
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 9 தீவிரவாத முகாம்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் மூலமாகத் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியா சார்பில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும், இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ள சூழலும் ஏற்பட்டுள்ளது. அதோடு பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வான் பாதுகாப்புப் படை அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பாகிஸ்தானில் 5 இடங்களில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்குத் தக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இந்திய ராணுவம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் காரணமாகப் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.