Skip to main content

இவங்க எதுக்கு இருக்காங்க?

Published on 02/02/2018 | Edited on 02/02/2018
இவங்க எதுக்கு இருக்காங்க? சங்கர மடத்துக்கு எதிராக கேள்வி எழுப்பும் வழக்கறிஞர் இளங்கோவன்

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் உள்பட அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்றபோது, விஜயேந்திரர் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் எழுந்த பின்னர், விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று விளக்கம் அளித்தார்கள். வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையை மறைக்கத்தான் விஜயேந்திரர் பிரச்சனையை கிளப்புகிறார்கள் என்றும் கூறினார்கள். இந்த விவகாரங்கள் குறித்து பிரபல வழக்கறிஞர் இளங்கோவன் நக்கீரன் இணையதளத்திடம் தெரிவித்த கருத்துக்கள் இதோ:-

சின்ன சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காமலும், தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு மடத்தின் சார்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது. அதில் இறைவாழ்த்திற்கும், தமிழ் தாய் வாழ்த்திற்கும் எழுந்து நிற்கும் மரபு கிடையாது என்று. இது சட்டப்படி குற்றமா ?

சங்கர மடம் என்பது சுதந்திரம் பெற்றதற்கு முன்பே இருக்கிறதா இல்லை சுதந்திரம் பெற்ற பின் வந்ததா என்று பார்த்தால். சுதந்திரத்திற்கு முன்பே இருந்திருக்கிறது. அப்போது  எங்கு இதில் மரபு இருக்கிறது. மரபு என்பது ஒன்று தோன்றி அதனையே அழியும் வரை பின்தொடர்வதாகும். அவர்கள் தேசிய கீதத்திற்கு  எழுந்து நிற்பது மரபல்ல, சட்டத்திற்காக எழுந்து நிற்கிறார்கள் என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள். சமஸ்கிருதம் என்னும் மொழி, நல்ல இலக்கியங்கள் போன்றவற்றை உருவாக்கியிருக்கிறது. காளிதாசர் என்பவரை எவரும் அறியாமல் இருக்க முடியாது.  அதேபோல், திருவள்ளுவர் கொடுத்த உலகபொதுமுறையை எழுதப்பட்ட தமிழ் மொழியும் அந்த மேடையில் ஒன்றாக சமநிலையில் தான் இருக்கிறது. அதனை பேசக்கூடியவர்கள் தான் உயர்வு தாழ்வு எல்லாம் பார்க்கின்றார்கள். சமமான இடத்தில் மேடை போட்டு உட்காந்திருக்கும் அவர் ஒரு குரு என்கிறார்கள். அவர் தன் மடத்தில் மாணவர்களுக்கு கற்றுத்தருவதுதான் என்னவாக இருக்கும். தமிழ் மொழி என்னை போன்றவர்களுக்கு  தாய். அதற்கு மரியாதை செலுத்தாமல் இருப்பதனால் என்னை போன்றவர்களுக்கு  உறுத்துமா உறுத்தாதா, வலிக்குமா வலிக்காதா என்பது கூட தெரியாத ஒருவர் குருவாக இருக்க இயலுமா ? முதலில் அந்த மடத்தில் என்ன சொல்லித்தருகிறீர்கள். ஆன்மிகமா, சநாதன தர்மமா என்ன சொல்லித்தருகிறீர்கள் என்பது மக்களுக்கு சொல்லவேண்டும் அல்லவா. ஒருவேளை துப்பாக்கி செய்யும் மடமாக இருந்தால்.



விஜயேந்திரர் தமிழை மதிக்கவில்லை என்று சொல்லாதீர்கள் என்று சொல்கிறார்கள். அவர் தியானத்தில் தானே இருந்தார் ?

அவர் தமிழை மட்டும் மதிக்கவில்லை ஒட்டுமொத்த மனிதநேயத்தையுமே மதிக்கவில்லை. அனைவரும் இருக்கும் மேடையில் எல்லோரும் தீண்டத்தகாதவர்கள் போல, தனக்கென ஒரு மேடை அமைத்து மேடை மேல் ஒரு தனி மேடை அமைத்து தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்கிறார். நானாக இருந்தால் அந்த மேடைக்கு சென்றிருக்கவே மாட்டேன். சமம் இல்லாத மேடைக்கு சென்று என்ன ஆவப்போகிறது என்று கேட்டிருப்பேன். நம் சட்டம் அனைவரும் சமம் என்று சொல்லித்தருகிறது. ஆனால் அங்கு தமிழக கவர்னரில் இருந்து யாரும் சமம் வேண்டாம் என்னை விட அவர் பெரியவர் என்கிற மாயையை பரப்புகிறது. அதனால் தான் மத்திய அரசை நாங்கள் எல்லாம் எதிர்க்க காரணம். இவர்கள் நம் சட்டத்திட்டத்தை ஒழிக்க நினைக்கிறார்கள். மக்கள் அதை எதிர்க்கின்றனர். அதற்கு உதாரணம் தான் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றது. மக்கள் இளைஞர் யாரும் வேலை வாய்ப்பு கூட கேட்கவில்லை நாட்டின் சட்டத்தை காப்பாற்றினால் போதும் என்கின்றனர்.

வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையை மறைக்கத்தான். இதனை பெரிதாக்கிறார்கள் என்று ஆண்டாள் பக்தர்கள் சொல்கின்றனர் ?

அப்போ விஜேயந்திரருக்கும் இதில் பங்கு உண்டா. அவர் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று இருந்தாலோ அல்ல தேசிய கீதத்திற்கு அமர்ந்திருந்தாலோ இது பிரச்னையாகவே பார்க்க பட்டிருக்காது. ஆண்டாள் பிரச்னையே நான் சர்ச்சையாக கருதவில்லை, தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடந்த விழாவில் ஆண்டாளை பற்றி கூறிவிட்டு பின்னர் 1970 ஆண்டு எழுதிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் இருந்து ஆண்டாள் தேவதாசி என்று மேற்கோள் காட்டியுள்ளார். முதலில் தேவதாசி என்ற ஒன்று எங்கு நடத்தப்பட்ட முறை மார்கெட்டிலா, லாட்ஜிலா. கோவிலில் தானே அந்த முறை பின்படுத்தபட்டது. அதை தவறு என்று அன்றில் இருந்து எந்த பக்தரும் எதிர்க்கவில்லையே. அது தவறு என்று போராடியது நாங்கள் தானே தவிர பக்தர்களும், குருக்களும் அல்ல. தேவதாசி முறை என்பது கோவிலில் நடந்த முறை அது தவறு எனில் இறைவனே தவறு. ஆண்டாள் தேவதாசி என்று சொல்லியது தவறு என சொல்ல வருகிறீர்களா, இல்லை வைரமுத்து அதனை சொன்னது தவறு என்கிறீர்களா?. தேவதாசி என்பது இழிச்சொல் என்று சொல்பவர்கள் கோவிலில் அந்த இழிதல் இருந்ததே அப்போது எந்த பக்தன் அதனை தவறு என சொன்னான். தேவதாசி முறை தவறென எந்த பக்திப்பாடலிலாவதோ, வரலாற்றிலோ சொல்லப்பட்டிருக்கிறதா என்று சொல்லுங்கள்.

ஒவ்வொரு மடத்தில் ஒவ்வொரு மரபு பின்பற்றப்படுகிறது. சட்டம் எல்லாவற்றிலும் தலையிட முடியுமா ?

சட்டம் என்ன சொல்கிறது என்றால் 'உங்களது நம்பிக்கை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள், இன்னொருவர் மீது திணிக்காதே' என்கிறது. ஆனால் இங்கு மாட்டிறைச்சி சாப்பிடும் போது கொல்ல வருகிற நம்பிக்கையாளர்களை எதிர்த்து போராடியதா இந்த கூட்டம். இந்தியாவில் ஒரு மதம் தான் பிறப்பாலே நான் வேறுபடுவதாக கூறுகிறது. இந்த ஆண்டவன் தான் என்னை படைக்கும் போதே தூரமாக படைக்கின்றான். என்னை தொடுவதற்கு என்று ஒரு சாதி உள்ளது என்கிறது இந்த மதம். கோவில்களுக்கு செல்லலாம் கும்பிடலாம். ஆனால் கருவறைக்குள் புகமுடியாது. சிலையை தொட முடியாது. கிறிஸ்துவத்தில் கூட நான் படித்தால் போதகராக முடியும். அது ஒரு ஆசிரியர் பணி போன்றதாக இருக்கிறது.  பள்ளிவாசலிலும் இதேதான் நான் விரும்பினால் போதகராகலாம். இது போன்ற ஏற்ற தாழ்வு இந்து மதத்தில் மட்டும் தான் உண்டு. இந்த மடங்களும் வேறு எதற்காக உள்ளது சொல்லுங்கள். தமிழ் வளர்க்கவும் அல்ல, சமத்துவத்திற்கு அல்ல. இவர்கள் வேதத்தை போதிக்கவில்லை வேதத்தை தான் போதிக்கின்றார்கள்.   

சந்திப்பு : பெலிக்ஸ்
தொகுப்பு : சந்தோஷ்குமார்                  

சார்ந்த செய்திகள்