Skip to main content

நிறம் மாறிய தெய்வங்கள்

Published on 02/02/2018 | Edited on 02/02/2018
நிறம் மாறிய தெய்வங்கள் 



உலகம் முழுதும் வெள்ளை நிறத்தின் மீதான ஈர்ப்பு, மக்களின் மத்தியில் ஒருவித ஆசையகவே இருந்து வருகிறது. அதற்காக முகத்திற்கு அழகு சாதனப்பொருட்களை ஆண்கள், பெண்கள்  என வேறுபாடின்றி அனைவரும் உபயோகிக்கின்றனர். கருப்பாக இருப்பது ஒரு தாழ்வு மனப்பான்மையாக கருதுகின்றனர். இதை குறிப்பிடும் பொழுதுதான் ஒன்று ஞாபகம் வருகிறது. ரஜினி நடித்த சிவாஜி படத்தில் விவேக் ஒரு வசனம் சொல்வார் ராமர் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு, காமராஜர் கருப்பு, கவி பேரரசு வைரமுத்து கருப்பு திராவிட இனத்தின் நிறமே கருப்பு என்பார். ஆனால் ராமரும், கிருஷ்ணரும் மட்டும் கருப்பில்லை ஆண்டியாக இருக்கும் பழனி மலை முருகன் முதல் செல்வம் தரும் லட்சுமி வரை கருமை நிறத்தில் இருந்தால் அழகுதான் என்பதை தன் புகைப்படங்களின் வாயிலாக உணர்த்தியவர் சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞரான நரேஷ் நில். நக்கீரன் இணையத்திற்கு அவர் அளித்த பேட்டி.



நரேஷ் உங்களை பற்றி சொல்லுங்கள்?

என் பெயர்  நரேஷ் நில். என் சொந்த ஊர் சென்னை தான். நான் விஷுவல் கம்யூனிகேஷன் ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் படித்தேன். நான் கல்லூரியில் இரண்டாமாண்டு முதலே திருமணங்களில் போட்டோ எடுத்து அதிலிருந்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன்பின் ஊட்டியில் போட்டோகிராபி பிரிவில் முதுகலை முடித்துவிட்டு, ரஷ்யாவிற்கு சென்று மாடலிங் போட்டோகிராபி முடித்தேன். 2012  ஆம் ஆண்டு நானும் என்  நண்பர் பரத்வாஜும் இணைந்து விளம்பர பட நிறுவனம் ஒன்றை தொடங்கினோம். அந்த நிறுவனத்தின் பெயர்  "ஸ்லிங் ஷாட் கிரியேஷன்ஸ் " எங்களுடைய முக்கிய வேலை விளம்பர படங்கள் எடுப்பதுதான் .

தெய்வங்களை கருமையான தோற்றமுடைய மனிதர்களை வைத்து எடுக்க வேண்டும் என்ற  எண்ணம் எப்பொழுது வந்தது  ஏன்  வந்தது?

ஒவ்வொரு வருடமும்  சமூகம் சார்ந்த ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதனால் 2013 ஆம் ஆண்டு மே 1 உழைப்பாளர் தினத்திற்கு ஒரு வீடியோ செய்தோம். 2015 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு தேசிய கீதத்தை "அக்கபெல்லா வெர்சன்" செய்தோம்.
2017 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அமைதிக்காக வீடியோ செய்தோம். இந்தாண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் நிறத்தை வைத்து செய்வோம் என்று தோன்றியது. உலகத்தில் 80 சதவீதம் மக்கள் கருமையான தோற்றம் உடையவர்கள். 20 சதவீதம்பேர் தான் வெள்ளை நிறமுடையவர்கள். ஆனால் வெள்ளை நிறம் உயர்வாகவும், கருமை நிறம் தாழ்வாகவும் பார்க்கப்படுகிறது.



