Skip to main content

வெகுஜனங்களை விரட்டி அடிக்கும் புல்லட் ரயில்?

Published on 03/10/2017 | Edited on 03/10/2017


இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல்நாட்டு விழா கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் கலந்துகொண்டனர். 508 கிமீ தூரமுள்ள இந்த புல்லட் ரயில் திட்டம் மும்பை மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் எனவும், இதற்காக ஆகும் செலவு ரூ.1.1 லட்சம் கோடி எனவும் மோடி அறிவித்தார். இதில் 81%-ஆன 88,000 கோடியை ஜப்பானிடம் இருந்து 0.1% வட்டிவிகிதத்திற்கு கடனாகப் பெறுகிறது இந்திய அரசு. இவ்வளவு குறைந்த வட்டிக்கு கடன் தருவதன் மூலம் ஜப்பான் நமது ‘உண்மையான நண்பன்’ என்பதை நிரூபித்துவிட்டதாகவும் மோடி தெரிவித்தார். ஒருபுறம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை கொண்டாட்டங்களோடு வரவேற்கையில், மறுபுறம் பழம்பெரும் தொழில்நுட்பமான இந்தியன் ரயில்வேயைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக பலதரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. உண்மை நிலவரங்களும் அதையே நிஜம் என்கின்றன மௌனமாய் தலையசைத்தபடி.

மத்திய தணிக்கைக் குழு இந்திய ரயில்வேயில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்நிலையங்களில் நடத்திய ஆய்வின் மூலம், ரயில்களில் போதுமான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் அங்கு விநியோகிக்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்ணத்தகுதியற்றவை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டது அது. அதைத் தொடர்ந்து இந்தியன் ரயில்வே உணவுகள் குறித்து முகம் சுழிக்கச்செய்யும் பல செய்திகளும் வெளிவந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி சதாப்தி ரயிலில் பயணித்தபோது தனக்கு வழங்கப்பட்ட குளிர்பானம் கெட்டுப்போனது என வீடியோ ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார். அதன்பிறகு அந்த குளிர்பான நிறுவனத்தினுடனான ஒப்பந்தத்தை அதிரடியாக(!) ரத்துசெய்தது இந்தியன் ரயில்வே கேட்டரிங் நிறுவனம்.



2016-2017 காலகட்டத்தில் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்துகள் மட்டும் 78. இதில் 193 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்சமான ரயில்வே தொடர்பான விபத்துகளும் மரணங்களும் ஏற்பட்டது இதே காலகட்டத்தில்தான். மேலும், இதே காலகட்டத்தில் ரயில் தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல்கள் 3,546, சிக்னல் தொழில்நுட்பங்களில் 1,30,200 முறை ஏற்பட்ட பிரச்சனைகள் என அவற்றாலும் பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. ஆகஸ்ட் 19ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இது 27 நாட்களில் நடந்த ஒன்பதாவது ரயில் விபத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் ரயில்நிலையத்தில் மழைக்காக ஒதுங்கி இருந்த பொதுமக்கள், திடீரென கிளம்பிய வதந்தியால் சிறிய நடைமேம்பாலத்தில் ஒரே நேரத்தில் ஏறினர். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல ஆண்டுகளாக இந்த இடத்தில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குரல்கள் எழுப்பப்பட்டும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் விட்ட அரசின் அலட்சியப்போக்குதான் இந்த விபத்துக்குக் காரணம் என கண்டனக்குரல்கள் எழுகின்றன. இதையடுத்து ‘மும்பையில் உள்ள ரயில்வே கட்டமைப்பு வசதிகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தாமல், ஒரு செங்கலைக் கூட புல்லட் ரயில் கட்டுமானங்களுக்காக எடுக்க அனுமதிக்கமாட்டேன்’ என மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேவா என்ற அமைப்பின் தலைவரான ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.



செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘இந்த ரயில்விபத்துகள் எங்கள் ஆட்சியில் மட்டுமா நடக்கிறது. கடந்தகால ஆட்சிகளில் ஏற்பட்ட விபத்துகள்தான் இங்கும் நடந்துகொண்டிருக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களை மக்கள் அனுபவிக்கக்கூடாது என்று நினைப்பவர்களே, புல்லட் ரயில் திட்டத்தை எதிர்க்கிறார்கள்’ என தெரிவித்தார். மேலும், ‘நம்மிடம் இருப்பது நூறாண்டுகால பழமைவாய்ந்த தொழில்நுட்பங்கள். அதுகுறித்து யாரும் விவாதிப்பதே இல்லை. குறைசொல்லாமல் நல்ல அறிவுரைகளைக் கொடுத்தால், முன்னேற்றப்பணிகளுக்கு வசதியாக இருக்கும்’ எனவும் அவர் கூறினார். 

ரயில்வேதுறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை வழங்க, அணில் ககோத்கர் என்பவரின் தலைமையிலான குழுவொன்றை 2012ஆம் ஆண்டு நியமித்தது மத்திய அரசு. அந்தக்குழு வழங்கிய பரிந்துரைகளில் ரயில்வேதுறையின் முழுமையான பாதுகாப்பு அம்சங்களுக்காக ஐந்தாண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்வதும், ரயில்வே துறைக்கென பிரத்யேகமான சட்டப்பூர்வ அதிகாரியை நியமிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், இன்றுவரை இந்த பரிந்துரைகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆட்சியில் இருந்த அரசு நிறைவேற்றாமல் விட்டதால் தற்போதைய அரசும் அதைக் கண்டுகொள்ளவில்லையா பியூஷ் கோயல்?



உலகிலேயே அதிக அளவில், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 2.5 கோடி பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துத்துறையான இந்தியன் ரயில்வேயில், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. புல்லட் ரயில் திட்டத்திற்கு ஆகும் அதே செலவுதான், ரயில்வேதுறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆகும் என்பது கவனிக்கத்தக்கது. புல்லட் ரயிலில் சுமார் மூன்று மணிநேர பயணத்திற்காக ரூ.3000 வரை கட்டணமாக வசூலிக்கப்படலாம். விமானப்பயணத்திற்கு ஆகும் செலவையும், நேரத்தையும் விட இது அதிகமானது. எனவே, சாமான்யர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு துறையில் இருக்கும் நீண்டகால பிரச்சனைகளைப் பேசாமல், வெகுஜனங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத புல்லட் ரயில் திட்டத்தை துரிதப்படுத்துவது எந்தவிதத்திலும் பயனளிக்காது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்