நீதித்துறையில் மோதல் வெடித்தது ஏன்?
இந்திய நீதித்துறை மீது எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிராமணர்களுக்கு தண்டனை இல்லை என்ற வர்ணாசிரம கோட்பாட்டை இந்திய நீதித்துறையும் பின்பற்றுவதாக கூறப்படுவதுண்டு.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக 8 ஆண்டுகள் பணியாற்றிய நீதிபதி கர்ணன் மேற்குவங்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்ணன் உச்சநீதிமன்ற பணியிட மாற்றத்துக்கு தானே தடைவிதித்தார். உடனே, அவருடைய தடை உத்தரவை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. அவருக்கு வழக்குகளை விசாரிக்கவும் தடைவிதித்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமருக்கும், உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதிக்கும் அனுப்பி வைத்தார்.
இந்த விவகாரத்தில் நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது. அந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தனக்காக ஆஜராகி வாதாடினார். முடிவில் அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கியது.

இந்நிலையில், இன்று திடீரென்று உச்சநீதிமன்றத்தின் நீபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகுர், குரியன் ஜோஸப் ஆகியோர், இந்திய வரலாற்றில் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
இவர்களில் தலைமை நீதிபதியின் கொல்லேஜியம் உறுப்பினர்களாக இருப்பவர்களும் உள்ளனர். எனவே, இந்த நிகழ்வு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்த பின்னர் மேலும் இரண்டு நீதிபதிகள் அவர்களுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற நிர்வாகம் சீர்கெட்டிருப்பதாகவும், தலைமை நீதபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகளிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்குகளை பிரித்துக் கொடுப்பதில் இவர் விருப்பு வெறுப்புடன் நடந்துகொள்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு தாங்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். தற்போது 25 நீதிபதிகள் பணியில் உள்ளனர். நீதிபதிகளின் இந்தக் குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இவர்களுடைய பேட்டியைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் பரபரப்பானார். பிரதமரைச் சந்திக்க விரைந்தார்.
இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா என்ற பெண் வழக்கறிஞரை கொல்லேஜியம் நியமித்தது. இவருடைய நியமனம் ஏற்கப்பட்டால், நான்கு ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்ற முடியும். ஏற்கெனவே இந்தியா முழுவதும் பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சீனியாரிட்டி வரிசையில் இருக்கும்போது, வழக்கறிஞராக பணியில் இருப்பவரை எப்படி நீதிபதியாக நியமிக்கலாம் என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே நீதிபதிகளின் இந்த போருக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நீதிபதிகளை தேர்வு செய்யும் கொல்லேஜியம் அமைப்பில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் இரண்டு நீதிபதிகளும், சட்டத்துறை அமைச்சர், மற்றும் பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பரிந்துரைப்படி நியமிக்கப்படும் இரண்டு முக்கிய பிரமுகர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின அல்லது பிற்படுத்தப்பட்டவராக இருப்பார். ஒருவர் பெண்ணாக இருப்பார்.
ஆக, இந்து மல்கோத்ரா நியமனம்தான் நீதிபதிகளின் எதிர்ப்புக்கு காரணமா என்பது இனிதான் தெரியும்...
- ஆதனூர் சோழன்