Skip to main content

தமிழ் சினிமா தவறியது, இந்தி சினிமா செய்தது!

Published on 08/02/2018 | Edited on 08/02/2018
தமிழ் சினிமா தவறியது, இந்தி சினிமா செய்தது!

சாதனை தமிழரை தழுவிய பாலிவுட்! 





அருணாச்சலாம் முருகானந்தம், டைம்ஸ் இதழின் 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில்  ஒருவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். எதற்காக? மாதவிடாயின் போது, பெண்கள் பயன்படுத்தும் சானிடிரி நேப்கின்களை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியதற்காக. 

‘இந்தியாவின் மாதவிடாய் மனிதர்’ என்றழைக்கப்படும் அருணாச்சலம் முருகானந்தம் கோயம்பத்தூரை சேர்ந்தவர். திருமணமான சில மாதங்களில், தன் மனைவி சாந்தி அடிக்கடி பழைய சாக்குகளையும் பேப்பர்களையும் எடுத்துப்போவதை பார்த்த முருகானந்தம் ஏன் என்று விசாரிக்கிறார். மாதவிடாய் சமயங்களில் அது உபயோகப்படுத்தப் படுகிறது என்று கேள்விப்பட்டதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். 

கடைகளில் விற்கும் நேப்கின்களின் அதிக விலையினால்தான் கிராமப்புறப் பெண்கள் அதற்கு மாற்றாக சாக்குகளையும் பேப்பர்களையும் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அது எத்தனை சுகாதாரக் கேட்டை தரும் என்பதையும் உணர்ந்த முருகானந்தம் அதற்கு மாற்று வழிகளை தேடத் துவங்குகிறார். சானிடரி நேப்கின்களின்அளவில் பஞ்சை வைத்து தானே ஒரு நேப்கினை தயாரித்து தன் மனைவியிடமும் தங்கைகளிடமும் தந்து உபயோகிக்க சொல்கிறார். பெரும் தயக்கத்திற்கு பிறகு அதை பெற்றுக்கொண்டவர்கள் அது சுத்தமாக பயனளிக்கவில்லை என்று பதிலளிக்கிறார்கள். 






மீண்டும் வேறொரு முறையில் நேப்கின்களை செய்து அவர்களிடம் கொடுக்க, அவர்கள் இம்முறை அதை பெற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார்கள். சுற்றி இருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் அதை கொடுத்து பயன்படுத்தச் சொல்கிறார் முருகானந்தம். அவர்களும் வெட்கத்தின் காரணமாக அதுகுறித்து அவரிடம் விவாதிக்க மறுக்கின்றனர். 

ஆனால் இதில் தீர்மானமாக இருந்த முருகானந்தம் வேறுவழியில்லாமல் தன்னைத் தானே சோதனை செய்து கொள்வது என்ற முடிவை எடுக்கிறார். தன் வயிற்றோடு சேர்த்து ஒரு ரப்பர் குழாயை கட்டிக்கொண்டு, அதில் மிருக ரத்தத்தை நிரப்புகிறார். அவ்வப்போது அதை அமுத்துவதன் மூலம் மாதவிடாய் சமயங்களில் வெளியேறும் ரத்தத்தை போன்று மிருக ரத்தத்தை வெளியேற்றி தனது நேப்கின்களை சோதிக்கிறார். 

அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. ரத்த நாற்றமும் ஊராரின் அசூயையும் சேர்ந்து அவரை ஒதுக்குகிறது. ஆனாலும் சோர்ந்து போகாமல் தனியே நின்று அதை எதிர்கொள்கிறார். எங்கே தவறு நடந்திருக்கிறது என்று தேடத் துவங்குகிறார். 





கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடை கிடைக்கிறது. கடைகளில் விற்கும் சானிடிரி நேப்கின்கள் ஒரு குறிப்பிட்ட வகை ஃபைபர்களால் உருவாக்கப்படுகிறது என்றும், அது இல்லாததால் தான் தன் நேப்கின்கள் சரிவர ரத்தத்தை உறிஞ்சமுடிவதில்லை எனவும் கண்டுபிடிக்கிறார். அதை உருவாக்கத் தேவைப்படும் இயந்திரங்களை வாங்க கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. மேலும் கடைகளில் விற்கப்படும் நேப்கின்கள், உருவாக்க விலையை விட 40 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதையும் அறிகிறார். 

