Skip to main content

போங்கப்பா, நீங்களும் ஒங்க பஸ்சும்!

Published on 09/02/2018 | Edited on 09/02/2018
போங்கப்பா, நீங்களும் ஒங்க பஸ்சும்! 

ஒரே வாரத்தில் 8 லட்சம் பேர் பஸ்சை கைவிட்டு மின்சார ரயிலுக்கு மாறியிருக்காங்கன்னா அரசு கொஞ்சமாச்சும் அவுங்க கஷ்டத்தை புரிஞ்சுக்க வேணாமா.

சும்மா இல்லங்க, ஒரே வாரத்துல புறநகர் ரயில் போக்குவரத்துக்கு 2 கோடி ரூபாய் அதிகமா வருவாய் கிடைச்சிருக்கு. அப்படின்னா, பேருந்து போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு நஷ்டம்னு யூகிச்சு பாருங்க. 



இந்தக் கணக்கு ஜனவரி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான 7 நாட்கள் மட்டும்தான். அப்படியானால், இன்னமும் பேருந்து போக்குவரத்துக்கு மக்கள் மாறவில்லையா? 

நிச்சயமாக மாறமாட்டார்கள். மாதாந்திர சேமிப்பை, அல்லது செலவை ஈடுகட்ட மக்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்கள். தி.நகரிலிருந்து தாம்பரத்திற்கு பேருந்தில் போய்வர பேருந்துக் கட்டணம் 40 முதல் 50 ரூபாய் வரை ஆகிறது. இதுவே ரயிலில் வெறும் 10 ரூபாய் மட்டுமே போதும்.. சேமிப்போடு, விரைவாகவும் போய் வரமுடிகிறது என்கிறார் ஒரு பயணி. 

சில பயணிகள் மூன்று பஸ்கள் மாறி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் இப்போது புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சைக்கிள் பயணமே அவர்களுக்கு எளிதாக இருப்பதாக உணரத் தொடங்கியுள்ளனர். 



சென்னை மாநகராட்சியும் சில உருப்படியான யோசனைகளை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்கிறார்கள். முக்கியமான மையங்களில் சைக்கிள் பரிமாற்றங்களுக்கு டென்டர் கோரியிருக்கிறது. முதல்கட்டமாக தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மையங்களை குறிவைத்து 5 ஆயிரம் சைக்கிள்களை இயக்க டென்டர் கோரியிருக்கிறது. இந்த சைக்கிள்களை மாநகராட்சிக்குள் 400 இடங்களில் நிறுத்தியும் திரும்ப எடுத்தும் பயணிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள். 

இது இப்படி இருக்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், விரைவில் பயணிகள் பேருந்துக்கு திரும்ப வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். பயணிகள் வசதிக்காக சாதாரண பேருந்துகளை அதிகமாக இயக்கப்போவதாக அவர்கள் கூறினர். 

எது எப்படியோ, பயணிகள் சைக்கிளையும் ரயிலையும் தேர்வு செய்யத் தொடங்கிவிட்ட நிலையில், மீண்டும் மாநகர ஓட்டை உடைசல் பஸ்களுக்கு டிக்கெட் தெண்டம் கட்ட தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தி விட்டார்கள் என்றே தெரிகிறது.

- ஆதனூர் சோழன்
(ஆதாரம் - தி ஹிண்டு)

சார்ந்த செய்திகள்