Skip to main content

திமுக தேர்தல் புறக்கணிப்பும்

Published on 19/10/2017 | Edited on 19/10/2017



இந்தியாவுக்கு புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுவிட்டது. அந்த சட்டத்தின்படி பேச்சுரிமை, எழுத்துரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் திமுகவினரின் எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்பட்டன. 

அரசின் அடக்குமுறையை திமுக மீறிச் செயல்பட்ட அதேநேரம், தமிழகம் வரும் மத்தி அமைச்சர்களுக்கு தங்களுடைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த கருப்புக் கொடி காட்டப்பட்டது.

இந்நிலையில்தான் இந்தியா குடியரசான பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சி கவனித்தது. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட விருப்பம் தெரிவித்தது.

புதிதாக உருவாகி இருக்கும் சூழல் குறித்து விவாதிக்க மதுரையில் அண்ணா தலைமையில் திமுக பொதுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் திமுக தேர்தலில் பங்கேற்க வேண்டுமா என்பது குறித்தும், தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் நிலவும் கருத்துகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

முடிவாகப் பேசிய அண்ணா, கம்யூனிஸ்ட் தோழர்கள் தன்னை சந்தித்தது பற்றியும், கூட்டணி தொடர்பாகவும் விளக்கம் அளித்தார். 

முடிவாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

திராவிடர்களின் கருத்தை அறியாமல், காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களின்படி மட்டுமே உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தின்படி நடைபெறும் பொதுத்தேர்தலை திமுக புறக்கணிப்பதாக முதல் தீர்மானம் கூறியது. 

கம்யூனிஸ்ட்டுகளையும், காங்கிரஸ் அல்லாத நாணயமான, திறமையான முற்போக்கு கருத்தினரை ஆதரிப்பது என இரண்டாவது தீர்மானம் தெரிவித்தது.

இந்தத் தீர்மானங்களை ஆதரிப்போர் திமுக சார்பில் தரப்படும் ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும் எனவும் அண்ணா கூறினார். 

திராவிடத் தனியரசை ஆதரிப்பதாகவும், சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக இடம்பெற்றால், திமுகழகக் கொள்கைக்கு ஆதரவு தேடும் வகையில் பணியாற்றுவேன். திமுகழகத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக செயல்படுவேன் என்ற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்பவர்களுக்கு மட்டுமே திமுக ஆதரவு அளிக்கும்.

யாருக்கு திமுகவின் ஆதரவு என்கிற பட்டியலை 1951 டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறும் மாநாட்டில் அண்ணா அறிவிப்பார் என்று பொதுக்குழு தீர்மானித்தது. 

அந்த மாநில மாநாட்டின் விளம்பரம், கலை நிகழ்ச்சி செயலாளர்களாக கலைஞரும், டி.எம்.பார்த்தசாரதியும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அந்த மாநில மாநாட்டுக்கு முன், டிசம்பர் 2 ஆம் தேதி திமுகவுக்காக தலைமை நிலைய கட்டிடம் வாங்கப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு அறிவகம் என்று பெயரிடப்பட்டது. இந்தக் கட்டிடம் ராயபுரத்தில் இப்போது திருமண மண்டபமாக இருக்கிறது.


கட்சி தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் 12 மாவட்ட மாநாடுகள், சமூக சீர்திருத்த மாநாடு, மாணவர் மாநாடு, வகுப்புரிமை மாநாடு, பெண்கள் மாநாடு, எழுத்துரிமை மாநாடு என்று அடுத்தடுத்து மாநாடுகளை வரிசையாக நடத்தி, மாநில மாநாட்டை நடத்தும் அளவுக்கு, அதுவும் நான்கு நாட்கள் சென்னையில் நடத்தும் அளவுக்கு திமுக பிரமாண்டமாக வளர்ந்திருந்தது.

அத்தகைய கட்சியின் ஆதரவோடு தேர்தலைச் சந்திக்க பலரும் விரும்பினார்கள். வன்னியர் பெரும்பான்மையாக இருந்த காமன்வீல் கட்சி, ராமசாமி படையாச்சியின் உழவர் உழைப்பாளர் கட்சி, கட்சி சாராத சுயேச்சைகள் திமுகவின் நிபந்தனைகளை ஏற்று கையெழுத்திட்டு தேர்தலில் போட்டியிட்டனர். தாங்கள் யாரையும் ஆதரிக்காத இடங்களில் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரித்து திமுகவினர் வேலை செய்தனர்.

