Skip to main content

'அந்த மூன்றெழுத்து வார்த்தையை நீக்க பாகிஸ்தான் மன்றாடியது'-விக்ரம் மிஸ்ரி கொடுத்த அதிர்ச்சி அப்டேட்கள் 

Published on 08/05/2025 | Edited on 08/05/2025
'Pakistan begged to remove that three-letter word' - Vikram Misri's shocking updates

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதுவரை போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று (08/05/2025) மீண்டும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ பெண் அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பேசுகையில்  ''பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் இந்தியாவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானிலேயே முறியடித்தது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் இருக்கக்கூடிய பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மட்டும் தான் இந்தியா குறிவைத்த தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டன அறிக்கையில் இருந்த TRF (The Resistance Force) என்ற அமைப்பின் பெயரை நீக்குவதற்கு பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை செய்தது. இந்தியா தொடர்பாக பாகிஸ்தானில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இரட்டை கோபுர  தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடன் கூட பாகிஸ்தானில் ராணுவ தலைமையகத்திற்கு மிக அருகில் கண்டெடுக்கப்பட்டான். பதட்டத்தை மேலும் நீட்டிக்க கூடாது என்பது தான் எங்களுடைய உண்மையான நோக்கம்.

NN

இந்தியாவை பொறுத்த வரை பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறோம். தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கான இல்லமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயரைதான் பாகிஸ்தான் பெற்றிருக்கிறது. ஒசாமா பின்லேடனையே தியாகி என தான் பாகிஸ்தான் அழைத்தது. அண்மையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியூர் அமைச்சர் உள்ளிட்டோர் கூட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி அளித்திருக்கிறார்கள். அதனை வெளிப்படையாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சிந்தூர் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் இறுதி அஞ்சலியில் கூட சில அரசு நிர்வாகிகள், பாகிஸ்தான் ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

சிந்தூர் தாக்குதல் குறித்து சர்வதேச அளவில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என கேட்கும் பாகிஸ்தானின் கடந்த கால வரலாறுகள் நமக்கு தெரியும். மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலும் சரி, பதான்கோட்டில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலிலும் சரி இந்தியா அனைத்து விதமான ஆதாரங்களை பாகிஸ்தானிற்கு வழங்கியது. இது தொடர்பாக லஷ்கர்-இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை இந்தியா பிடித்தது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அந்த வழக்குகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கூறுவதெல்லாம் காலம் தாழ்த்தும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை'' என்றார்.

சார்ந்த செய்திகள்