Skip to main content

சந்திரயானா? பிரக்ஞானந்தாவா? முதலில் வெல்வது யார்  

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

chandrayan3;chess olympiad

 

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா, ஆகஸ்ட் 21 அன்று அரையிறுதி டை - பிரேக் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3 ஆவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜிஎம் ஃபேபியானோ கருவானாவை (2,782) தோற்கடித்து. FIDE 2023 செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

 

இந்த அரையிறுதி வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறிய நிலையில் நேற்று இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கார்ல்சன்- பிரக்ஞானந்தா மோதிய உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று 35 நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. இன்று இரண்டாம் சுற்று போட்டி தற்போது துவங்கியுள்ளது. நேற்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இரண்டாம் சுற்று குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், 'கார்ல்சன் 2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியைப் போன்றே டிரா செய்யும் நோக்கில் காய்களை நகர்த்தி வருகிறார்' என தெரிவித்துள்ளார். 

 

அதேநேரம் இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3  நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவிற்கு மிக அருகில் சென்ற நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

இந்நிலையில் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சந்திரயான் - 3 லேண்டரை நிலவில் தரையிறக்கத் திட்டமிட்டுள்ள உயரத்திற்கு லேண்டர் மாலை 05.44 மணிக்கு வந்தடையும். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடவடிக்கை இன்று மாலை 05.44 மணிக்குத் தொடங்கும். தானியங்கி இறங்கும் முறைப்படி லேண்டர் வாகனம் படிப்படியாக நிலவை நோக்கி இறங்கத் தொடங்கும். குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க உள்ளனர்” என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சந்திரயான் - 3, செஸ் உலக கோப்பை இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா என இரு விறுவிறுப்பு நிகழ்வுகள் இந்தியாவின் கவனத்தை சீட்டின் நுனியில் உட்கார வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; பட்டம் வென்ற தமிழக வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tamil Nadu player who won Chennai Grand Masters Chess Championship title

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15 முதல் இன்று (21.12.2023) வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடினார்கள்.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து 7வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் குகேஷ் வெற்றி பெற்றார். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். 

Next Story

டெல்லியில் தமிழக விஞ்ஞானிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் பாராட்டு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Lawyers' Association praises  isro scientists in Delhi

 

உலகிற்குத் தமிழால் பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானிகள், வீரமுத்து வேல் (திட்ட இயக்குநர் சந்திரயான் மூன்று விண்கலம்) மற்றும் நிகர் ஷாஜி (திட்ட இயக்குநர் ஆதித்யா எல் 1 விண்கலம்) ஆகியோர் இன்று தில்லி சென்றனர். அவர்களை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராம் சங்கர் ராஜா நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

தமிழ் உலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் போற்றும் இடத்தில் தமிழ் விஞ்ஞானிகள் இருவரும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக ராம் சங்கர் வெகுவாகப் பாராட்டினார். இந்திய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மிகப்பெரிய இயக்குநர் பொறுப்பில் இருக்கும் இந்த இருவரும் தமிழர்கள். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான் - 3’ என்ற விண்கலமும் சூரியனுக்கு அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல் -1’ என்ற விண்கலமும் உருவாக, நடைமுறைப்படுத்த, வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவிற்கு இவர்கள் இருவரும் இயக்குநர்கள் ஆவார்கள். 

 

வீர முத்துவேல் என்ற விஞ்ஞானி தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஞ்ஞானி நிகர் ஷாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரும் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை தமிழர்களுக்கும் பெருமை. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய அரசு நிறுவனம். விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் நாம் இப்போது முன்னிலை பெற்றுள்ளதற்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. சந்திரயான் மற்றும் ஆதித்யா விண்கலங்கள் இந்தியாவையும் இந்தியப் பொருளாதாரத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றும் வருங்காலத்தில் அதிக பலன்கள் தரும் என்றும் இருவரும் கூறினர்.

 

உலக நாடுகள் இந்தியாவின் இந்த இரண்டு சாதனைகளை உற்று நோக்கிப் பார்த்து வருவதாகவும் நமது விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்கள். சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்து வேல் சந்திரனுக்கு சென்றுள்ள விண்கலம் ‘சந்திரயான் - 3’  நிலவின் மண் மற்றும் இதர கனிம வளங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வழங்கும் என்று கூறினார். அதேபோல் சூரியனுக்கு சென்றுள்ள ‘ஆதித்யா எல் -1’ விண்கலம் சூரியனின் வட்டப் பாதைகளை ஆராய்ந்து, அதன் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்து உலக வெப்ப மயமாதல் போன்றவற்றை ஆராய்ந்து சொல்லும் என்று கூறினார். 

 

தமிழகத்தின் இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் நீடுழி வாழவும் இன்னும் பல்வேறு சாதனைகள் செய்யவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மேலும் மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகச் சொல்லி நேரில் சென்று டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ராம் சங்கர் பாராட்டினார். அவருடன் டெல்லி தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டு அவர்களை டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தினார்.