பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமனம்!
ஆறு தலித்துகள் உட்பட பிராமணர் அல்லாதவர்கள் 36 பேர் கேரளாவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

காலம்காலமாக பிராமணர்கள் மட்டுமே கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றலாம் என்று இருந்த முறையை, கேரளாவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு முறியடித்திருக்கிறது. அர்ச்சகர் பணிகளுக்கான தேர்வுகள் கேரள பொதுப்பணித்துறையின் சார்பில் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகளாக நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடஒதுக்கீட்டு முறைப்படி மட்டுமே தேர்ச்சி பெற முடியும். இந்தத் தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீடு 32%.
கேரள தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி ராமச்சந்திரன், தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு முறைகளைப் பின்பற்றியே இட ஒதுக்கீடுகள் நிரப்பப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்வுகளின் மூலம் மொத்தம் 62 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களில் 26 பேர் பிராமணர்களும், 30 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 6 பேர் தலித்துகளும் ஆவர். இவர்கள் திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் இயங்கும் கோவில்களில் அர்ச்சகர்களாக பணியலமர்த்தப்படுவர்.