
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று(07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதுவரை போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு ஜேஎப்-17 ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவால் இணைந்து தயாரிக்கப்பட்டவை என்ற கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. எப்16 ரக விமானம் ஒன்றும் வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் எதிரொலியாக இமாச்சலின் தர்மசாலாவில் பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் ரஜோரியில் பறந்து வந்த இரண்டு ட்ரோன்களை எதிர்த்து நொறுக்கிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் பாகிஸ்தான் உடைய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்து வருகிறது. பாகிஸ்தானின் ஒரு ஏவுகணை, ட்ரோன் கூட இந்திய மண்ணில் விழவில்லை என தெரிவித்துள்ளது இந்திய விமானப்படை.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், ஜலந்தர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அனைத்து மாவட்டங்களையும் கண்காணிக்க தனித்தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் விமானநிலையம் உச்சபட்ச பாதுகாப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவின் இல்லத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. போர் பதற்றம் நீடித்து வருவதால் புதுடெல்லியில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.