Skip to main content

மாணவி மரணத்தில் சந்தேகம்... தீவிர விசாரணை நடத்த உறவினர்கள் வலியுறுத்தல்... 

 

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே வடுகர்பேட்டை அரசு உதவி பெறும் கிறித்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இறந்து போன +1 மாணவி ரேகாவின் மரணத்திற்கு காரணமான பள்ளி விடுதி வார்டனை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
 

அரியலூர் மாவட்டம் அயன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் - புஷ்பவல்லி தம்பதிகளின் மகள் ரேகா. வயது 16. திருச்சி மாவட்டம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு சி பிரிவில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி காலை 7.30 மணியளவில் காணவில்லை என்று 8.30 மணிக்கு பெண்ணுடைய சகோதரர் கருப்பையா அவர்களுக்கு அலைபேசி வாயிலாக தகவல் தந்தனர். 

 

 school 

அதன் பிறகு ரேகாவின் பெற்றோர் விரைந்து பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் தங்களது உற்றார் உறவினர்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாலை 3 மணி வரை எந்தத் தகவலும் கிடைக்காத காரணத்தால் கல்லக்குடி காவல்துறையில் பணியிலிருந்த இராமலிங்கம் சப் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் அளித்த பிறகு ரேகாவின் பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். மேலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 


கல்லக்குடி இரயில்வே நிலையம் அருகில் இரவு 7.08 மணியளவில் மதுரை- விழுப்புரம் பயணிகள் ( ரயில் எண் 56805) ரயிலில் அடிபட்டு இறந்ததாக கல்லக்குடி காவல் நிலையம் மூலமும் மற்றும் இரயில்வே துறை   போலீசாரின் சார்பிலும் பெண்ணின் மாமா ஓய்வுபெற்ற இராணுவ வீரர் செல்வராஜ் அவர்களிடம் அலைபேசி வாயிலாக தகவல் அளிக்கப்பட்டது. 
 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரேகாவின் பெற்றோர்கள், ரேகாவின் உடன் பிறந்தோர்கள் வைஜெயந்தி 26, ரேணுகா தேவி 20, கருப்பையா 18 உறவினர்கள் பெண்ணின் தொடையில் ஆசிரியர்கள் அடித்துப் பழுத்திருந்த காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இரயில்வே துறை போலீசார் உடற் கூறு பரிசோதனையில் இதனைப்பற்றி குறிப்பிடாமல் பள்ளி நிர்வாகத்திற்குச் சாதகமாக செயல்பட்டுள்ளனர் எனவும் பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி கல்லக்குடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யச் சொல்லியும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று கூறி 9/3/2020 காலை 9.30 மணி முதல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளூர், வேப்பங்குழி, அயன் சுத்தமல்லி கிராம மக்கள் இறந்த மாணவியின் உறவினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் திரண்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வடுகர்பேட்டை பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 

சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களும் உறவினர்களும் மாணவியின் இறப்பிற்கு காரணமாக இருந்த மன உளைச்சல் ஏற்படுத்திய பள்ளி விடுதி வார்டன் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோசமிட்டனர். இதனால் சுமார் 1 1/2 மணி நேரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலால்குடி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியின் மரணத்திற்கு காரணமான வார்டனை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் எனவும் தேர்வுகள் முடிந்தவுடன் விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.


 

 

மாணவி ரேகா மரணம் பற்றி அவரது தாய்மாமன் ராணுவ வீரர் செல்வராசு நம்மிடம், அந்தப் பள்ளியில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாமே மர்மம் நிறைந்ததாக உள்ளது. பள்ளியிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. அங்கிருந்து வந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பற்றிய தகவல் காலை முதல் மாலை வரை அந்தப் பள்ளிக்கு தெரியவில்லை என்கிறார்கள். மேலும் இந்தப் பள்ளியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேகா தற்கொலை செய்துகொள்ள புறப்பட்டுச் செல்லும் போது அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும். அதையெல்லாம் வெளியே  காட்ட மறுக்கிறார்கள். இந்தப் பள்ளியில் படித்த மாணவிகள் சுமார் நான்கு பேர் இதே போன்று தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் ஒரு மாணவி திருமழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு மாணவி மாடியில் இருந்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளார். இதனால் இந்தப் பள்ளியில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பள்ளி நிர்வாகம் எந்தத் தகவல் கேட்டாலும் கூறுவதற்கு மறுக்கிறார்கள். பெண் பிள்ளைகள் படிக்கும் ஒரு கிறிஸ்தவ நிறுவனம் இப்படிப்பட்ட அவலநிலையில் இருக்கிறது. எனவே தான் ரேகாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடினோம். போலீசார் ஒருவாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேகாவின் மரணம் மிகவும் மர்மம் நிறைந்ததாக உள்ளது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாவது உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்கிறார்.


 

 

ரேகா மரணம் பற்றி அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய விடுதி வார்டன் திராவிடச் செல்வி, மாணவி ரேகா மரணம் பள்ளியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பள்ளி நல்ல முறையில் இயங்கி வருகிறது. மாணவி தற்கொலை என்பது அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக நடந்துள்ளதாக தெரியவருகிறது. அவர் எழுதி வைத்த கடிதம் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். அதிலுள்ள விபரத்தை நாங்கள் படிக்கவில்லை. மேலும் எங்கள் பள்ளியில் படித்த மாணவிகள் மரணமடைந்ததாக கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அதில் ஒரு மாணவி அவரது சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு எங்கள் பள்ளி நிர்வாகம் எப்படி பொறுப்பாக முடியும். பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் குரங்குகளால் தூக்கி எறியப்பட்டு நாசமாகியுள்ளது. அதை சீர் செய்வது கொஞ்சம் காலதாமதம் ஆகியுள்ளது. மற்றபடி எங்கள் பள்ளி மக்களிடம் நல்ல பெயர் எடுத்து வருகிறது. மாணவி ரேகாவின் மரணம் எல்லோருக்கும் வேதனை தரக்கூடியது தான் என்கிறார்.
 

மாணவி ரேகா ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் அவரது மரணம் பற்றி விசாரித்து வரும் திருச்சி ரயில்வே போலீசாரிடம் கேட்டோம். மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அவரது மரணத்திற்கான காரணம் பற்றிதீவிர  விசாரணை செய்து வருகிறோம். விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. முழு விசாரணை நடத்தி முடித்த பிறகு ரேகாவின் மரணத்திற்கான காரணம் பற்றி தெரிவிக்கப்படும் என்கிறது ரயில்வே போலீஸ்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்