Skip to main content

கண் கூசும் நெடுஞ்சாலைகள்

Published on 13/01/2018 | Edited on 13/01/2018
கண் கூசும் நெடுஞ்சாலைகள் 



நாம் கடந்த நாட்களில் மணப்பாறை அருகே ஒரு விபத்து, திருப்பதி சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் ஒரு போர்வெல் லாரியில் மோதியதில் பத்து பேர் உயிரிழந்தனர், ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் சாலை விபத்தில் பலி. இப்படியாக பல சாலை விபத்து செய்திகளை கேட்டிருப்போம். அந்த இரத்தங்களின் மீதும் கூட கடந்து சென்றிருப்போம். ஆனால் இவற்றிற்கு ஒரு ஓட்டுநரை மட்டும் குறை சொல்ல இயலாது.



குறிப்பாக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் அதிகமான விபத்துகளுக்கு லாரிகளும் ஒரு காரணமாக உள்ளது. பெரும்பாலானோர் புதிய லாரிகளை வாங்குவதைவிட பழைய வண்டிகளை வாங்குவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். பாதுகாப்புக்காக இருக்கும் சிவப்பு பட்டைகள், சிவப்பு விளக்குகள் போன்றவை சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுகின்றனர். தூரத்தில் வரும் வாகனங்களுக்கு லாரி இருப்பதே தெரிவதில்லை. மிக அருகில் சென்றவுடன்தான் தெரிகிறது. அப்போது கட்டுப்படுத்தமுடியாமல் விபத்து ஏற்பட்டு விடுகிறது. எடுத்துக்காட்டாக அண்மையில் நிகழ்ந்த பல விபத்துகள் நின்றுகொண்டிருந்த லாரிகளில் இடித்தே நிகழ்ந்திருக்கும். 



  வாகனங்களின் விளக்குகளில் இரண்டு தேர்வு முறைகள் இருக்கும் ஒன்று லாங்- பீம்(long beam), இன்னொன்று ஷார்ட்-பீம்(short beam). லாங் பீம் நெடுஞ்சாலைகளிலும், அதிகம் வாகனம் வராத இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். அதேபோல் ஷார்ட் பீம் நகரங்களுக்குள்ளும், போக்குவரத்து அதிகமாக உள்ள இடங்களிலும் பயன்படுத்த வேண்டும்.  எதிரில் ஒரு வாகனம் வரும்பொழுதும், ஓவர்டேக் (over take) செய்யும் பொழுதும்  விளக்கை  லாங் பீமில் இருந்து ஷார்ட் பீமிற்கு மாற்ற வேண்டும். இப்படியாக பல விதிமுறைகள் உள்ளன. ஆனால் இவற்றை கண்டுகொள்ளாதவர்களின் செயலால் எதிரில் வருபவர்களுக்கு ஆனா, ஊனானா மஞ்ச லைட்ட எடுத்துட்டு மாநாட்டுக்கு கெளம்பீர்ராய்ங்க. என்பது போல் வெறும் மஞ்சள் வெளிச்சம் மட்டுமே தெரிகிறது. மிக அருகில் இருக்கும் பள்ளங்கள் கூட தெரியாமல் ஒரு நிமிட குருடனாக ஆகிவிடுகின்றனர். 

அதுமட்டுமில்லாமல் அதிகமான ஒளி, வெள்ளை நிற விளக்கு, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருப்பது இவை எல்லாம் ஒரு ரகம் என்றால் ஒரு பக்க விளக்கை மட்டும் எரியவிட்டு வருவது, விளக்கே இல்லாமல் வருவது, வண்ண விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு வருவது இதெல்லாம் தனி ரகம்.நாம் அனைவரும் விடுமுறையை ஒட்டி அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பியிருப்போம். பேருந்து, ரயில் இவற்றில் செல்வதைவிட கார்களில் பயணம் செய்வதை விரும்புபவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டேயிருக்கிறது. இரவு பயணம் ஆபத்தானது என்றாலும் அது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அப்படி நாம் இரவு பயணங்களை மேற்கொள்ளும்போது கவனமாக செல்வது அவசியமாகும் அப்படி செல்வது நமக்கு மட்டுமல்ல, அருகில் வருபவருக்கும், எதிரில் வருபவருக்கும்கூட நன்மை பயக்கும்.

-கமல் குமார் 

சார்ந்த செய்திகள்