Skip to main content

பஸ் தொழிலாளர்களுக்கு என்னதான் பிரச்சனை?

Published on 06/01/2018 | Edited on 06/01/2018
பஸ் தொழிலாளர்களுக்கு என்னதான் பிரச்சனை? 



படுபாவிங்க... ஏன்தான் இந்த பஸ்சு வல்லியோ... வருஷத்துக்கு ரெண்டு, மூனு தடவை இப்படித்தான் பண்றாங்க... நம்பள மாதிரி பிரைவேட்டுல வேலை செஞ்சா தெரியும்.... 10 நிமிஷம், அரை மணி நேரம் லேட்டானா... ஆஃப் டே லீவுன்னு போட்டு சம்பளத்தை கட்பண்றாங்க. இவுங்களுக்கு அப்படியா... மாதம் பொறந்தா அக்கவுண்டல விழுது பணம். 5 ரூபாயில போவ வேண்டிய இடத்துக்கு இப்போ 330 ரூபா கேட்குறான் ஆட்டோவுல... 7 ரூபாயும், 10 ரூபாயும் கேக்குற ஷேர் ஆட்டோகாரங்க இப்போ 50, 70, 100ங்குறான். இதுபோன்ற மக்களின் புலம்பல்கள் கடந்த 3 நாட்களாக ஒவ்வொரு போக்குவரத்து டிப்போக்கள் முன்பும், பேருந்து நிறுத்தங்களிலும் கேட்கிறது.

இன்னொரு பக்கம் வேலை நிறுத்தம் தொடரும் என்று தொழிலாளர்கள் அறிவிப்பும், வேலைக்கு திருப்ப வேண்டும் என்றும் தமிழக அரசின் எச்சரிக்கையும், நீதிமன்ற கண்டிப்பும் செய்திச் சேனல்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகளாகின்றன...

மக்களை இவ்வளவு சிரமப்படுத்தும் அளவுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு என்னதான் பிரச்சனை? ஏன் அவர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் மற்றும் சந்திரன் ஆகியோரை நக்கீரன் இணையதளம் தொடர்பு கொண்டது.



அப்போது அவர்கள் பிரச்சனையை எளிமையாக புரியவைத்தார்கள். அது உங்கள் பார்வைக்கு...,

தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 500 பேருந்துகள் ஓடுகின்றன. இதில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேருந்துகள் நகர பேருந்துகளாகவும், சுமார் 600 பேருந்துகள் மலைவழித் தடங்களிலும் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு வழித்தடங்களிலும் அதிக லாபம் இருக்காது. ஆனால் சேவைத் தன்மையுடன் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு 32 ரூபாய் செலவாகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு 23 ரூபாய்தான் வருமானம் வருகிறது. 9 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இழப்பு கிடையாது. சேவையாக செயல்படுவதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. சேவையாக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

மக்களுக்கு இலவசமாக அரிசியை கொடுக்கும் அரசு, ஒரு கிலோ அரிசியை 8 ரூபாய்க்கு மத்திய அரசிடம் வாங்குகிறது. இதில் ஏற்படும் இழப்புத் தொகையை உணவுப்பொருள் வினியோகத் துறைக்கு அரசு மானியமாக கொடுக்கிறது. இதுபோலவே, இலவச சேவைகளில் ஏற்படும் இழப்புத் தொகையை அந்தந்த துறைகளுக்கு அரசு மானியமாக கொடுத்துவிடுகிறது. ஆனால், போக்குவரத்துத் துறையில் ஏற்படும் இழப்புக்கு மட்டும் மானியம் கொடுப்பதில்லை.

மாணவர்களுக்கும் முதியோருக்கும் இலவச பயணம் கொடுக்கப்படுகிறது. அதேசமயம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. உயர்த்தாததும் மக்களுக்கு நல்லதுதான். ஆக மொத்த்தில் போக்குவரத்துறைக்கு நஷ்டம் என்று சொல்லவே முடியாது. சேவை செய்வதால் ஏற்படக் கூடிய இழப்புதான் இது. இந்த இழப்பை அரசாங்கம் ஈடுகட்டத் தவறியதுடன், போக்குவரத்து ஊழியர்களின் சேமிப்பு நிதியையும் எடுத்து செலவு செய்துள்ளது.

