Skip to main content

சென்னையில் மெட்ராஸ் ! The Casteless Collective !!

Published on 09/01/2018 | Edited on 09/01/2018
சென்னையில் மெட்ராஸ் ! The Casteless Collective !!

சாதியற்றவர்களின் சங்கமம் 





சென்னைக்கு கச்சேரிகள் புதிதல்ல. இசை நிகழ்ச்சியும் புதிதல்ல. மார்கழி மாதத்தில் வரிசைகட்டும் கச்சேரிகள், சென்னையில் திருவையாறு, இசையமைப்பாளர்கள், பாடகர்களின் இசை விழாக்கள் என எத்தனையோ விழாக்களை சென்னை பார்த்திருக்கிறது. பிறகென்ன தனிச்சிறப்பு இந்த இசைநிகழ்ச்சியில்? இருக்கிறது. இது சென்னையின் அடிநாதமான இசையின் எழுச்சி. நசுக்கப்பட்ட குரல்களின் உற்சாகக்  கூச்சல். அடிமை விலங்குகளை தகர்க்கும் போராட்டத்தின் இசை வடிவம்.

'ரெபெல்ஸ்' (Rebels) என்றழைக்கப்படும் போராளிகளுக்கு பல்வேறு போராட்ட வடிவங்கள் உண்டு, இசையையும் சேர்த்து. அப்படியான இசை வடிவங்களாகிய ராக், ரேப் உள்ளிட்டவையோடு நமது தெருக்களின் இசையாகிய கானா இசையையும் சேர்த்து ஒரு புதுவித இசை அனுபவத்தை தந்த நிகழ்ச்சி தான் 'தி கேஸ்ட்லெஸ் கலக்ட்டிவ்'  (The Casteless Collective).




இட ஒதுக்கீடு, ஆணவக் கொலைகள், மீனவர் கொலைகள், விவசாயிகள் பிரச்சினை, மாட்டுக்கறி, சென்னையின் அடையாளங்கள், சேரிகளை பற்றிய பொதுப்புத்தி, சாதிய பாகுபாடுகள் என நம் அடிப்படையான பிரச்சினைகளை வைத்தே அத்தனை பாடல்களும் இயற்றப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அனைத்து பாடல்களிலும் அம்பேத்கரும் பெரியாரும் அங்கம் வகித்தனர்.

பாடிய அனைவரும் இத்தனை பெரிய மேடையை இதுவரை பார்க்காதவர்கள். சிலர் சுயாதீன இசைக்கலைஞர்கள். சிலர், சாவில் இசைப்பவர்கள். அத்தனை பேரையும் இணைத்து இந்த மிகமுக்கிய நிகழ்வை ஒருங்கிணைத்தது இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் மெட்ராஸ் ரெக்கார்ஸ். மும்பை தாராவியில் இருந்து வந்து இசைத்தவர்களும் இதில் உண்டு.




இதுநாள் வரையில் இரயிலிலும் பேருந்திலும் குத்துப்பாட்டு பாடிக்கொண்டும் சினிமா பாடல்களை உல்டா  செய்து பெண்களை கிண்டலடித்துக் கொண்டும் பாடுவார்கள் என்று மட்டுமே உலகம் நினைத்துக்கொண்டிருந்த இந்த இளைஞர்கள் அந்த மேடையில் நிகழ்த்தியது அசுரப்பாய்ச்சல். பலநாட்களாய் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு திரவம், நீண்ட நேர குலுக்கலுக்குப் பிறகு வெளிப்பட்டால் எத்தனை வீரியமாய் பீய்ச்சி அடிக்கும்... அப்படியிருந்தது இவர்களின் ஆனந்தத் தாண்டவம்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இறுதியாக பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், ‘கலை என்பது மக்களுக்கானது. மக்களை அரசியல்படுத்த அதை பயன்படுத்த வேண்டும். மக்களை அரசியல்படுத்த வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் பாதையில் பயணிப்போம்’ என்று சுருக்கமாக ஆனால் தீர்க்கமாக பேசிமுடித்தார்.




எதிர்பார்த்ததை விட வந்துகுவிந்த கட்டுக்கடங்காத கூட்டம், அம்பேத்கர் பெயரை சொன்னதும் எழுந்த விண்ணைப் பிளக்கும் சத்தம், இட ஒதுக்கீடு, சாதி குறித்த சாட்டையடி வரிகளுக்கு கிடைத்த வரவேற்பு, சாவுக்கு வாசிச்சுட்டு இருந்தேன், இவ்ளோ பெரிய மேடைய இப்பதான் பாக்குறோம் என்று சந்தோஷத்தில் கண்கலங்கிய இளைஞர்கள், இறுதியில் மொத்த கூட்டமும் ஆடிய ஆட்டம், தன்னெழுச்சியாக ஜெய்பீம் என்று ஒருசேர கோஷமிட்ட கூட்டம்… என இது இத்தனை நாள் சென்னை பார்க்காத, கேட்காத இசை இது. சென்னை பார்க்காத மெட்ராஸின் இசை.

நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் இரண்டு வரிகள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன… அந்த வரிகள்…

‘ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே…

சாதிகள் இல்லை வெல்வோமே….’

-    ஜெயச்சந்திர ஹாஷ்மி

சார்ந்த செய்திகள்