
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதுவரை போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் மோதலில் அணிசேரா கொள்கையை கடைப்பிடிப்பாதக இலங்கை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு அமைச்சரவை செய்தி தொடர்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ 'இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்பொழுது ஏற்பட்டுவரும் நிலையை இலங்கை நாட்டு வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எங்களுடைய அரசுக்கு இது தொடர்பான அப்டேட்டை தொடர்ந்து கொடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் அணிசேரா வெளியுறவுக் கொள்கை மற்றும் பிராந்திய அமைதிக்கான உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம். எங்கள் நாடு பயங்கரவாதத்தை ஆதரிக்காது. எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு தங்களுடைய வான் பரப்பையோ அல்லது நிலத்தையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே இந்த பிரச்சனையில் யாருக்கும் எங்களுடைய ஆதரவு இல்லை' என அறிவிக்கப்பட்டுள்ளது.