Skip to main content

முக்குலத்தோருக்கு தினகரன் அத்தாரிட்டியா?

Published on 06/01/2018 | Edited on 06/01/2018
முக்குலத்தோருக்கு தினகரன் அத்தாரிட்டியா?
குமுறுகிறார் அதிமுக பிரமுகர்!

இன்று மதுரை வந்தார் டிடிவி தினகரன். செய்தியாளர்கள் சந்திப்பில் ”சுயேச்சை வேட்பாளரை தோற்கடிப்பதற்கு ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.6000 கொடுத்தது எடப்பாடி அரசு..” என்று ‘நியாயம்’ பேசினார். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை குறித்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தினகரன் பிரஸ் மீட்டை முடித்துச் சென்றவுடன், அதிமுக பிரமுகர் ஒருவரிடமிருந்து நமக்கு அழைப்பு வந்தது. அவரைச் சந்தித்த இடத்தில் வால்போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.  

‘இன்று MLA நாளை CM’ 



தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் பின்னணியில், டிடிவி தினகரன் வெற்றி மாலையோடு, கெத்தாக நடந்து வரும் வால்போஸ்டர் அது. அதைப் பார்த்துப் புன்னகைத்தார் அவர். எந்த அணியிலும் சேராமல் அமைதி காத்து வரும் அவரது சிரிப்பில் அர்த்தம் பொதிந்திருந்தது. முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த அவருக்கு சென்னை, டெல்லி வரையிலான உயர்மட்டத் தொடர்புகள் இப்போதும் உண்டு. எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பொது நீதியை விட்டுக்கொடுக்காமல் பேசுவார். தலைவர்கள் செய்தது தவறென்று தன் மனதுக்குப் பட்டால், காந்தியிலிருந்து ஜெயலலிதா வரைக்கும் கடும் விமர்சனத்தை முன்வைப்பார். இந்த குணத்தாலேயே, அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போனது. அவர் நம்மை அழைத்துப் பேசிய இடத்தில்தான் அந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.  “கொஞ்சம் உண்மை பேசட்டுமா?” என்று ஆரம்பித்தார்.

பிற சமுதாயத்தவர் வெறுக்கக்கூடும்!



“ஆர்.கே. நகரில் தினகரனின் வெற்றிக்கு முழு மூச்சாக உழைத்தவர்கள் யார் தெரியுமா? பல தரப்பினரின் பங்களிப்பு இருந்தாலும், எங்களின் முக்குலத்து சமுதாயத்தினரைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தென் மாவட்டங்களிலில் இருந்து சென்னை வந்து களப்பணி ஆற்றினார்கள். அதனால்தான்,  தினகரனின் வெற்றியில் அதிக பெருமிதம் கொள்பவர்களும் அவர்களாகவே இருக்கிறார்கள். இதனை மேலோட்டமாகப் பார்த்தால், ‘அதனாலென்ன?’ என்று சொல்லத் தோன்றும். அதே நேரத்தில், முக்குலத்தோரில் சிலர், ‘கூட்டிக் கழித்துப் பாருங்கள் தமிழகத்தில் புத்திக்கூர்மையான தலைவர் என்றால் அது தினகரன்தான். அவர் நம்ம சாதிக்காரர்தான். ஓ.பி.எஸ். இவரளவுக்கு இல்லை. அதனால், நாம் ஆதரிக்க வேண்டியது தினகரனைத்தான்.’ என்று சாதி ரீதியாகப் பேசி வருவதை ஆரோக்கியமான அரசியாலாகப் பார்க்க முடியாது. ஆர்.கே. நகரில் தினகரனுக்கு ஓட்டு விழுந்ததை அரசியல் கணக்கில் சேர்க்கவே முடியாது.  சாதி அடிப்படையில், தினகரன் பின்னால் முக்குலத்தோர் திரண்டிருக்கும் இந்த ஒற்றுமையே, பிற சமூகத்தவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிடும். பிறகெப்படி தமிழ்நாட்டை தினகரனால் ஆள முடியும்? 

மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர்!



