Skip to main content

ஃபேஸ்புக்கால் பேசப்பட்டவர்கள்

Published on 04/01/2018 | Edited on 04/01/2018
ஃபேஸ்புக்கால் பேசப்பட்டவர்கள் 

2018 தொடங்கிவிட்டது. 2017ல் என்ன நடந்தது, யார் பெரிய பிரபலம், போன்ற பட்டியல் தொகுப்புகள்  பலவற்றை பார்த்திருப்போம். இதுபோன்ற சர்வேவை பேஸ்புக்கும் எடுத்து தற்போது வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள அரசாங்க பக்கங்கள், துறைகள், மந்திரிகள், முதல்வர் என்று அனைத்தையும் வைத்து டாப் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த சர்வே லைக், கமன்ட் மற்றும் ஷேர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

டாப் கேபினட் மந்திரிகள்  



இந்திய அரசின் டாப் கேபினட் மந்திரிகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இவர் முக்கியமான பிரச்சனைகளில் ஆஜர் ஆகிறாரோ இல்லையோ தினசரி பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஆஜராகிவிடுவார். அதுமட்டுமல்லாமல், அவர் போடும் பதிவுகளுக்கு ஒரு கூட்டம் லைக், ஹார்ட், வாவ் என்று ரியாக்ட் செய்யவும், மற்றோரு கூட்டம் ஆங்கிரி மட்டும் ரியாக்ட் செய்யவும் காத்திருப்பார்கள். எது என்னவோ எல்லா பதிவிலும் அவருக்கு லைக்ஸ் பிச்சிக்கும். இரண்டாவது இடத்தில், ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் இருக்கிறார். இந்த வருடம் ரயில்வே துறை  பேஸ்புக்கில் ஆக்ட்டிவ்வாக குறைகளை கேட்டு அறிந்தாலும்,  நிறைய விபத்துகளை சந்தித்ததன் மூலம் நேரில் கோட்டை விட்டுவிட்டது. மூன்றாவது இடத்தை உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பெறுகிறார். இந்த தொகுப்பில் இருக்கும் இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மூவரும் பாஜக வை சேர்ந்தவர்கள்.

டாப் ராஜ்யசபா உறுப்பினர்கள் 



இந்த தொகுப்பில் முதல் இடத்தை பிடிப்பவர் நம் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்தான். அமைச்சரா இவருக்கு இருக்கிற விசிறிகளை விட கிரிக்கெட் விசிறிகள்தான்  அதிகம் இருப்பாங்க போல. இரண்டாவது இடத்தில் ஆர். கே. சின்ஹா இருக்கிறார். இவரும் பாஜகவை சேர்ந்தவர்தான். பாரடைஸ் பேப்பர் வெளியிட்ட  வெளிநாடுகளில் அதிக சொத்து, வருவாய் வைத்திருப்பவர்களில் பட்டியலிலும் இவர் பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா மூன்றாவது இடத்தை பிடிக்கிறார். மோடியை அடுத்து பாஜகவில் அதிக பிரபலம் இவர்தான். அதுமட்டுமல்லாமல், இவரது மகன் நடத்தும் தொழில் கடந்த இரண்டு வருடங்களாக பல மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது. தொழில் ஆரம்பித்து பல வருடங்கள் 50,000 மட்டுமே இருந்த அதன் வருவாய் இந்த இரண்டு வருடத்தில் ஆயிரம் கோடிகளை ஈட்டியுள்ளதாம்.

டாப் மாநில முதலமைச்சர்கள் 



இந்த தொகுப்பில் முதல் இடத்தை பிடிப்பவர் நம் எல்லாருக்கும் தெரிந்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தான். போன வருடம் இவர் ஹிந்துத்வா கொள்கைகளை காப்பாற்றி நிறைய பதிவுகளை பதிவு செய்து மக்களிடம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினார். இரண்டாவது இடத்தில், வசுந்திரா ராஜி உள்ளார். இவர் ராஜஸ்தான் முதல்வர் ஆவார். கடந்த வருடம் 'பத்மாவதி' படத்தை எதிர்த்ததில் இவரும் ஒருவர். மூன்றாவது இடம், குஜராத்தின் முதல்வராக இரண்டாவது முறை பதவியேற்ற விஜய் ரூபாணிக்கு சென்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில்  அசத்தலாகப் பேசி  மோடி அளவிற்கு ட்ரெண்ட் ஆகவில்லையென்றாலும், அப்போ, அப்போ ஓரளவுக்கு ட்ரெண்டாகி இந்த இடத்தை பிடித்துள்ளார்.

டாப் தலைமை அலுவலகம் 




முக்கிய பதவிகளில் இருப்பவர்களில் இருப்பவர்களுக்காக முகப்புத்தகத்தில் பக்கங்கள் அமைக்கப்பட்டன.  அதில் முதல் இடத்தை பிடிக்கிறது பிரதமரின் அலுவலக பக்கம். இந்த பக்கம்தான் பிரதமர் ஃபிளைட் ஏறுவது முதல் செல்பி வரை அனைத்தையும் முதலில் பதிவிடுவது.  இரண்டாவது இடத்தை பிடிக்கிறது ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் பக்கம், மூன்றாவது இடத்தை 'நித்தி ஆயோக்' எனும் மத்திய அரசாங்க தலைமை அலுவலகத்தின் பக்கம் பெற்றுள்ளது.

டாப் இந்திய அரசியல் கட்சிகள்



இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமே இல்லை, அதுபோன்று அவர்களின் பேஸ்புக் பக்கங்களுக்கும் பஞ்சமில்லை. பேஸ்புக் பக்கங்களில் முதல் இடத்தை பிடிக்கும் கட்சி 19 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜகதான். இவர்கள் நிறைய விமர்சிக்கப்பட்டாலும், அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி மக்களை கவர்கின்றனர். இரண்டாவது இடத்தை பிடிக்கிறது ஆம் ஆத்மீ கட்சி. இந்த கட்சிதான் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தலைநகரை கையில் வைத்திருக்கிறது. மூன்றாவது இடத்தை பிடிக்கிறது, இந்திய காங்கிரஸ் கட்சி. 

-சந்தோஷ் குமார்   

சார்ந்த செய்திகள்