
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
அதாவது 9 இடங்களில் இலக்குகள் குறிவைத்து துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 3 தீவிரவாத அமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜெய்ஸ் - இ - முகம்மது அமைப்பின் 4 இலக்குகளைக் குறிவைத்து நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதோடு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் - இ - தெய்பாவின் தலைமையகம் உள்ள முரித்கேயில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபராபாத்திலும் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெய்ஸ் - இ- முகமது அமைப்பு செயல்படும் பஹவல்பூர், தெஹ்ரா காலன், கோட்லி உள்ளிட்ட இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல்கோட் பகுதிகளிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கிடையே ரஜோரி மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தரம்சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரில் உள்ள 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவத்தினர் விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற உள்ளது. ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த முப்படை தலைமை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் ஜம்மு - காஷ்மீரில் தற்போதைய சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். அதோடு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் பாகிஸ்தான் எல்லை அருகே இந்திய விமானப்படை விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. அதன்படி ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்திய விமானப்படை ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவத்தினர் நடத்திய அப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு ஜம்மு - காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். “இந்திய ராணுவம் ஜிந்தாபாத், பாரத் மாதா கி ஜெய்” எனப் பொதுமக்கள் முழக்கம் எழுப்பினர்.