தானே அந்த இயந்திரங்களை உருவாக்கும் வேலைகளில் இறங்குகிறார். முன்பு பார்த்த மெக்கானிக், வெல்டிங் வேலைகள் கைகொடுக்க, மூன்றரை கோடி மதிப்புள்ள அந்த இயந்திரங்களை வெறும் 65 ஆயிரம் ரூபாயில் வடிவமைத்து முடிக்கிறார். அதன் மூலம் உருவாக்கிய நேப்கின்கள் இப்போது சிறப்பாக வேலை செய்கின்றது. சந்தோஷத்தின் உச்சிக்கு செல்கிறார் முருகானந்தம். 

2006 சென்னை ஐஐடி வளாகத்திற்கு சென்று தன் இயந்திரத்தை சோதனை செய்து காட்டுகிறார். இந்திய அரசின் ‘தேசிய கண்டுபிடிப்பு மையம்’ இந்த இயந்திரத்திற்கு ஒப்புதல் அளித்து விருதும் கொடுத்து சிறப்பிக்கிறது. அவர்கள் மூலம் பணஉதவி பெற்று நிறைய இயந்திரங்களை உருவாக்கி கடைகளில் விற்பனை செய்யப்படும் நேப்கின்களை விட மூன்றில் ஒரு பங்கு விலையில், நேப்கின்களை உருவாக்கத் துவங்குகிறார். ஊரக மக்களுக்கும் பக்கத்து மாவட்டங்களுக்கும் தனது நேப்கின்களை விற்பனை செய்யத் துவங்குகிறார். பல கார்ப்பரேட் கம்பெனிகள் அவரது இயந்திரத்தின் உரிமையை பெருந்தொகைகளுக்குக்  கேட்டும், அவர்களுக்கு தரமறுத்து, பல பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு தன் இயந்திரங்களை கொடுத்து அதன்மூலம் அவர்கள் நேப்கின்கள் உருவாக்கி விற்பனை செய்ய வழி செய்கிறார். 






தற்போது இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 23 மாநிலங்களில் இவரின் குறைந்த விலை நேப்கின் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இவரது இயந்திரங்கள் ஏற்றுமதியாக உள்ளன. இந்தியாவின் கிராமப்புற பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியதற்காக முருகானந்திற்கு 2016 ஆண்டு இந்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. 

இந்த சாதனை தமிழரின் கதைதான் திரைப்படமாகிறது. ஆனால் தமிழில் அல்ல, இந்தியில். சீனி கம், பா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘Pad Man’ (பேட்மேன்) திரைப்படம் இம்மாதம் 9 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. முருகானந்தத்தின்  கதையை மையமாய் வைத்து ட்விங்கிள் கண்ணா எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

ஒரு சாதனை தமிழரின் கதை உலகெங்கும் திரைப்படமாக வெளியாவது நிச்சயம் நமக்கு பெருமைக்குரிய விஷயம்தான். ஆனாலும் இவரது கதை தமிழில் படமாக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே என்கிற ஆதங்கம் எழாமல் இல்லை. கலைக்கு நிச்சயம் மொழி இல்லைதான். ஆனால் மனிதர்களுக்கு இருக்கிறது தானே? அதுவும் தமிழ்நாட்டில் பிறந்து உலகம் போற்றும் ஒரு சாதனையை செய்த தமிழரின் கதை தமிழில் உருவாவது இன்னும் பொருத்தமாகத்தானே இருந்திருக்கும். 

கதைகள் இல்லை என்று வெளிநாட்டுப் படங்களையும் உள்நாட்டுப் படங்களையும் தமிழ் சினிமா தழுவிக் கொண்டிருக்க, தமிழ்நாட்டில் இருக்கும் சொல்லப்படாத ஒரு கதையை படமாக்கி முடித்திருக்கிறது இந்தி சினிமா. இன்னமும் நேரம் கடக்கவில்லை. சொல்ல மறந்த கதைகளும் மனிதர்களும் இங்கே ஆயிரம். நிச்சயம் நம் தமிழ் சினிமா நம் மண்ணையும் மக்களையும் அடையாளப்படுத்தும் திரைப்படங்களை இனி உருவாக்கும் என்று நம்புவோம். 

ஜெயச்சந்திர ஹாஷ்மி

சார்ந்த செய்திகள்