Skip to main content

விசாரணை கமிஷன்! விசாரிக்கப்படுவாரா வித்யாசகரராவ்?

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
விசாரணை கமிஷன்! விசாரிக்கப்படுவாரா வித்யாசகரராவ்?


              
ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு முடியப்போகிறது. அவரது மரணத்தில் பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன. இதனை அப்போதே நக்கீரன் அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தின் உண்மைகளை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசனை அமைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. விசாரணைக்காக 3 மாதமும், அதன்பிறகு அறிக்கைத் தயாரிக்க 3 மாதமும் என 6 மாதத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அக்டோபர் 5 முதல் தனது முதல் கட்ட விசாரணையைத் துவக்கவிருக்கிறார் ஆறுமுகசாமி. 

அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிசன், உண்மைகளை கண்டறியுமா? அல்லது கண் துடைப்பு கமிசனா? என்கிற கேள்விகள் அதிமுகவின் ஒன்னரை கோடி தொண்டர்களிடம் மட்டுமல்ல; மக்களிடமும்  எதிரொலிக்கவே செய்கிறது. இந்த சந்தேகம் ஏன் எழுகிறது? நீதிக்காக அமைக்கப்படும் விசாரணை கமிசன், எந்த பொருள் குறித்து அமைக்கப்பட்டிருக்கிறதோ அதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களைப் பெற வேண்டும். அப்படிப்பெறப்படும் வாக்குமூலங்கள் மற்றும் சேகரிக்கப்படும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில்தான்  கமிசனின் தலைவர் ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆனால், ஜெயலலிதா மரணத்தில் அது நடக்கிற காரியமா என்பதால்தான் அந்த சந்தேகம்.

சம்மந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம் ; அதேபோல, சேகரிக்கப்படும் ஆதாரங்கள் உண்மையானதாக இருக்கலாம் அல்லது திருத்தப்பட்ட ஆதாரங்களாக இருக்கலாம். இதையெல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய கடமை கமிசனின் தலைவருக்கு இருக்கிறது. அந்த வகையில், ஜெயலலிதா மரண மர்மத்தில் 2 விசயங்கள் முக்கியமானவை. ஜெயலலிதாவின் உடல் நலத்தை விசாரிக்கச்சென்ற அரசின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மருத்துவம் பார்த்த டாக்டர்கள் ஆகியோரின் வாக்குமூலங்களை பெறுவது ஒன்று. மற்றொன்று, போயஸ்கார்டனிலிருந்து அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டபோது ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு இருந்த நோய்கள், அப்பல்லோவில் அவருக்கு  கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள் அனைத்தையும் மருத்துவ ரெக்கார்டுகள் மூலம் அறிவது. முதல் விசயத்தை எடுத்துக்கொள்வோம். அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டாகும் போது, அவர் முதலமைச்சராகத் தான் இருந்தார். அதனால் அவரது உடல்நலத்தில் அக்கறைக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக்கும், உயரதிகாரிகளுக்கும் உண்டு. அடுத்து, மாநிலத்தின் நிர்வாகத்தைக்கட்டிக்காக்கும் கவர்னருக்கு இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக ஓராண்டு காலமாக இருந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் வித்யாசகரராவை மாற்றிவிட்டு, நேரடி கவர்னராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்திருக்கிறார் ஜனாதிபதி. ஜெ.மரணத்திற்கான விசாரணை கமிசன் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் வித்யாசகரராவை மாற்றிவிட்டு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டிருப்பது  கமிசனின் விசாரனை வளையத்திலிருந்து வித்யாசாகரராவை அப்புறப்படுத்துவதற்கா என்கிற சந்தேகங்கள் எழத்துவங்கியுள்ளன.



ஜெயலலிதாவின் உடல் நலத்தை அறிவதற்காக 2 முறை அப்பல்லோவுக்கு விசிட் அடித்தார் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசகராராவ். . இரண்டு முறையும் ராஜ்பவன் அறிக்கை அளித்தது. அதேபோல, மத்திய உள்துறைக்கும் இரண்டு முறை தனது ரிப்போர்ட்டை கவர்னர் அனுப்பி வைத்திருக்கிறார். ராஜ்பவனிலிருந்து பொதுமக்களுக்காக வெளியிடப்பட்ட அறிக்கைக்கும், உள்துறை அமைச்சகத்துக்கு வித்யாசகரராவ் அனுப்பி வைத்த அறிக்கைக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, மக்களுக்காக கொடுக்கப்பட்ட அறிக்கைக்கு நேர் எதிராக இருப்பதாகவே டெல்லியிலிருந்து தகவல்கள் நமக்கு கசிகின்றன.



ஏனெனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கவர்னரின் அறிக்கை குறித்து மத்திய உள்துறையிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கிறது மத்திய உள்துறை. அதனாலேயே, ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய அறிக்கை பல உண்மைகளை சொல்வதாகவே நம்பப்படுகிறது. ஜெ.மரணத்தின் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டிருப்பது உண்மையென்றால், வித்யாசாகரராவிடம் முழுமையாக விசாரிக்க வேண்டியது கட்டாயம். அதனால், தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் பதவியிலிருந்து வித்யாசகர்ராவ் விடுவிக்கப்பட்டிருந்தாலும் மகாராஷ்ட்ராவின் கவர்னராக அவர் இருப்பதால் அவரை நேரில் சந்தித்து விசாரணை நடத்துவாரா, நீதியரசர் ஆறுமுகசாமி?

நமது அரசியலமைப்புச் சட்டம் கவர்னருக்கென்று சில விசேச சலுகைகளையும் அதிகாரங்களையும் கொடுத்திருக்கிறது. அதனால், நீதி விசாரணைக்கு கவர்னரை உட்படுத்த முடியாது என்கிறார்கள். ஆனால், இதனை சாதகமாக வைத்து தமக்குத் தெரிந்த உண்மைகளை வித்யாசாகர்ராவ் சொல்லாமல் இருக்கக்கூடாது. அதேபோல, சட்டச்சிக்கல்களைக் காரணம் காட்டி வித்யாசகரராவிடம் விசாரிப்பதை நீதியரசர் ஆறுமுகசாமியும் தவிர்க்கக்கூடாது என்பதே சட்டவல்லுநர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


முதல்வராகவே ஜெயலலிதா மறைந்திருப்பதால் அவரது மரணத்தில் நடந்துள்ள உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு, மற்றவர்களை விட, கவர்னர் வித்யாசாகரராவுக்குத்தான் அதிகம் இருக்கிறது. ஆக, உண்மைகளைச் சொல்ல முன்வருவாரா, வித்யசாகரராவ்? விசாரணை வளையத்துக்குள் வித்யாசாகர்ராவை கொண்டு வருமா ஆணையம்? என்பதே அதிமுக தொண்டர்களைத் சூழ்ந்துள்ள கேள்வி. ஒரு பிரச்சனையை இழுத்து மூட வேண்டுமாயின் அதன் மீது ஒரு கமிசனைப் போடு அல்லது பிரச்சனைக்குரியவர்கள் மீது கல்லைப் போடு என்பார்கள். அதனால், இந்த விசாரணை கமிசன் எந்த உண்மையை வெளிக்கொண்டுவரப் போகிறது என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்!

- இரா.இளையசெல்வன்

சார்ந்த செய்திகள்