
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது லட்சுமணன். இவரது மனைவி ருக்மனி பாய். இவர்களது வீட்டில் இருந்து கடந்த 1 வாரமாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைஅறிந்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்த போது, லட்சுமணனின் வீடு பூட்டப்பட்டிருந்தது. உடனே, அவரது வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, அங்கு லட்சுமணன் கட்டிலில் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், லட்சுமணனின் மனைவியை தேடியுள்ளனர். அப்போது, வீட்டு வளாகத்தில் பெண்ணின் கை தரையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, அந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அதில் ருக்மணியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இருவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், லட்சுமணன் தனது மனைவி ருக்மணியை கொலை செய்து விட்டு வீட்டு வளாகத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் உட்கொண்டு லட்சுமணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மனைவியின் உடலை முறையாக புதைக்கப்படாததால் துர்நாற்றம் வீசியுள்ளது என்பது மேலும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.