நல்லதொரு அரசியல் பின்னணி இல்லாத தினகரனைப் போய், தமிழகத்தின் தலைவர் ஆக்கிவிட ஆசைப்படுகிறார்கள். சசிகலா குடும்பத்தினர் முறைகேடாக சம்பாதித்த கோடான கோடிகளை வாரியிறைத்து, ஆர்.கே. நகரில் பெற்ற வெற்றியை வைத்து, தினகரன் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிட முயற்சிக்கிறார்கள். வழக்குகளில் சிக்கி சிறைக்குச் செல்லவிருக்கும் தினகரன் எப்படி தமிழகத்தின் முதல்வராக முடியும்? ஆர்.கே. நகர் பாணியில், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்பது அநியாயத்துக்குப் பேராசை இல்லையா? சாதிப்பாசமோ என்னவோ,  காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தினகரனைப் புகழ்ந்து தள்ளுகிறார். சசிகலா புஷ்பா வகையறாக்கள் ஓடோடிச் சென்று ஒட்டிக்கொள்கிறார்கள். ஊடகங்களில் சில, நேரடியாகவும், மறைமுகமாகவும் தினகரனை ஆதரிக்கும் நிலையை எடுத்துவிட்டன. அவரை ப்ரமோட் செய்யும் விதமாக, நிகழ்ச்சிகள் என்ற பெயரில் காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. தமிழகத்தில் இத்தனையும் நடந்து இந்த நேரத்தில், சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா எப்படி நடத்தி வந்தார் என்பதை சாதிரீதியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

சசிகலா குறித்து ஜெயலலிதா அடித்த கமெண்ட்!

2003-இல் கந்துவட்டிக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதற்கு பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டார் அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்த வழக்கறிஞர் ஜோதி. அப்போது சசிகலாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஜெயலலிதா என்ன கமெண்ட் அடித்தார் தெரியுமா? ‘தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி தடுப்புச் சட்டம் கொண்டு வருவதில் எனக்கும் உடன்பாடுதான். இதோ இருக்கிறாரே சசிகலா. இவரது குடும்பத்தினரும் இவரது சமுதாயத்தினரில் சிலரும்தான் தமிழகம் முழுவதும் பெருமளவில் வட்டித்தொழிலை மிரட்டலாகப் பண்ணி வருகிறார்கள். இந்தச் சட்டத்தைக் கடுமையாக்கும்போது பிரச்சனைக்கு ஆளாகப்போவது இத்தகையவர்கள்தான்..’ என்று சசிகலா முகத்துக்கு நேராகவே சொன்னார். 

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன. ஒரு தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 10 பேரையாவது பெயர் சொல்லி அழைக்கும் விதத்தில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டாமா? அப்படி இருந்தால்தானே, கட்சி நிலவரத்தையும், தமிழக மக்களின் கஷ்டங்களையும் தலைவரிடம் கட்சிக்காரர்கள் எடுத்துச் சொல்ல முடியும். ஜெயலலிதா யார் யாரைத் தெரிந்து வைத்திருந்தார்? சசிகலா, அவரது சகோதரர்கள் திவாகரன், வினோதகன், ஜெயராமன், சுந்தரவதனம், வனிதாமணி, அப்புறம் இளவரசி, தினகரன், டாக்டர்கள் வெங்கடேஷ், சிவகுமார், இந்த விவேக், ஜெய் ஆனந்த் போன்ற சசிகலாவின் சொந்தபந்தங்களான 27 குடும்பத்தினருடன் மட்டுமே அதிக அளவில் தொடர்பில் இருந்தார் ஜெயலலிதா. இந்த வட்டத்தை விட்டு அவர் வெளிவராதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டார் சசிகலா. ‘அவரு ரொம்ப மோசம்க்கா.. இவரு அவரைவிட ரொம்ப மோசம்க்கா..’ என்று போட்டுக்கொடுத்தே, மற்றவர்கள் யாரையும் நெருங்கவிடவில்லை. அழுக்கு உடை உடுத்தியிருப்பவர்களிடம் வலியச் சென்று அன்பைப் பொழிவார் எம்.ஜி.ஆர். அப்படி எதுவும் நடந்துவிடாமல் ஜெயலலிதாவைப் பார்த்துக்கொண்டார் சசிகலா. 

ஆதாயத்துக்காகவே ஆதரிக்கிறார்கள்!