அதாவது, போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ள, வருங்கால வைப்புநிதி, ஓய்வுதியத் திட்டம், கடன் சங்கம், எல்.ஐ.சி.வீட்டுக் கடன் திட்டம் போன்றவற்றிக்கு கட்ட வேண்டிய பணம் மாதம் சுமார் 180 கோடி ரூபாய்  ஆகும். இந்த 180 கோடி ரூபாயை 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதில் இருந்து அரசுச் செலவுகளுக்காக பிடித்தம் செய்யத் தொடங்கினார்கள். அது 2017 ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை 5,423 கோடியாக இருக்கிறது. அந்தத் தொகையை இதுவரை ஊழியர்களுக்குத் திருப்பித் தரவில்லை. இதேபோல ஓய்வுப்பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போய்சேர வேண்டிய தொகையான ரூபாய் 1,138 கோடியையும் அரசு எடுத்துக்கொண்டது. இந்தப் பணத்தை திருப்பி கேட்டால் பணம் இல்லை, நிதி ஆதாரம் இல்லை என்கிறது.

இந்தப் பணத்தை அரசு எடுத்துக்கொண்டதால் ஜூன் 2012ல் இருந்து ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வரவேண்டிய செட்டில்மண்ட் வரவில்லை. பலமுறை கடுமையான போராட்டங்களை நடத்தியப் பின்னர் சிலருக்கு மட்டும் கொடுத்துள்ளனர். இன்னும் அதனை பெறாதவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். எங்கள் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டால்,  வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் தருவதாக அரசு கூறுகிறது. இது சாத்தியமில்லாதது என்று நாங்கள் கூறுகிறோம்.

இதற்கிடையில் மற்ற எல்லாத்துறையையும் விட எங்களுக்கு குறைந்த ஊதியமே தருகின்றனர். நாள் ஒன்றுக்கு 515 ரூபாய் மட்டுமே தரப்படுகிறது. மற்ற துறைகளைப் போலவே எங்களுக்கும் மாநில அரசு சம்பளம் தர வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக போராடுகிறோம். மூன்று மாதத்தில் பிரச்சனையை தீர்த்து வைப்போம் என்று ஒரு ஒப்பந்தம் போட்டார்கள் அதுவும் தீர்க்கப்படவில்லை.

மாநில அரசு ஊழியர்கள் 650 ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். அதேபோல எங்களுக்கும் தருமாறு கேட்டோம். பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடன்பாடு ஏற்படவில்லை. 550 ரூபாய் வாங்கிய அவர்களுக்கு 100 ரூபாய் உயர்த்தி 650 ரூபாய் தருகிறீர்கள். எங்களுக்கு 650 ரூபாய் தராவிட்டாலும், அதே 100 ரூபாயை உயர்த்தி 515 என்பதை 615 ரூபாய் என கொடுங்கள் என்று கேட்கிறோம். அதற்கும் சம்மதிக்கவில்லை என்பதால்தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம்.

பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தோம். நீதிமன்றமும் பல இடைக்கால தீர்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் தீர்வு எட்டப்படவில்லை என்பதால்தான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுடைய வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கு தெரியும். பொதுமக்களிடம் நாங்கள் கடந்த இரண்டு மாதமாக எங்கள் பிரச்சனையை சொல்லி வந்திருக்கிறோம். பொதுமக்கள் எங்கள் கஷ்டங்களையும் நினைத்துப் பார்ப்பார்கள். எங்கள் கோரிக்கை நியாயம் என்று அவர்களும் சொல்லுவார்கள் என்றனர்.

-வே.ராஜவேல்
படங்கள் : அசோக்குமார்

சார்ந்த செய்திகள்