இதன் விளைவாக காங்கிரஸ் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றாலும், அரசு அமைக்கப் போதுமான இடங்களை பெற முடியாமல் போயிற்று.

1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அந்த முதல் பொதுத்தேர்தல் குறித்து கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்வது நல்லது. 

விடுதலை பெற்று குடியரசாகவும் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த தேர்தல் நடைபெற்றது. முந்தைய தேர்தல்களில் நிலம் வைத்திருப்போர், நிலவரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தத் தேர்தலில் 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. சட்டமன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 

மொத்தம் 375 உறுப்பினர்கள் 309 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டிருந்தது. இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்தது. அதாவது, 66 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இந்த 66 தொகுதிகளில் 62 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவருக்கும் (எஸ்.சி.) நான்கு தொகுதிகள் பழங்குடியினருக்கும் (எஸ்.டி.) ஒதுக்கப்பட்டிருந்தன. 

இரட்டை உறுப்பினர் தொகுதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 332 ஆவது உட்பிரிவின்படி உருவாக்கப்பட்டிருந்தன. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இல் விவரிக்கப் பட்டிருந்தது. ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளுக்கே இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தத் தொகுதிகளில் இரண்டு வேட்பாளர் பட்டியல்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்று பொது வேட்பாளர்களுக்கு ஆனது. இன்னொன்று தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆனது. வாக்காளர்கள் இந்த இரண்டு வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்களில் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்ய தனித்தனியே இருமுறை வாக்களிக்க வேண்டும். 

வெற்றி பெற்ற இரு வேட்பாளர்கள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தனி உறுப்பினர் - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்
பொது உறுப்பினர் - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் (இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலாம், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்)

(இந்த வாக்களிப்பு முறையில் சில சிக்கல்கள் இருந்தன. உதாரணமாக 1957 தேர்தலில் கோவை -2 தொகுதியில் இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 ஆம் ஆண்டு, இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித்தொகுதி முறை அமல்படுத்தப்பட்டது.)

சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் மலபார் பகுதிகளை இணைந்த பகுதியாக இருந்தது. இதில் தமிழக பகுதிகளுக்கு 190 இடங்களும், ஆந்திராவுக்கு 143 இடங்களும், கர்நாடகாவுக்கு 11 இடங்களும், கேரளாவின் மலபார் பகுதிக்கு 29 இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. 

மூன்று உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 372 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 



இந்தத் தேர்தல் சமயத்தில் சென்னை மாகாணத்தில் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்து, 1951 ஆம் ஆண்டு வெளியேறிய தங்குதுரி பிரகாசம் தொடங்கிய கிசான் மசுதூர் பிரஜா கட்சி, பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம், அண்ணா தலைமையிலான திமுக, காமன்வீல் கட்சி, தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சி, சென்னை மாநில முஸ்லிம் லீக், பி.டி.ராஜன் தலைமையிலான நீதிக்கட்சி, முத்துராமலிங்கத் தேவரின் பார்வர்டு பிளாக் கட்சி, அம்பேத்கரின் பட்டியல் ஜாதிகள் கூட்டமைப்பு ஆகியவை இருந்தன. இவற்றில் திராவிடர் கழகமும், திமுகவும் தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தலில் போட்டியிட்டன.

1946 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசல்களால் தத்தளித்தது. ஆறு ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள் மாறி இருந்தார்கள்.

காங்கிரஸ் கட்சிக்குள் நான்கு முக்கிய உட்குழுக்கள் இருந்தன.
1. தங்குதுரி பிரகாசம் தலைமையில் தெலுங்கு உறுப்பினர்கள்.
2. காமராஜர் தலைமையில் பிராமணர் அல்லாத தமிழ் உறுப்பினர்கள்.
3. ராஜகோபாலச்சாரியை ஆதரித்த பிராமணர்கள்.
4. பட்டாபி சீத்தாராமையா, கால வெங்கடராவ், பேசவாடா கோபால ரெட்டி பிரிவினர்.

1946 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலங்கானா, மலபார், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் ஆயுதமேந்திப் போராடி வந்தது. இந்த ஆயுதப் புரட்சி காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு அடக்கப்பட்டது. 

ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததால் 1951 ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் கட்சி வன்முறையைக் கைவிட்டு, தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. கட்சியின் குறிக்கோள் மக்கள் ஜனநாயகத்திலிருந்து தேசிய ஜனநாயகமாக மாற்றப்பட்டது. 

தெலங்கானா ஆயுதப் புரட்சி தோல்வியடைந்தாலும், ஆந்திரத்தில் கம்யூனிஸ்டுகள் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தனர். மொழி அடிப்படையில் ஆந்திராவை தனி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை அவர்களது செல்வாக்குக்குக் காரணமாக இருந்தது.

நில உரிமையாளர்களான ரெட்டிகள் காங்கிரசை ஆதரித்ததால், கம்மவார்கள் கம்யூனிஸ்டுகளின் ஆதரவாளர்களாக மாறினர். இந்தியக் குடியரசில் 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டதால், நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் முதல் முறையாக வாக்குரிமை பெற்றனர். விவசாயிகள் நிறைந்த தஞ்சை மாவட்டத்திலும் அவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். முதல் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 2 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 58 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. முடிவுகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியாகின. 

காங்கிரஸ் கட்சி 152 இடங்களை கைப்பற்றி தனிப்பெருங் கட்சியாக வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் 62, கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 35, உழவர் உழைப்பாளர் கட்சி 19, கிரிஷிகார் லோக் கட்சி 15, பொதுவுடமைக்கட்சி 13, காமன்வீல் கட்சி 6, சென்னை மாநில முஸ்லிம் லீக் 5, பார்வர்டு பிளாக் (மார்க்சிஸ்ட் குழு) 3, தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு 2, பி.டி.ராஜனின் நீதி்க்கட்சி 1, சுயேச்சைகள் 62 என எதிர்தரப்பில் 223 பேர் இருந்தனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் சென்னையில் கூடிக் கூட்டணி அமைத்தனர். தங்கள் தலைவராக தெலுங்குப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பிரகாசத்தைத் தேர்ந்தெடுத்தனர். 

ஐக்கிய ஜனநாயக முன்னணி என்று பெயரிடப்பட்ட அந்தக் கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவு உறுப்பினர்கள் - 70, பிரகாசத்தின் கிசான் மஸ்தூர் - 36, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி - 19, காமன்வீல் கட்சி - 6, ஃபார்வார்டு ப்ளாக் - 3, தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு -1, நீதிக்கட்சி - 1, பிற கட்சிசாரா வேட்பாளர்கள் – 30 என 166 பேர் ஆதரவு இருந்தது.

பிரகாசம் சென்னை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். ஆனால், ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும்,  கம்யூனிஸ்ட் ஆதரவு அரசு அமைவதை விரும்பவில்லை. ஆளுநரின் தலைமையில் குடியரசுத்தலைவர் ஆட்சி ஏற்படுவதையும் விரும்பவில்லை. 

காங்கிரசு ஆட்சி அமைய அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு முதல்வர் தேவைப்பட்டதால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ராஜாஜியை ஆட்சி அமைக்க அழைத்தனர். 

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் காமராஜருக்கு இதில் உடன்பாடில்லை. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு அரசமைக்க முதலில் வாய்ப்பளிக்க வேண்டும். அந்தக் கூட்டணியால் வெகுகாலம் ஒற்றுமையாக இருக்க முடியாதென்று அவர் கருதினார். ஆனால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராம்நாத் கோயங்கா ஆகியோரின் வற்புறுத்தலால் ராஜாஜி ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார்.
 
1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 1, ஆம் தேதி ஆளுனரால் ஆட்சியமைக்க அழைக்கப்பட்ட ராஜாஜி ஏப்ரல் 14 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால் ஆளுநர் பிரகாசா அவரை மேலவையின் உறுப்பினராக நியமித்தார். 

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எதிர்கட்சிகளின் கூட்டணியை உடைத்தும், சுயேச்சைகளை காங்கிரசில் சேரவைத்தும் காங்கிரசின் சட்டமன்ற பலத்தை பெருக்கினார் ராஜாஜி. சொல்லப்போனால் தமிழ்நாட்டின் முதல் குதிரைபேர அரசு ராஜாஜி தலைமையிலான இந்த அரசுதான் எனலாம்.

