Skip to main content

ஆளுகிறான் தமிழன்!

Published on 15/01/2018 | Edited on 15/01/2018
ஆளுகிறான் தமிழன்!

உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்  

தமிழர் திருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பிரிட்டன் பிரதமர் வணக்கம் சொல்லி பொங்கலுக்கு வாழ்த்துகிறார். கனடா பிரதமர் பொங்கல் கொண்டாடுகிறார்.  தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்று ஒருபுறமும், தமிழரென்பதன் வரையறை என்ன என்பதைப் பற்றி ஒருபுறமும் விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் தமிழனென்றால் இதை பகிருங்கள் என்று 'வாட்ஸ்-அப்' செய்திகள் பரவிக்கொண்டேயிருக்கின்றன. இப்படி தமிழ்நாட்டில் தமிழராட்சி பற்றிய பேச்சுகள் நிலவும் நிலையில், உலகத்தின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் கல்வியிலும் சிறந்து, அங்குள்ள அதிகாரமிக்க பதவிகளிலும் இருக்கின்றனர். உலக நாடுகளில்  தமிழின்  அடையாளமாகவும்  பெருமையாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். அப்படியிருப்பவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம்.     

ராஜ ராஜேஸ்வரி - நியூயார்க், அமெரிக்கா  




தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலிருந்தும்  அமெரிக்காவுக்கு  ஐ.டி பணிக்கு  சென்றிருக்கிறார்கள். டிரம்ப் எப்பொழுது திருப்பி அனுப்புவார் என்ற பீதியில் பலரும் இருக்கிறார்கள்.  ஆனால், சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியூயார்க் நகர குற்றவியல்  நீதிபதியாக உள்ளார் 2015ஆம் ஆண்டு இவர் பதவியேற்ற போது,  அப்பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண்மணியாக திகழ்ந்தார். தனது 16 வயதில் அமெரிக்காவிற்கு குடியேறினார். பின்னர் ரிச்மாண்ட் மாகான மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய  இவரின் வாதாடும் திறமையால் குழந்தைகளுக்கு எதிரான  வன்முறை மற்றும் குடும்ப வன்முறை  பிரச்சனைகளில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கி தந்துள்ளார். இவரின் திறமை வழக்கறிஞராக மட்டும் இல்லாமல் அமெரிக்காவில் நடைபெறும் இந்தியா கலாச்சார நிகழ்வுகளில் பரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞராகவும் வெளிப்படுகிறது. தன் குழுவினரிடம் இவர் செய்யும்  நடன  அரங்கேற்றம் அங்கு புகழ் பெற்றது. 

மோசஸ்  வீராசாமி நாகமுத்து - கயானா 




தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர் மோசஸ்  வீராசாமி நாகமுத்து. கயானாவில் பெர்பிஸ் பகுதியில் பிறந்தவர் ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டு அங்குள்ள  மக்கள் முன்னேற்றக் கட்சியில் இணைந்து 1992ஆம் ஆண்டு அக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு கயானா நாடாளுமன்றத்துக்குத் தேர்த்தேடுக்கப்பட்டார். பின்னர்  அமைச்சராகவும் பதவிவகித்த இவர், பின்னர் இந்த கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியில்  இணைந்தபோதும், மீண்டும் நாடாளுமன்றத்திற்குத்  தேர்ந்தேடுக்கப்பட்டார். 2015ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கயானாவின் பிரதமராகவும் ஆனார். 

செல்லப்பன் ராமநாதன் - சிங்கப்பூர் 




எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும்  செல்லப்பன் ராமநாதன் சிங்கப்பூரில், ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குப்  பள்ளியில் நண்பர்கள் அதிகம். அதில் சீனர்களும், மலாய்க்காரர்களும் தான் அதிகம் அவர்களுக்காக தன் பெயரை எஸ்.ஆர்.நாதன் என்று சுருக்கிக்கொண்டார். 1954 ஆம் ஆண்டு மலாயா பல்கலைகழகத்தில் சமூகவியல் படித்த இவர், சிங்கப்பூரின் பல உயரிய பதவிகளை வகித்தார். அமெரிக்காவுக்கான  சிங்கப்பூரின்  தூதராகவும் இருந்தார். 1999 முதல் ஆகஸ்ட் 2011 வரை 12 ஆண்டுகள் சிங்கப்பூர் ஜனாதிபதியாக இருந்துள்ளார். தொடர்ந்து  இருமுறை ஜனாதிபதியாக இருந்த பெருமைக்குரியவர். 2012ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பிரவாசி பாரதீய சம்மான் (வெளிநாட்டு இந்தியருக்கான விருது) விருதை வழங்கி கௌரவித்தது. 2016ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. இன்றும் சிங்கப்பூர் மக்களின் மனதில் நல்ல தலைவராக வாழ்ந்து  வருகிறார். 

ராதிகா சிற்பேசன் - கனடா 




இலங்கை யாழ்ப்பாணத்தில்  பிறந்த இவருக்கு ஐந்து வயதான போது இவர்களின் குடும்பம் கனடாவுக்கு  குடிபெயர்ந்தது. 2004ஆம் ஆண்டு ராதிகா புதிய ஜனநாயகக்  கட்சியில் இணைந்து அரசியலை ஆரம்பித்தார். பின்னர் ஸ்கார்பரோ தொகுதியில் நின்று கனடா பாராளுமன்ற உறுப்பினராக தேர்தந்தேடுக்கப்பட்டார். 2011 முதல் 2015 வரை பதவி வகித்த இவர், தனது பதவிகாலத்தில் ஒரு முறை இலங்கை சென்ற போது, அங்கு தன்னை இலங்கை அதிகாரிகள் பின்தொடர்ந்ததாகவும், அங்கு தனக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாகவும் கூறியதால், பரபரப்பேற்பட்டது. இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க வலியுறுத்த கனடாவின் முக்கிய அரசியல்வாதிகளை ஒருங்கிணைக்க முயன்றார் ராதிகா. தற்போது இவர் பதவியில் இல்லையென்றாலும் சமூக பணிகளைத் தொடர்கிறார்.   

இவர்களைப் போல உலகம் முழுவதும் பல நாடுகளில் தமிழர்கள் அதிகாரமிக்க பதவிகளிலும் அரசியலிலும் இருக்கின்றனர். தமிழர்களின் பெருமை யாரும் மறுக்க முடியாதது, ஆனால், அது தொடர்வது சாதிகளில் இல்லை, சாதனைகளில் தான் இருக்கிறது, சமூக ஊடகங்களில் பேசுவதில் மட்டுமில்லை, சமூக செயல்பாடுகளில் தான் இருக்கிறது.

ஹரிஹரசுதன்  
  


சார்ந்த செய்திகள்