
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
அதாவது 9 இடங்களில் இலக்குகள் குறிவைத்து துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது ஆயுதப் படைகளை (ராணுவம்) நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய் ஹிந்த்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக இந்தியா ஒரு உறுதியான தேசியக் கொள்கையைக் கொண்டுள்ளது. அங்குள்ள பயங்கரவாத முகாம்களை முறியடித்த நமது இந்திய ஆயுதப்படைகளைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் உறுதியான மன உறுதியையும் துணிச்சலையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நாளிலிருந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும் எடுப்பதில் காங்கிரஸ் கட்சி ஆயுதப் படைகள் மற்றும் அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கிறது. தேசிய ஒற்றுமை காலத்தின் தேவை. காங்கிரஸ் கட்சி நமது ஆயுதப் படைகளுடன் துணை நிற்கிறது. நமது தலைவர்கள் கடந்த காலங்களில் பாதையைக் காட்டியுள்ளனர். மேலும் தேசிய நலன் எங்களுக்கு மிக உயர்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.