Skip to main content

முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும்!

Published on 10/02/2018 | Edited on 10/02/2018
முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும்! 

முதல்வன் படத்தில் முதல்வர் ரகுவரனை செய்தியாளர் அர்ஜுன் பேட்டி எடுப்பார். அப்போது, ஒரு கிடுக்கிப்பிடி கேள்வியில் ரகுவரன் சிக்கிக் கொள்வார். அர்ஜுன் விடாப்பிடியாக தனது கேள்விக்கு பதிலை எதிர்பார்ப்பார். அதற்கு ரகுவரன்...

"இதோ பார், சும்மா மைக்கை பிடிச்சுக்கிட்டு கேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி. நான் இருக்கிற பொசிசனுக்கு வந்து உட்கார்ந்து பாத்தாத்தான் அதோட வலி தெரியும். எத்தனை சதிகள், எத்தனை கோரிக்கைகள், எத்தனை கண்ணீர், எத்தனை ரத்தம்" என்று அடுக்குவார்.

அதுபோலத்தான் மோடியின் வாழ்க்கையும் ஆகிப்போச்சு. பின்னே இல்லையா?



மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ஜிஎஸ்டி என்பது மாநிலங்களுக்கு எதிரானதாக இருந்துச்சு. "என் பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை நிறைவேற்ற முடியும்" என்று ஆவேசமாக சவால் விடுத்தார்.

மோடி முதல்வராக இருக்கும்போது, லோக்பாலுக்காக அன்னா ஹஸாரே உள்ளிட்ட சிலர் கார்ப்பரேட்டுகள் துணையோடு உருவாக்கிய டுபாக்கூர் போராட்டத்தை மோடி ஆதரித்தார். ஆனால், பிரதமராகி 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதுவரை லோக்பால் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. லோக்பாலுக்காக போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவையும் எங்கேயோ ஒளித்து வைத்துக் கொண்டார்கள்.

மோடி முதல்வராக இருந்தபோது, மத்திய அரசின் நேரடி அன்னிய முதலீடுக் கொள்கையை கடுமையாக எதிர்த்தார். பிரதமரானவுடன் ராணுவத்திலும்கூட நேரடி அன்னிய மூலதனத்தை ஆதரிக்கிற லெவலுக்கு, அதாவது தரை ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார்.

மோடி முதல்வராக இருக்கும்போது ஆதார் அட்டையை கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்தார். ஆனால், பிரதமரான பிறகு இறந்துவிட்டால்கூட ஆதார் அவசியம் என்று கட்டாயப்படுத்தத் தொடங்கினார்.

மோடி முதல்வராக இருக்கும்போது காங்கிரஸ் அரசு கொண்டுவந்த கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். பிரதமரான பிறகு அதே திட்டத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்.



மோடி முதல்வராக இருக்கும்போது, மத்திய அரசின் மானியங்களை பயனீட்டாளர்களுக்கு நேரடியாக வழங்குவதை எதிர்த்தார். அவர் பிரதமரானதும் மத்திய அரசின் எல்லா திட்டங்களின் மானியங்கள் மற்றும் பலன்களை வங்கிகள் மூலமாக நேரடியாக பயனீட்டாளர்களுக்கே கொடுக்கத் தொடங்கினார்.

முதல்வராக இருக்கும்போது, பெட்ரோல் விலை உயர்வை கடுமையாக எதிர்த்த மோடி, பிரதமரானதும், பெட்ரோல் விலையை தினமும் உயர்த்துவதை நடைமுறைப் படுத்தினார்.

முதல்வராக இருக்கும்போது நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமரானவுடன் வீழ்ச்சியடைந்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை நன்றாக இருப்பதாக தனக்குத்தானே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்கிறார்.

இதுதான் மோடியின் அசாத்திய திறமை என்கிறார்கள் பாஜகவினர். இதுதான் மோடியின் இரட்டை வேடம் என்று கிண்டல் செய்கிறார்கள் நாட்டு மக்கள்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்