Skip to main content

பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?

Published on 20/01/2018 | Edited on 20/01/2018
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?



2011 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் முந்தைய திமுக ஆட்சி நிதிச்சுமையை ஏற்றிவிட்டதாகக்கூறி பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. பால் விலையையும் உயர்த்தியது. வாக்களித்த மக்களையே வாட்டி வதைக்கும் வகையில் அந்த கட்டண உயர்வு இருந்தது.

2006 முதல் அதிமுக வெற்றி பெற்ற 2011 ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி நடைபெற்றது. அந்த 5 ஆண்டுகளில் பஸ் கட்டணமோ, மின் கட்டணமோ உயர்த்தப்படவே இல்லை. இத்தனைக்கும் அந்த ஆட்சிக் காலத்தில்தான் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. புதிய மின்திட்டங்களும் தொடங்கப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக 20 ரூபாய்க்கு 20 கிலோ அரிசி திட்டத்தை திமுக அரசு அமல்படுத்தியது. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. அரசின் செலவுகள் அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் தலையில் எந்தச் சுமையையும் கூட்டவில்லை.

ஆனால் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், திமுக ஆட்சியை குறைகூறி, பேருந்துக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது.

2011 முதல் தங்களுடைய சொந்த அரசு நடைபெற்றுள்ள நிலையில், இப்போதும் நிதிச் சுமையைக் காரணம் காட்டி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நள்ளிரவில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அதுவும் 17 ரூபாய் டிக்கெட் எடுத்து சென்றவர்கள், இன்று காலை முதல் 33 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டிய அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

அதாவது 100 ரூபாயை வைத்துக்கொண்டு போய் வந்த இடத்துக்கு இப்போது 200 ரூபாய் தேவைப்படுகிறது. 200 ரூபாய் கூலிக்கு வேலைக்குப் போனவர்கள் இப்போது திகைத்து நிற்கிறார்கள். வெறும் 100 ரூபாயை கையில் வைத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய கூலித் தொழிலாளர்களும், வேலைக்கு செல்வோரும் பஸ் கண்டக்டர்களுடன் வாக்குவாதம் செய்த காட்சியைக் காணமுடிந்தது.

பொதுமக்கள் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் அதிமுக அரசின் இந்த திடீர் பஸ் கட்டண உயர்வை கடுமையாக கண்டித்துள்ளன. ஆனால், அதிமுக அரசோ, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் கட்டண உயர்வு குறைவு என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அந்த மாநில அரசுகளின் திட்டச் செலவுகளையும் ஒப்பிட வேண்டுமா இல்லையா? தமிழகத்தைப் போல வீண் செலவும், ஆடம்பரச் செலவும், எம்எல்ஏக்கள் சம்பள உயர்வும் வேறு எங்கேனும் இருக்கிறதா என்பதையும் சொல்ல வேண்டும். அவற்றுடனும் தமிழகத்தை ஒப்பிட வேண்டுமா இல்லையா?

எம்ஜியார் நூற்றாண்டு விழாவுக்காக இதுவரை எடப்பாடி அரசு செலவழித்த தொகை எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

எந்த மாநிலத்திலும்  இல்லாத அளவுக்கு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் நிறைவேற்றியதாக திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மொத்தமாக கொள்ளையடிக்கும் நிர்வாகம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது.

தமிழக மக்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்றோ, சூடு சொரணை அற்றவர்கள் என்றோ, தேர்தல் சமயத்தில் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாக்குகளை வாங்கி ஜெயித்துவிடலாம் என்றோ எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு நினைக்கிறதா என்று பஸ் பயணிகள் ஆவேசமாக கேட்கிறார்கள்.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்