Skip to main content

கலெக்டருக்கு கிடைக்கும் சிகிச்சை, சாமானியனுக்கு

Published on 04/01/2018 | Edited on 05/01/2018
கலெக்டருக்கு கிடைக்கும் சிகிச்சை, 
சாமானியனுக்கு கிடைக்கிறதா? 



தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடந்த டிசம்பர் மாதம் வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் லேப்ராஸ்கோப்பி மூலம் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். புதுக்கோட்டை கலெக்டராக இருந்த எஸ்.ஜே.சிரு-வின் மனைவி புதுக்கோட்டை அரசு ராணியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடலூரில் கலெக்டராக பணிபுரிந்த ககன்தீப்சிங் பேடியும் அவரது மனைவியை பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார்.

அரசு திட்டங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் குறித்து மக்களிடம் பேச்சோடு நின்று விடாமல் தாங்களே களம் இறங்கி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட கலெக்டர்களுக்கும், தலைமைச் செயலாளருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகிறது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களைச்  சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "மாவட்ட ஆட்சியர்களும் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் உள்ளிட்ட உறவினர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் தா.பாண்டியன், குமரி ஆனந்தன் உள்ளிட்டோரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பணம் இல்லாதவர்கள்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும் என்ற நிலை மாறி, எல்லோருக்கும் அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்தப் பேட்டி மேலோட்டமாக கேட்பதற்கு பெருமையாக இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர்களுக்கும், முதல் அமைச்சர் மகனுக்கும் அளிக்கப்படுகிற சிகிச்சை சாமானியர்களுக்கும் கிடைக்கிறதா என சமூக ஆர்வலர்களிடம் கேட்டோம்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த காந்தி கூறுகையில்,



"அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள், வசதியில்லாதவர்கள் சென்றால் மதிப்பதில்லை. தொட்டு பார்த்து வைத்தியம் பார்ப்பதில்லை. இதுதான் பல இடங்களிலும் நடக்கிறது. நோயாளியிடம் என்ன செய்கிறது என கேட்டுவிட்டு, சில மாத்திரைகளை கொடுத்துவிட்டு, சில மாத்திரைகள் மருத்துவமனையில் இல்லை. வெளியே கடைகளில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறும் நிலைதான் இருக்கிறது. கிராமப்புறங்களில் நாய்கடி, பாம்புக்கடி என்று சென்றால் டாக்டர் இல்லை, நர்சுகள் இல்லை, அவர்கள் இருந்தாலும் மருந்துகள் இல்லை என்ற நிலைதான் எதார்த்தத்தில் நிலவுகிறது. சில சமயம் அரசு மருத்துவமனை டாக்டர்களே வெளியே இந்த மருத்துவ மனைக்கு செல்லுங்கள் என்று எழுதி கொடுக்கிறார்கள். அரசு மருத்துவமனை என கட்டிடங்கள்தான் பெரியதாக இருக்கிறதே தவிர, மருத்துவத்தின் தரம் உயரவே இல்லை. மக்களுக்கு மனம்விரும்பி வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களோ, ஊழியர்களோ அங்கு இல்லை....

மாவட்ட ஆட்சியர் என்பதால் மருத்துவமனையில் உள்ள சீனியர் டாக்டர்கள் முதல் அனைத்து ஊழியர்களும் பயத்தில் நடுங்கி சிகிச்சை கொடுப்பார்கள். அனைத்து மக்களையும் இதேபோல் கவனித்தால் ஏன் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடப்போகிறார்கள்? கையில் காசு இல்லாதவன் கூட,  அண்டா, குண்டா, வீடு, வாகனத்தை அடகு வைத்து தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்கிறான்" என்றார்.

உளுந்தூர்பேட்டையை அடுத்த  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியது...



"அரசு மருத்துவமனைகளில் நோய்களை தீர்க்கிறார்களோ இல்லையோ, நோய் தொற்று ஏற்படும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனைக்கு சாமானியர்கள் சென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதுதான் உண்மை. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டையில் அடிக்கடி விபத்து ஏற்படும். உடனே அரசு மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்றால் உள்ள நுழையும்போதே பாண்டிச்சேரி செல்லுங்கள், விழுப்புரம் செல்லுங்கள், முண்டியம்பாக்கம் செல்லுங்கள் என்றுதான் சொல்லுகிறார்கள். முதலுதவி செய்துவிட்டு வெளியே அனுப்புவதில்தான் குறியாக உள்ளார்கள்...

அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சைகள் இருந்தால் எவ்வளவோ உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற முடியாமல் போன சம்பவங்கள்தான் அதிகம். கோடிக்கணக்கில் மருந்து வாங்குகிறோம், மாத்திரை வாங்குகிறோம், உபகரணங்கள் வாங்குகிறோம் என்று சட்டமன்றத்திலும், வெளியேயும் அறிக்கையில் அரசு தெரிவிக்கிறது. ஆனால் அதெல்லாம் எங்கே செல்கிறது என தெரியவில்லை. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை, உபகரணங்கள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எக்ஸ்ரே ஃபிலிம்கள், முக்கிய மருந்துகள் வெளியே வாங்கிவர சொல்கிறார்கள். எக்ஸ்ரே ஃபிலிம்கள் இல்லையா என நாம் கேட்டால், அதனை சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு பாக்கி உள்ளதால் அந்த நிறுவனம் சரியாக வழங்கவில்லை என்று சொல்லுகிறார்கள்...

பாண்டிச்சேரி, விழுப்புரம் செல்லுவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் போதிய அளவு இல்லை. தனியார் ஆம்புலன்ஸ் உள்ளது என கைகாட்டுகிறார்கள். கையில் 200 ரூபாய் வைத்துக்கொண்டு ஊருக்கு சென்று திரும்புபவர்கள் விபத்தில் சிக்கினால், அவர்கள் தனியார் ஆம்புலன்ஸ்க்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? எல்லோரும் கையில் பணம் வைத்துக்கொண்டு அலைகிறார்களா?

மாவட்ட ஆட்சியர் என்பதால்தான் அந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையை நன்றாக அளித்துள்ளார்கள். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் என்பதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தரமான சிகிச்சையுடன், மரியாதையும் கிடைத்திருக்கும். தா.பாண்டியன், குமரி அனந்தன் ஆகியோர் அரசியல் தலைவர்கள் என்பதால் தரமான மருத்துவ சிகிச்சை அளித்திருப்பார்கள். மற்றபடி சாமானியர்கள் என்றால் இந்த அளவு சிகிச்சை அளிக்க மாட்டார்கள். அப்படி அளிப்பார்கள் என்றால் முதலில் மாவட்ட ஆட்சியர் போல உள்ள அரசு ஊழியர்கள் அங்கு சிகிச்சை பெற தயாரா. ஸ்டார் மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் மெடிக்கல் இன்சூரன்ஸ் போட்டவர்கள் பெரும்பாலானோர் அதிக ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள்தான்" என்றார்.

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்து கொண்ட அரசு அதிகாரிகளின் செயல் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. அவர்களைப் போல, மற்ற அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அரசு மருத்துவ மனைகளிலேயே சிகிச்சை பெற தயாராக இருந்தால், அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும். அதனால் ஏழை எளிய மக்களும் பயன் பெறுவார்கள் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

- எஸ்.பி.சேகர்
- வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்