Skip to main content

அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ பிரச்சனை!

Published on 10/01/2018 | Edited on 10/01/2018
அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ பிரச்சனை! 
- தற்காக்கும் அலர்ட் வழிமுறைகள்..

இந்த பருவகாலத்தில், பல்வேறு பிரச்சனைகளும், நோய் பாதிப்புகளும் சென்னையில் காணப்படுவது இயல்பானதாகும். இப்பாதிப்புகளுள் ஒன்றாக இருப்பது இளஞ்சிவப்பு கண் நோய் அல்லது கண் இமைப்படல அழற்சி (கன்ஜக்டிவிட்டிஸ்) அல்லது உள்ளூர் மக்கள் மத்தியில் பொதுவாக ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுவதும் ஒன்றாகும். கண் இமைப்படல அழற்சி என்பது, கண்ணின் வெண்படலத்தில் ஏற்படும் வீக்கமாகும் (வெண்படலம் என்பது கண்ணின் வெண்மைப்பகுதி மீதும் மற்றும் கண் இமையின் உட்புறத்திலும் அமைந்திருக்கிற மிக மெல்லிய தெளிவான திசுவாகும்). எளிதாக பிறருக்கு பரவக்கூடிய இந்த கண் தொற்றானது, குழந்தைகள் மத்தியில் மிக அதிகமாக காணப்படுகிறது. பள்ளியின் வகுப்பறைகளில் விளையாட்டு மைதானங்களில், டியூஷன் சென்டர்களில் மற்றும் அவர்கள் அடிக்கடி சென்றுவருகிற பிற இடங்களில் இந்த நோய் தொற்று அவர்களை பாதிக்கிறது.



கண் இமைப்படல அழற்சியானது அதன் பல்வேறு வடிவங்களில் ஒவ்வாமை, தொற்றுகிற மற்றும் வேதிப்பொருள் கண் இமைப்படல அழற்சி மூன்று வகைகளாக வகை பிரிப்பு செய்யப்படுகிறது. ஒவ்வாமை கண் இமைப்படல அழற்சியானது, பருவ காலங்களில் ஏற்படுகிற ஒவ்வாமைகள் (தூசி, புகை மற்றும் பிற) பாதிப்புள்ள மக்களை பாதிக்கிறது. தொற்றக்கூடிய கண் இமைப்படல அழற்சியானது, நுண்ணுயிரி அல்லது நச்சுயிரி தொற்றுகளினால் விளைகிறது. வேதிப்பொருள் கண் இமைப்படல அழற்சியானது ஷாம்புகள், அழுக்கு, புகை மற்றும் நீச்சல் குளத்திலுள்ள குளோரின் போன்ற எரிச்சலூட்டிகளின் காரணமாக ஏற்படுகிறது. வேதிப்பொருள் மற்றும் ஒவ்வாமை கண் இமைப்படல அழற்சி நோய்களே கோடைகாலத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றன.

கண் இமைப்படல அழற்சியானது, பல அறிகுறிகளின் மூலம் வெளிப்படுகிறது. “பிங்க் ஐ” என்ற பெயர் சுட்டிக்காட்டுவதைப்போல இதில் கண்ணின் வெண்மைப்பகுதி அல்லது கண் இமையின் உட்புறம் சிவப்பாக மாறுகிறது. அதிகரித்த அளவிலான கண்ணீர், கண் இமைகள் மீது படலப்பூச்சாக மாறுகிற அடர்த்தியான, மஞ்சள் நிறத்திலான வெள்ளைக்கழிவு ஆகியவை, குறிப்பாக உறக்கத்திற்குப் பிறகு ஏற்படக்கூடும். விழித்திருக்கும்போது கண்ணிலிருந்து பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் திரவம் சுரக்கும். தொற்றுப்பாதிப்புள்ள நபருக்கு கண்களில் அரிப்பு உணர்வும், எரிச்சல் உணர்வும் ஏற்படலாம். மங்களான பார்வையும் அல்லது வெளிச்சத்தைப் பார்க்க கண் கூசும் உணர்வும் அவர்களுக்கு இருக்கக்கூடும். இந்த நோயானது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை நீடிக்கக்கூடும் மற்றும் அதன் பிறகு தானாகவே பாதிப்பு சரியாகிவிடும்.

அறிகுறிகள்

‘மெட்ராஸ் ஐ’ தொற்றின் அறிகுறிகள், கண் இமைப்படல அழற்சியின் வகையைச் சார்ந்திருக்கும்:

· கண் சிவத்தலே, மெட்ராஸ் ஐ பாதிப்பில் மிக குறிப்பிடத்தக்க அறிகுறியாகும். கண்ணின் வெண்படலத்தைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் விரிவடையுமாறு தொற்று செய்வதன் காரணமாக இது ஏற்படுகிறது.