வெற்றி வேல்! வீர வேல்! என வேல் கம்பைத் தூக்கிக்கொண்டு இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி உயிரை விட்டிருக்கிறார்கள் வீர மறவர்கள். வீர மருதிருவர் போன்றவர்களை நாட்டுக்கு அர்ப்பணித்த சமுதாயம் இது. இப்போதும், தெய்வ பக்தியும், நல்லொழுக்கமும் உடைய அனேகம்பேர் எங்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள். சசிகலா போன்றவர்கள் வெகுசிலர்தான். அதனால், நியாய உணர்வு நிரம்பப் பெற்ற எங்கள் மக்களில் பெரும்பாலானோர், சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் நல்லவிதமாகப் பார்க்கவில்லை. ஆனாலும், சாதிப்பாசம் என்ற பெயரில்,  முக்குலத்தோரில் சிலரைத் தன்வசப்படுத்திவிட்டார் தினகரன். அவர்களும்  ‘நாமும் அரசியல் பண்ணவேண்டுமே’ என்று ஆதாயத்துக்காக, அவர் பின்னால் சுற்றித் திரிகிறார்கள். 

தினகரன் ஏன் விரட்டப்பட்டார்? 

ஆந்திர அரசியலில் அத்தனை செல்வாக்கோடு இருந்த என்.டி. ராமராவ் விஷயத்தில் என்ன நடந்தது? சந்திரபாபு நாயுடுவால் தெலுங்கு தேசம் கட்சி உடைந்தது. என்.டி. ராமராவின் ஆட்சியும் கவிழ்ந்தது.  சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகவும் முடிந்தது. இதுபோன்ற ஒரு நிலைமை தனக்கும் வந்துவிடக் கூடாது என்ற பயம் ஜெயலலிதாவுக்கு எப்போதும் இருந்தது. அதனால்தான், அவ்வப்போது படுவிவரமாக நடந்துகொள்வார் ஜெயலலிதா. சசிகலாவின் கணவர் நடராஜன் எப்பேர்ப்பட்டவர் என்பதை அறிந்ததனாலேயே, தன்னை அண்டவிடாமல் முற்றிலும் விலக்கி வைத்திருந்தார். அரசியலில் தினகரனின் காய் நகர்த்தல்களைத் தெரிந்துகொண்டு, போயஸ் கார்டன் பக்கம் அவர் தலைகாட்டாதவாறு பார்த்துக்கொண்டார். 

விஸ்வரூப கனவு!

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழானது. கட்சியில் கட்டுப்பாடு என்பதே இல்லாமல் போனது. தமிழகத்தின் முதலமைச்சராகத் துடித்தார் சசிகலா. காலம் அவரை சிறையில் தள்ளியது. ’வெறும் நடிப்புத்தான்; விசுவாசம் அறவே இல்லை’ என்று ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் நாற்காலியில் இருந்து இறக்கிவிட்டு, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா குடும்பம். எடப்பாடியோ எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். தர்மயுத்தம் என்ற பெயரில் குடைச்சல் கொடுத்து வந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியை விட்டெறிந்து, அவரது இமேஜை நொறுக்கிவிட்டார். ஓ.பி.எஸ்.ஸும் முக்குலத்தோர்தான். ஆனாலும், அவரைத் தங்களில் ஒருவராக எங்கள் சமுதாயத்தவரில் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் – அவரது சுயநலம்தான். இந்த நிலையில்தான், தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுத்துவிடலாம் என்று கனவு காணத் தொடங்கியிருக்கிறார் தினகரன். ஜெயலலிதாவை வேண்டுமானால் தங்கள் இஷ்டத்துக்கு சசிகலா குடும்பத்தினர் ஆட்டி வைத்திருக்கலாம். அதே பாணி அரசியலை தமிழக மக்களிடமும் காட்ட முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.” என்று பெருமூச்சுவிட்டார் அந்த அதிமுக பிரமுகர். 



எங்கு சென்றாலும் அவர் பின்னால் ஒரு கூட்டம்! பணபலத்துடன், ரொம்பவும் தில்லாகவே அரசியல் பண்ணுகிறார் தினகரன்!

-சி.என். இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்