அதனால்தான் கருப்பு நிறத்தை வைத்து பண்ணலாம் என்று முடிவு செய்தோம் அதற்கு "டார்க் அண்ட் காட்லி" என்று தலைப்பு வைத்தோம். இந்த யோசனைக்கு சொந்தக்காரர் பரத் வாஜ்தான். அதன்பின் நாங்கள் கவனித்த வரைக்கும் கோவில்களை தவிர்த்து மற்ற இடங்களில் காலண்டர், ஸ்டிக்கர்ஸ்ல எல்லாம் கடவுளின் உருவத்தை  வெள்ளை நிறத்தில்தான் இதுவரை காட்டிக்கொண்டு வருகிறார்கள். உடனே சரி இதை எடுத்து செய்வோம் என்று செய்தோம். கடவுள் எல்லாம் கருப்பாக இருந்தாலும் அழகாக இருப்பார்கள் என்று நினைத்து இதற்கான வேலைகளை செய்யத்தொடங்கினோம். அதற்கு முன்பு இதுபோல் வேறுயாரும் செய்துள்ளார்களா என்று மூன்று மாதம் ஆராய்ந்து, யாரும் செய்யவில்லை எனத் தெரிந்த பின்பே  இந்த ப்ரொஜெக்ட்டை தொடங்கினோம். தொடங்கி ஒரு மாதத்திலேயே இதை முடித்துவிட்டோம்.



உங்கள் புகைப்படத்தை பார்க்கும் பொழுது கடவுள்களின் முக ஜாடை அப்படியே உள்ளதே  எப்படி இவர்களை கண்டுபிடித்தீர்கள்?

இந்த முகம் தோற்றம் உள்ளவர்களை கண்டறிய பதினைந்து நாட்கள் ஆனது. சோஷியல் மீடியாதான் எங்களுக்கு உதவியது. அதில் கருமையான மற்றும் மாநிறமான நிறமுடைய மாடல் தேவை என்று பதிவிட்டிருந்தோம் .அதன் மூலம் விருப்பம் தெரிவித்தவர்களில் சிலரை தேர்ந்தேடுத்து ஒரு முன் மாதிரியான சில போட்டோஸ்  எடுத்தோம். இதில் சிவனுக்கும், லட்சுமிக்கும் போட்டோஸ் எடுக்கல. அவங்க கடைசியாகதான் கிடைத்தார்கள். இதில் முருகனாக இருப்பது என் அக்காவின் மகன்தான். சரியான முக அமைப்பு உடையவர்களை தேடினோம் கிடைக்கவில்லை. அப்போதுதான் நண்பர் பரத்  உன் அக்கா பையன் சரியாக இருப்பான் என்று சொன்னார். எனக்கும் சரி  என்று தோன்றியது. பின் ஒரு மாதத்தில் மற்ற வேலைகளை  முடித்து, ஒரே நாளில் அனைவரையும் வைத்து தேவையான போட்டோக்களை எடுத்து முடித்துவிட்டோம்.



இந்த புகைப்படங்களுக்கு எதிர்ப்பு வந்ததா?

எதிர்ப்பு அதிகம்  வரவில்லை. இந்த புகைப்படங்களை நாங்கள் சமூக வலைத்தளத்தில்தான்  முதலில் வெளியிட்டோம். பின் அதில் சிலர் நீங்கள் தெய்வங்களை எப்படி கருப்பாக காண்பிக்கலாம் என்று கேட்டார்கள். அவர்கள் நினைத்தது நாங்கள் தெய்வங்களின் நிறங்களை மாற்றுகிறோம் என்று. ஆனால் எங்களின் கருத்து  கருப்பு நிறமும் கடவுளுக்கு சமமான நிறம்தான் நீங்க ஏன் வெள்ளை நிறத்தை உயர்வாகவும், கருப்பை தாழ்வாகவும்  பார்க்குறீங்க. கருப்பும் அழகான நிறம்தான் அதனை தாழ்வாக பார்க்காதீர்கள் என்பதுதான். இந்த வரிகளை  எங்கள் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களைபோடும்பொழுதே நாங்கள் மேலே குறிப்பிட்டிருந்தோம். இதற்கு பாராட்டும், ஆதரவும் அதிகமாக வந்தது. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு சிலர் இத்தனை நாட்களாக நாங்கள் கருப்பாக இருப்பதை நினைத்து வருந்தினோம். இதனை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது  என்று கூறினார்கள். அவர்கள்  கூறியது  எங்களுக்கு மிகவும் ஊக்கமாக இருந்தது .


இந்த புகைப்படங்களை பார்க்கும்பொழுது,  நாம் எப்படி நம் உணர்வுகளை மற்றவர்களின் மீது காட்டுகிறோம் என்பதில் தான் நம் உயர்வு, தாழ்வு இருக்கிறதே தவிர  நிறத்தில் இல்லை.  அதுமட்டுமல்ல நாம் அனைத்து விஷயங்களிலும் யாரையும் தாழ்வாக நினைக்கக்கூடாது. நினைத்தால் நினைப்பவன் தான் தாழ்வானவன்.

-ஹரிஹரசுதன் 

சார்ந்த செய்திகள்