Skip to main content

மனிதர்களால் "தூண்டப்பட்ட" நிலநடுக்கங்கள்!

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
மனிதர்களால் "தூண்டப்பட்ட" நிலநடுக்கங்களும்,
அருகில் நெருங்கும் ஊழிக்காலமும்!

டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலஅதிர்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மையத்தின் சமீபத்திய "தகவல் தொகுப்பு" (Seismological research letters) அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுவரை கடந்த 140 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், 730 நிலநடுக்கங்கள் மனித செயல்களால் தூண்டப்பட்டவை என்கிறது அந்த அறிக்கை. அதுவும் குறிப்பாக 37 சதவீத நிலநடுக்கங்கள் "சுரங்கம்" சார்ந்த பணிகளால் தூண்டப்பட்டவை என்றும், 23 சதவீத நிலநடுக்கங்கள் அணைகளால் தூண்டப்பட்டவை என்கிறது அந்த அறிக்கை. மற்றவற்றிக்கு மனிதர்களின் மற்ற செயல்கள் தான் காரணம் என்றும் சொல்கிறது அந்த அறிக்கை.



நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு மனித செயல்பாடுகள் மட்டும் தான் காரணம் கிடையாது, ஆனால் பல்வேறு நிலஅடுக்க தகடுகளில் ஏற்படும் உராய்வுகளால் அதிகரித்து இருக்கும் நில அழுத்தத்தை மனித செயல்பாடுகள் தூண்டி பேரழிவை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் வந்த தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில், எண்ணெய் துரப்பணி நடைபெறும் இடங்களில் அதிகமான நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை உறுதி செய்யமுடிகிறது என்கிறார் அந்த மையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் புவியற்பியலாளர் வில்சன்.

வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட "நீரியல் கரைசல்" (hydraulic fracturing) முறையில், சிறிய சிறிய பாறைகள் உடைக்கபப்டும் சமயங்களில், அவை நில அதிர்வுகளை தூண்டிவிடுகின்றன, சமீபகாலத்தில் அதிகமாக படிம பாறைகள் உடைக்கப்படுவதால் அதிகமாக அதிர்வுகள் ஏற்படுகின்றன என்றும் சொல்கிறார் வில்சன். முக்கியமாக, ஆழ்துழாய்களுக்கும் பெரிய நிலநடுக்கங்களுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்றாலும், அவை ஏற்கனவே உள்ள "புவியியல் பிளவுகளை" (geological faults) மறுபடியும் உயிர்ப்பிக்கின்றன (re-activation) என்பது இந்த ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

பொதுவாக மனிதர்களின் செயல்களால் ஏற்படும் நிலநடுக்கங்கள் எல்லாம் ரிக்டர் அளவுகோளில் மூன்று அல்லது நான்கு தான் இருக்கும் என்கிற எண்ணமும் இப்போது தகர்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு சீனாவிலுள்ள வெஞ்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.9 ஆக பதிவானது, அவ்வளவு பெரிய நிலநடுக்கத்திற்கு காரணம் சிபிங்க்பூ அணைக்கட்டு தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. சிபிங்க்பூ அணைக்கட்டு, நிலநடுக்கம் ஏற்பட்ட மைய்ய புள்ளியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.



நிலநடுக்க ஆய்வுகளை பதிவு செய்ய ஆரம்பித்த புதிதில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் கண்டறியப்பட்ட போது, வில்சனும் அவருடைய சகாக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள், வானுயர்ந்த கட்டிடங்கள் முதல் அணுகுண்டு சோதனைகள் வரை அனைத்தும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது. நாளைடைவில் நாம் எதைப்பார்த்தும் ஆச்சரியப்பட தேவையிருக்காது, மனிதர்களின் அனேக செயல்கள் பூமிப்பரப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும், அது நிலநடுக்கத்தை தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்.

வரும் காலங்களில், புவிவெப்ப ஆற்றல்களை அதிகளவில் பயன்படுத்தும் போதும், அண்டத்திலுள்ள கார்பனை புவியில் சேமித்துவைப்பதற்கான வேலைகள் நடைபெறும் போதும், பூமிபரப்பின் மீதான மனிதர்களின் தாக்கம் நிச்சயமாக அதிகரிக்கும். இன்னும் சொல்லப்போனால், சுரங்கங்கள் இன்னும் ஆழமாகும், நிலத்தடி நீர் இன்னமும் மிக அதிகமாக பறிமுதல் செய்யப்படும், வானுயர்ந்த கட்டிடங்கள் அதிகமாக கட்டப்படும், இவை அனைத்தும் பூமியின் பரப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இவ்வளவையும் தெரிந்து கொண்டு, டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே ஓஎன்ஜிசி செய்த மோசமான விளைவுகளை பற்றி கவலைப்படாமல் மேலும் மேலும் எண்ணெய் துரப்பணிகளை மேற்கொண்டால், நிச்சயம் காவேரி சமவெளி பகுதி முழுவதும் மண்ணோடு மண்ணாகப் போகும் என்பதில் சந்தேகம் என்ன? எண்ணெய் துரப்பணிகள், கெயில் குழாய் திட்டம், நதி நீர் இணைப்பு திட்டம், அணு உலைகள், அனல் மின் நிலையங்கள் என்று சூழலை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிட்டுவிட்டு, சூழலுக்கு இசைவான திட்டங்கள் நிறைவேற்றினால் தான் இந்த பூமி பந்தில் உயிர்கள் தழைத்து வாழும், இல்லையென்றால் நாம் சந்திக்கப்போவது "ஊழிக்காலம்" தான்.

- சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்)

சார்ந்த செய்திகள்