Skip to main content

அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!

Published on 22/01/2018 | Edited on 22/01/2018
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்! 

ராமாயணத்தில் அனுமனும் அவனுடைய சகாக்களும் ராமருக்காக பாலம் கட்டினார்கள் என்றால் நம்புவோம். ஆனால், குரங்கிலிருந்து மனிதன் உருவாகியிருக்கலாம் என்ற உலகமே ஏற்றுக்கொண்ட டார்வின் கோட்பாட்டை கட்டுக்கதை என்போம் என்றால் அவரை எந்த பட்டியலில் சேர்க்கலாம்.

பாஜகவில் பலவிதமான புதுமையாளர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பெருமளவு உதவியிருக்கக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை வெறும் சுண்ணாம்புப் பாறையை காட்டி நிறுத்தினார்கள். ஆடம்ஸ் பிரிட்ஜ் என்ற அந்த சுண்ணாம்புப் பாறையை ராமர் பாலம் என்று பெயரிட்டு, மிகப்பெரிய கப்பல் போக்குவரத்துத் திட்டத்துக்கே மூடுவிழா நடத்தினார்கள்.



பகுத்தறிவு சார்ந்து எந்த ஒரு விஷயத்தை பேசினாலும், எழுதினாலும் நம்பிக்கை என்ற பேரில் வன்முறையைத் தூண்டுவதற்கான முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபடுவது வாடிக்கையாவிட்டது. இந்நிலையில்தான், அறிவியல்ரீதியாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டார்வின் கோட்பாட்டையே கட்டுக்கதை என்றும், அத்தகைய கருத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.

மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்புடையது. மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன். உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தக்கன பிழைக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி டார்வின் தெரிவித்திருக்கிறார். இந்தக் கோட்பாட்டை தொடக்கத்தில் கேலி செய்தாலும், பின்னர் ஆய்வுகளின் அடிப்படையில் உலகம் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக இருக்கிற சத்யபால் சிங், இந்தக் கோட்பாட்டை கட்டுக்கதை என்று கூறியிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் தோன்றியபோதிருந்தே மனிதன் இப்போது இருப்பதைப்போலத்தான் இருக்கிறான் என்று அவர் கூறியிருக்கிறார். முன்னோர்கள் யாரும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக கூறவே இல்லை என்றும் அவர் பேசியிருக்கிறார்.



இந்து புராணங்களில் நம்பமுடியாத பல கட்டுக்கதைகள் இருந்தாலும் அதைப்பற்றி கேள்வி எழுப்பினால் தங்களுடைய நம்பிக்கையை கேலி செய்வதாகக் கூறி வன்முறையை தூண்டுவது பாஜகவினர், அறிவியல் ஏற்றுக்கொண்ட உண்மையை கேலி செய்திருப்பது எந்தவகையில் சரி என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புராணங்களில், அசுரன் ஒருவன் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் ஒளிந்ததாக கூறப்பட்டிருக்கிறது. பூமியும் கடலும் வேறு வேறு என்பது போல சித்தரிக்கும் இந்த சம்பவத்தை கேட்டால் கடவுள் குற்றம் என்கிறார்கள்.

அழுக்கிலிருந்து விநாயகர் உருவானதாகவும், அவருடைய தலையை சிவன் வெட்டியதாகவும், பின்னர், யானைத் தலையை பொருத்தியதாகவும் ஒரு கதை இருக்கிறது. கிருஷணரும், நாரதரும் கணவன் மனைவியாக வாழ்ந்து 60 குழந்தைகளை பெற்றுக் கொண்டதாகவும் புராணக் கதைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கேள்வி கேட்காத பாஜகவினர் அறிவியல் உண்மைகளை கட்டுக்கதை என்று கூறியிருப்பதை விஞ்ஞானிகள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்