Skip to main content

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் - பெரியாரின் பிடியில் நீதிக்கட்சி!

Published on 28/09/2017 | Edited on 28/09/2017



1937 ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் சைமன் கமிஷன் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போதும் சென்னை மாகாணத்தின் எல்லைகள் அப்படியே இருந்தன.

1935 ஆண்டு இந்திய அரசாங்க சட்டத்தின்படி முந்தைய இரட்டை ஆட்சிமுறை ஒழி்க்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு, நிதிஆகிய முக்கிய துறைகள் தவிர மற்ற பொறுப்புகள் இந்தியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதுமாநில சுயாட்சிமுறை என்று அழைக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின்கீழ்தான் மத்திய நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் 1937 ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது.

சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன. கீழவையிலி 215 இடங்களும் மேலவையில் 54 முதல் 56 உறுப்பினர்களும் இருந்தனர். இவற்றில் கீழவையின் 215 உறுப்பினர்களும், மேலவையின் 46 உறுப்பினர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க சட்டம் வகை செய்திருந்தது.

முஸ்லிம்கள், தலித்துகள், ஐரோப்பியர், பெண்கள், ஜமீன்தார்கள், வணிகர், தொழில் முனைவோர், இந்திய கிறிஸ்தவர்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள், ஆகிய பிரிவினருக்கு வகுப்புவாரியாக ஒதுக்கீடு இருந்தது. இந்தத் தேர்தலிலும் சொத்து மதிப்பு, சொத்து வரி ஆகியவற்றின் அடிப்படையில் வக்குரிமை வழங்கப்பட்டது.

இப்போதும் சென்னை மாகாணத்தில் காங்கிரசும், நீதிக்கட்சியும் மட்டுமே இருந்தன. இரட்டை ஆட்சி முறையின்போது இருந்த சுயராஜ்யகட்சி, புதிய ஆட்சிமுறை அறிமுகமானவுடன் காங்கிரசுன் இணைந்துவிட்டது.

நீதிக்கட்சி அரசு பார்ப்பனர் அல்லாதோர் நலன் சார்ந்த பல சட்டங்களை இயற்றி சாமானிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனாலும் காலப்போக்கில் அந்தக் கட்சி பணக்காரர்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஆதிக்கத்தின் கீழ் சென்றுவிட்டது.

பதவியும், அதிகாரமும் நீதிக்கட்சித் தலைவர்களை ஆட்டிப் படைத்தது. பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு இரையான பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தினர்.

முடிவாக அந்தக் கட்சி சீமான்கள், ஜமீன்தார்கள், அரச பரம்பரையினரின் பிடிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில்தான், சுயமரியாதை இயக்கத்தை மக்கள் ஆதரவுடன் நடத்திவந்த தந்தை பெரியாரின் ஆதரவை நீதிக்கட்சியின் விசுவாசமிக்க தலைவர்கள் நாடினார்கள்.

தந்தை பெரியாரும் குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் நீதிக்கட்சியை ஆதரிக்க முன்வந்தார்.

ஆனாலும், அன்றைக்கு நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பொப்பிலி அரசர் தலைமையிலான நீதிக்கட்சி அரசாங்கத்தின் குளறுபடிகளாலும் மக்கள் வெறுப்படைந்து இருந்தனர். காங்கிரஸ் கட்சி வெள்ளையர் எதிர்ப்பில் தீவிரமாக இருந்தது. விடுதலை உணர்வு மக்கள் மத்தியில் பரவியிருந்தது. காந்தி மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருந்தது. பொப்பிலி அரசர் தலைமையிலான ஆட்சி எப்போது ஒழியும் கிராமங்களில் கிழவிகள்கூட பேசுவதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.



கூர்ம வெங்கடரெட்டி நாயுடு

நீதிக்கட்சி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று அறிந்த அந்தக் கட்சியில் அதுவரை பதவிசுகம் அனுபவித்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். நீதிக்கட்சியைச் சேர்ந்த கூர்ம வெங்கடரெட்டி நாயுடு, வெங்கடகிரி குமாரராஜா போன்றவர்கள் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். நீதிக்கட்சி மிகவும் பலவீனம் அடைந்திருந்தது.

இந்நிலையில்தான் மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியிலும் பூசல்கள் இருக்கத்தான் செய்தன. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் இயங்கினாலும், காங்கிரஸ் மேலிடம் ராஜாஜிக்கே முக்கியத்துவம் கொடுத்தது.

தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் 64.5 சதவீத வாக்குகளை அந்தக்கட்சி பெற்றது. சட்டமன்ற கீழவையில் 159 இடங்களில் அது வெற்றி பெற்றது. நீதிக்கட்சி வெறும்18 இடங்களில் மட்டுமே வென்றது.

மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 27 இடங்களிலும், நீதிக்கட்சி 7 இடங்களிலும் வெற்றிபெற்றன.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்தன. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்காகவே பல புதிய கட்சிகள் தோன்றின. அந்தக் கட்சிகள் பெற்ற இடங்களைப் பார்க்கலாம். தென்னிந்திய வர்த்தகர் சபை 1, நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கம் 1, முஸ்லிம் லீக் 11, ஐரோப்பிய வணிகர்கள்3, ஆங்கிலோ இந்தியர்கள் 2, முஸ்லிம் முற்போக்குக் கட்சி 1, சென்னை மக்கள் கட்சி 1, நீதிக்கட்சி ஆதரவாளர்கள் 2, மற்றவர்கள் 1.

மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், நீதிக்கட்சி பெற்ற இடங்கள் தவிர்த்து, முஸ்லிம் லீக் 3, முஸ்லிம் சுயேச்சைகள்3, கிறிஸ்தவ சுயேச்சைகள் 2, இந்து சுயேச்சைகள் 2, ஐரோப்பியர்கள் 1, மற்றவர்கள் 1.

முதல் தேர்தல் முடிந்த நிலையில் பதவியேற்க வேண்டிய காங்கிரஸ் கட்சி புதிய பிரச்சனையை கிளப்பியது. 1935 ஆண்டு அரசாங்கச் சட்டத்தின்படி, சட்டமன்றம் எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு என்று கூறப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து காங்கிரஸ் பதவியேற்க மறுத்தது. உடனே, கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை கவர்னர் அமைத்தார். அது இரண்டரை மாதம் ஆட்சியில் இருந்தது. பின்னர், இந்திய வைஸ்ராய் லின்லித்க்ளோ அளித்த வாக்குறுதியை ஏற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது. ராஜாஜி சென்னை மாகானத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக இந்தியை கட்டாயப் பாடமாக்கினார் ராஜாஜி. இதை எதிர்த்து தந்தை பெரியார் மாபெரும் கிளர்ச்சியைத் தொடங்கினார். இந்தக் கிளர்ச்சியின்போதுதான் ஏ.டி.பன்னீர் செல்வம் பெரியாருடன் மீண்டும் இணைந்தார்.




அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ.விசுவநாதம், சாமி சண்முகானந்த அடிகள், ஈழத்து சிவானந்த அடிகள், சாமி அருணகிரிநாதர், மறை திருநாவுக்கரசு ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத்தண்டனை பெற்றனர். அந்தப் போராட்டத்தில் தமிழகம்  முழுவதும் 1200 பேர் கைதாகி சிறைசென்றனர். தந்தை பெரியாருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. தாளமுத்து - நடராஜன் என்ற இரு இளைஞர்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் நேரத்திலேயே பலியாக்கப்பட்டனர்.

ராஜாஜி பொறுப்பேற்றது முதல்தமிழ் உணர்வு கிளர்ந்தெழுந்தது. 1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி வேலூரில் மாகாண தமிழர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் தனித் தமிழ்நாடு திட்டம்பற்றி பேசப்பட்டது.

1939 ஆம் ஆண்டு சென்னை மாகாண பெண்கள் மாநாடு கூடியது. டாக்டர் தருமாம்பாள் தலைமையில் கூடிய இந்த மாநாடு இந்தியை கட்டாயப் பாடமாக்கும் சட்டத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த மாநாட்டில்தான் தந்தை பெரியாருக்கு “பெரியார்” பட்டம் வழங்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில்தான் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடிகள் தமிழின் அருமைகளை மக்களிடம் கொண்டு சென்றார்கள். 1939 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி தமிழ்நாடு தமிழருக்கே என்ற திட்டத்தை நாட்டுமக்களுக்கு விளக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்ட அறிஞர்அண்ணா உருக்கமிகு உரையை நிகழ்த்தினார்.

அண்ணாவின் உரை நாட்டு மக்களையும் இளைஞர்களையும் தட்டி எழுப்பியது. காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்படைந்தனர். தமிழன், தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழனின் பண்பு, பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி வெளியிடப்பட்டன.அண்ணாவின் உழைப்பே இதைச் சாத்தியமாக்கியது.

இத்தகைய நிலையில்தான் நீதிக்கட்சியின் மாநாடு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு பெரியாரை தலைமை ஏற்கும்படி கேட்டுக்  கொண்டனர். பெரியாரும் சம்மதித்தார். ஆனால், பெல்லாரிச் சிறையில்  அடைக்கப்பட்டிருந்த அவரை விடுவிக்க ராஜாஜி அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தலைமை இருக்கையில் பெரியாரின் படத்தை வைத்துவிட்டு, அவருடைய உரையை ஏ.டி.பன்னீர் செல்வம் வாசித்தார்.



ஏ.டி.பன்னீர் செல்வம்


பின்னர், 22-5-39ல் தந்தை பெரியார் விடுதலை ஆனார். அதைத் தொடர்ந்து இந்திக்கு எதிரான உணர்ச்சிமிகு போராட்டங்கள் அதிகரித்தன. எனவே, வேறு வழியின்றி கட்டாய இந்தி சட்டத்தை ரத்து செய்வதாக ராஜாஜி அரசு அறிவித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து திருவாரூரில் 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தந்தை பெரியார் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த மாநாட்டில்தான் திராவிடநாடு திராவிடருக்கே என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(நீதிக்கட்சியின் சாதனைகளும்,திராவிடர் கழகமான வரலாறும் திங்கள்கிழமை பார்க்கலாம்)

 -ஆதனூர் சோழன்

 முந்தைய பகுதிகள் :

14. சீமான்களும் கோமான்களும் குடிபுகுந்த நீதிக்கட்சி!

13. முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலெட்சுமி ரெட்டி!

சார்ந்த செய்திகள்