
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதுவரை போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு ஜேஎப்-17 ரகப் போர் விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவால் இணைந்து தயாரிக்கப்பட்டவை என்ற கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. எப்16 ரக விமானம் ஒன்றும் வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் எதிரொலியாக இமாச்சலின் தர்மசாலாவில் பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் ரஜோரியில் பறந்து வந்த இரண்டு ட்ரோன்களை எதிர்த்து நொறுக்கிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் பாகிஸ்தான் உடைய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்து வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், ஜலந்தர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அனைத்து மாவட்டங்களையும் கண்காணிக்க தனித்தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் விமான நிலையம் உச்சபட்ச பாதுகாப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.போர் பதற்றம் நீடித்து வருவதால் புதுடெல்லியில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சியால்கோட், தலைநகரான இஸ்லாமாபாத், மற்றும் லாகூர் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதலை தொடங்கியுள்ளது. பதில் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் வசித்து வரும் மக்கள் பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்; அச்சப்பட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் இழப்புகள் எதுவும் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் வீட்டின் அருகேயும், பாகிஸ்தானின் ராணுவ தளபதி முனீர் வீட்டு அருகேயும் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல இந்தியாவில் ஸ்ரீ கங்காநகரில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவில் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சிம்லா, லூதியானா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மூன்று நாட்களுக்கு மூட பஞ்சாப் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மே பத்தாம் தேதி வரை ஜம்முவில் பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் பதற்றத்தால் இரு நாட்டிற்கும் உறங்கா இரவானது இந்நாள்(மே 08/ 2025)