மே 6 ஆம் தேதி பேரவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.  காங்கிரசின் சிவசண்முகம் பிள்ளை, கட்சிசாரா உறுப்பினர் சுயம்பிரகாசத்தை 206-162 என்ற கணக்கில் வென்று பேரவைத் தலைவரானார். முதல்வர் ராஜாஜி ஜூலை 3 ஆம் தேதி சட்டமன்றத்தில் 200 உறுப்பினர்களின் ஆதரவுடன் தன் பெரும்பான்மையை நிரூபித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 162 ஆகக் குறைந்திருந்தது. 

இந்தியக் குடியரசில் ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபித்தது இதுவே முதல் முறை. அரசு ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வரும் நிகழ்வுகளால் 152-இல் இருந்து 200 ஆக உயர்ந்தது.

காமன்வீல் கட்சியின் தலைவர் மாணிக்கவேல் நாயக்கருக்கு ராஜாஜி அமைச்சர் பதவி கொடுத்தார். இதையடுத்து அந்தக் கட்சியின் 6 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. 19 உறுப்பினர்களைக் கொண்ட வன்னியர் கட்சியான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் காங்கிரசுக்கு ஆதரவளித்தது. 



சுயேச்சை உறுப்பினர்களுக்கு விலை பேசி அவர்களை காங்கிரசில் இணைத்தார். 

கிரிஷிகார் லோக் கட்சியை உடைத்தார். அதிலிருந்த முக்கிய உறுப்பினர்கள் மூவரை காங்கிரசில் சேர்த்தார்.

கம்யூனிஸ்டுகளை விரும்பாத சென்னை மாநில முஸ்லிம் லீகின் 5 உறுப்பினர்களின் ஆதரவும் ராஜாஜிக்கு கிடைத்தது.

1953 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி தனி ஆந்திர மாநிலம் உருவானது. இதையடுத்து ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவி விலகினார்கள். சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 230 ஆகக் குறைந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மற்றும் மைசூர் சட்டசபைகளுக்கு முறையே 140 மற்றும் 5 உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேறிய உறுப்பினர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

மீதமிருந்த 230 உறுப்பினர்களில் காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தது. ஆனால் காங்கிரசு உறுப்பினர்களில் பெரும்பாலோனோர் காமராஜரின் ஆதரவாளர்களாக இருந்தனர். 

கடந்தமுறை முதல்வரானபோது இந்தியைக் கட்டாயமாக்கி தமிழ்நாட்டை ரணகளப்படுத்திய ராஜாஜி, இந்தமுறை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பாதி நேரம் பள்ளிக்கூடம் வந்தால் போதும் என்றும் மீதி நேரத்தை அவரவர் குலத்தொழிலை செய்து பழகும்படியும் உத்தரவிட்டார். 

இந்தத் திட்டத்தை பெரியாரின் திராவிடர் கழகமும், அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகமும் கடுமையாக எதிர்த்தன. திமுக சார்பில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன.

தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருந்த ராஜாஜியை விலக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்புக் குரல் வலுப்பெற்றது. இதையடுத்து உடல்நிலை காரணமாக பதவி விலகுவதாக ராஜாஜி 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விலகினார்.

ராஜாஜி விலகினாலும் காமராஜரை முதல்வராக விடாமல் தடுக்க பல தந்திரங்களை கையாண்டார். காமராஜருக்கு போட்டியாக சி.சுப்பிரமணியத்தை தூண்டிவிட்டார். ஆனால், சுப்பிரமணியத்தை வென்ற காமராஜர் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். 

முதல் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி தனது தில்லுமுல்லுகளை தொடங்கியதை பார்க்க முடிந்தது. எந்த ஆட்சி வர வேண்டும், யார் முதல்வராக வர வேண்டும் என்பதை தீர்மானிக்க மாநில ஆளுநரை புரோக்கர் போல பயன்படுத்தியது காங்கிரஸ். அமைச்சரவை ஒப்புதலின் பேரில்தான் மேலவை உறுப்பினராக ஆளுநர் நியமிக்க முடியும். ஆனால், அமைச்சரவையே அமைக்கப்படாத நிலையில் ராஜாஜியை மேலவை உறுப்பினராக நியமி்த்தார் ஆளுநர் பிராகாசா. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கமும் நடைமுறையும் இப்போது வரை மத்திய அரசாங்கத்தால் தொடருகிறது என்பதையும் பார்க்க முடிகிறது.

(திமுக தேர்தலில் பங்கேற்க முடிவு செய்ததையும், சட்டமன்ற பங்களிப்பையும் திங்கள் கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்