· கண்ணீர் வடிதல் அல்லது கண்ணிலிருந்து அளவுக்கு அதிகமாக நீர் கோர்த்தல், அரிப்பு, வலி மற்றும் கண்ணை திறக்கமுடியாமல் வெள்ளைக்கழிவு அடைத்துக்கொள்வது ஆகியவை ஒவ்வாமை மற்றும் நச்சுயிரினால் ஏற்படும் கண் இமைப்படல அழற்சிகளின் பொதுவான அறிகுறிகளாகும்.

· ஒவ்வாமை மற்றும் நச்சுயிரினால் ஏற்படும் கண் இமைப்படல அழற்சியில்  பாதிக்கப்பட்ட கண்கள் நீர்போன்ற திரவத்தை வெளியேற்றுகின்றன மற்றும் நுண்ணுயிரினால் ஏற்படும் கண் இமைப்படல அழற்சியில் அடர்த்தியான, மஞ்சளும், பச்சை நிறத்திலுமான திரவம் வெளியேறுகிறது. இந்த திரவ வெளியேற்றமானது, உலர்ந்த பிறகு கண் இமைகள் மூடிக்கொள்ளுமாறு பக்குபோல் மாறிவிடுகின்றன.

· வெளிச்சத்தைப் பார்க்கும்போது, மிதமான உணர்திறன் பாதிப்பையும் நோயாளிகள் அனுபவிக்கின்றனர். வெளிச்சத்திற்கு அளவுக்கு அதிகமான உணர்திறன் / கூச்சம் ஏற்படுமானால், தொற்றானது கருவிழிப்படலத்தை பீடித்திருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.



செய்ய வேண்டியவை

· ஒரு கண் மருத்துவரை கலந்தாலோசிக்கவும் மற்றும் அவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தவும் (கண் சொட்டுமருந்து/ஆயிண்மென்ட்)

· பாதிக்கப்பட்ட கண் / கண்களை குளிர்ந்த நீரைக்கொண்டு அடிக்கடி கழுவவும்

· சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு அடிக்கடி உங்கள் கைகளை சுத்தம் செய்யவும்

· தனிப்பட்ட டவல், கைக்குட்டை, தலையனை உறை, படுக்கை விரிப்பு மற்றும் சோப்பை பயன்படுத்தவும்

· கான்டாக்ட் லென்ஸ்களை அணிவதை தவிர்க்கவும்

· குளிர் கண்ணாடிகளை (சன்கிளாஸ்) அணியவும் (சூரிய ஒளி பிரதிபலிப்பை தடுப்பதற்காக)

 செய்யக்கூடாதவை

· உங்களது கண்களை தொடவோ அல்லது தேய்க்கவோ கூடாது

· ஒரு கண் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு கண் சொட்டு மருந்து / ஆயின்மெண்ட் போன்ற மருந்துகளை பயன்படுத்தக்கூடாது

· கண் மேக்அப் சாதனங்கள் (காஜல், ஐ லைனர் போன்றவை), கான்டாக்டக் லென்ஸ்கள் ஆகியவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

· பிற தனிநபர்களின் ஆடைகளோடு சேர்த்து உங்களது ஆடைகளை துவைக்கக்கூடாது.



முன்தடுப்பு நடவடிக்கைகள்

மிக அதிகமாக பரவக்கூடிய ஒரு கண் நோயான ‘மெட்ராஸ் ஐ’ தொற்று ஏற்படும் இடரை குறைப்பதற்கான சில எளிய முன்தடுப்பு முறைகள்:

· இந்நோயானது, தொடுபொருட்கள் (டவல், கைகுட்டை, தலையனை உறை, மெத்தை விரிப்பு, டம்ளர், பாத்திரங்கள் போன்ற பொருட்கள்) வழியாக பரவுகிறது. ஆகவே, அவற்றை ஒருபோதும் பிறருடன் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

· பொதுவாக நம்பப்படுவதைப்போல, தொற்றுப்பாதிப்புள்ள நபரோடு நேருக்கு நேர் கண்ணை பார்ப்பதன் காரணமாக நோய் தொற்று ஒருவருக்கு ஏற்படுவதில்லை.

· தொற்று பாதிப்புள்ள நபரை தொட நேர்ந்தால், அதன்பிறகு சோப்பு மற்றும் நீரைக்கொண்டு கைகளை சுத்தம் செய்யவும்

· ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளை குறைப்பதற்காக படுக்கை விரிப்புகள் மற்றும் தலையனை உறைகளை வெந்நீர் மற்றும் சோப்பைக் கொண்டு துவைக்கவும்

· ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நபர்கள், சிகிச்சையை தொடங்கி அதன் மூலம் அறிகுறிகளின் பாதிப்பில் முன்னேற்றம் ஏற்படத்தொடங்கும் வரை பிறருடன் தொடர்புகொள்வதை குறைத்துக் கொள்ளவேண்டும். நோய் தொற்றானது பிறருக்கு பரவுகின்ற வாய்ப்பை இது குறைக்க உதவும்.
















- டாக்டர் சௌந்தரி, 
தலைவர் - மருத்துவ சேவைகள், 
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை,
சென்னை.

சார்ந்த செய்திகள்