
தஞ்சையில் பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடைய இரண்டாவது கணவனின் தூண்டுதல் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ளது உதயசூரியபுரம் கிராமம். அங்கு பாஜக முன்னாள் நிர்வாகியான சரண்யா என்பவர் முதல் கணவன் இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது கணவரான பாலன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த சரண்யா, நேற்று இரவு வழக்கம்போல தன்னுடைய கடையை மூடிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் சரண்யாவை கொடூரமாக வெட்டியதோடு அவருடைய தலையை துண்டித்து கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலையில் சரண்யாவின் இரண்டாவது கணவர் பாலனின் முதல் மனைவியின் கபிலன் உள்ளிட்ட மூன்று பேர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது கணவரான பாலன் சம்பவ இடத்திற்கும் வரவில்லை; சரண்யாவின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் வரவில்லை. இதனால் காவல்துறையினருக்கு இந்த கொலையில் இரண்டாவது கணவர் பாலனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட, நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கு மூலக்காரணம் பாலன் என்பது உறுதியாகியுள்ளது.
கொலைக்கான காரணமாக சொல்லப்படுவது உதயசூரியபுரத்தில் பாலன் 43 லட்சம் ரூபாயில் நிலம் ஒன்றை வாங்கி உள்ளார். வாங்கிய நிலத்தை முதல் மனைவியின் மகனான கபிலன் பேரில் பத்திரப் பதிவு செய்துள்ளார். இதற்கு சரண்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பாக இருவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது. சரண்யா இருந்தால் மேலும் பிரச்சனை உருவாகும் என்ற காரணத்தினால் பாலன் தன்னுடைய முதல் மனைவியின் மகன் கபிலனை வைத்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.