Skip to main content

மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பரப்பிய பா.ஜ.க.!

Published on 02/02/2018 | Edited on 02/02/2018
மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பரப்பிய பா.ஜ.க.!
-விழித்துக்கொண்ட நாடார் சமுதாயம்! 

‘இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்ல முடியும்; நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்ட முடியும்; பேசாத ஒன்றைப் பேசியதாகப் பதிவு செய்ய முடியும்.’

இதெல்லாம் சாத்தியமா? என்று நீங்கள் கேட்டால், ‘வலைத்தளங்களையும், நெட்டிசன்களையும் அறியாத அப்பாவியாக இருக்கின்றீர்களே!’ என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு, வலைத்தளங்களில் இன்று புரட்டுப் புரட்சி செய்பவர்கள் மலிந்து கிடக்கிறார்கள். இத்தகையவர்களின் பிடியில் அரசியல் தலைவர்களில் இருந்து சினிமா நடிகர்கள் வரை சிக்கித் தவிக்கிறார்கள். நாடார் ஓட்டு வங்கியை திமுகவுக்கு எதிராகத் திருப்ப வேண்டும் என்று திட்டமிட்டு,  நெட்டிசன்கள் சிலர் வைத்த பொறியில் இப்போது மாட்டியிருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் விளைவாக, நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் கொடும்பாவி எரிப்பு கூட நடந்திருக்கிறது. திமுக மீது ஏன் இந்த டார்கெட்?

வலைத்தளங்களில் பரவிய வதந்தி!

கடலூரில் கடந்த 25-ஆம் தேதி திமுக மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த மேடையில் மைக் பிடித்த ஸ்டாலின் “ரொம்ப சாதாரணமாகச் சொல்கிறார்கள். கழகம் இல்லாத தமிழகமாம். ஏய். களவாணிப் பசங்களா.. உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். இந்த மேடையிலே நின்று.. திமுக மேடையிலே நின்று..  நீயே ஒரு புறம்போக்காக இருக்கக்கூடிய… . நீயே ஒரு மேடை போட்டு.. மேடையிலே நின்று பேசக்கூடிய இந்தத் தெம்பை இந்தத் திராணியை உருவாக்கித் தந்த மண் இந்த திராவிட மண்.” என்று பேசினார். 



ஒரு வார்த்தையை எப்படி திரித்துச் சொல்வார்கள் என்பதற்கு உதாரணமாக இதைச் சொல்வார்கள். ‘முதலில் சொல்பவர் வாந்தி எடுத்தான் என்பார் அடுத்துச் சொல்பவர் கருப்பாக வாந்தி எடுத்தான் என்பார். கடைசியில் சொல்பவர்  காக்காவாக வாந்தி எடுத்தான் என்பார்.’  மு.க.ஸ்டாலின் பேச்சும் இப்படித்தான் வலைத்தளங்களில் திரித்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

திமுக வாக்கு வங்கியை திசை திருப்பும் முயற்சி! 

கடலூர் கூட்டத்தில் நாடார் என்ற வார்த்தையையே மு.க.ஸ்டாலின் உச்சரிக்காத நிலையில், வலைத்தளங்களில் ‘நாடார்களை திராவிட இயக்கம்தான் வளர்த்ததா?’ என்று மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்விக்கணை தொடுத்து, ’திராவிடம் இல்லையென்றால் பொன் ராதாகிருஷ்ணன் போன்றோர் பனைமரம்தான் ஏறியிருக்க வேண்டும் என்று உளறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் பொன்னாரைச் சொல்லவில்லை. அவரை மையப்படுத்தி நாடார் இனத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார்.’ என்று தங்கள்  இஷ்டத்துக்கு கற்பனையாக ஒன்றைச் சொல்லி, நாடார் சமுதாயத்தின் தன்னெழுச்சியான வரலாற்றை விவரித்துவிட்டு,     ‘சொந்த உழைப்பால் உயர்ந்த தன்மானமுள்ள நாடார்களே!  உங்கள் சமுதாயத்தைக் கேவலப்படுத்திய திமுகவில் இனியும் நீங்கள் இருக்கவேண்டுமா?  முடிந்தால் அணி திரட்டி ஸ்டாலினுக்கு எதிராக போராடுங்கள். இல்லையென்றால் மறந்தும் கூட, திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்.’ என்று நாடார் வாக்கு வங்கியை திமுகவுக்கு எதிராகத் திருப்பும்விதமாக முடித்திருக்கிறார்கள். 

திட்டமிட்டு பரப்பப்பட்ட இந்தப் பொய்க்கு உயிரூட்டும் விதமாக, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பி, அவரது உருவ பொம்மையையும் எரித்திருக்கிறார்கள். கோட்டார் காவல் நிலையத்தில், பா.ஜ.க. மண்டல பார்வையாளர் தேவ், நகர தலைவர் ராஜன், மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், மணிசுவாமி ஆகியோர் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது. 



கருங்கல் ஜார்ஜ்

போஸ்டர் டிசைன் ஏற்படுத்திய பரபரப்பு!

‘மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையே எரித்துவிட்டார்கள்; நான் எப்படி சும்மா இருக்க முடியும்?’ என்று நினைத்தோ என்னவோ, போஸ்டர் மன்னன் எனப்படும், நெல்லை தெஷண மாற நாடார் சங்கத்தின் இயக்குநர் கருங்கல் ஆர்.ஜார்ஜ்,  ‘அமைச்சர் பொன்னாரை விமர்சிப்பதாக எண்ணி, நாடார்களை இழிவுபடுத்தியுள்ள மு.க.ஸ்டாலினே! நாடார்களின் குலத்தொழில் பனைமரம் ஏற நாங்கள் தயார்! உங்கள் குலத்தொழிலை செய்ய நீங்கள் தயாரா?’ என்று கேள்வி எழுப்பி, போஸ்டர் ஒட்டத் தயாராகிவிட்டார். அந்த போஸ்டர் டிசைன் சமூக வலைத்தளங்களில் பரவ, கொதிப்பான திமுகவினர்  “மு.க.ஸ்டாலின் என்ன பேசினாரென்று தெரியுமா? பொய்யான தகவல் என்று தெரிந்தும் போஸ்டர் ஒட்ட முயற்சிப்பது தவறல்லவா?” என்று   கருங்கல் ஜார்ஜை  ஒரு பிடிபிடித்தனர். 

விமர்சனங்களை வாபஸ் பெறவேண்டும்!

கருங்கல் ஜார்ஜும் தன் தவறை உணர்ந்து,  ‘நாடார்களைப் பற்றியோ, பொன் ராதாகிருஷ்ணன் குறித்தோ மு.க.ஸ்டாலின் எதுவும் பேசவில்லை. எனவே, நாடார் தலைவர்கள், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும்  நாடார் உணர்வாளர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் குறித்த அனைத்து விமர்சனங்களையும் நாம் வாபஸ் பெற வேண்டும்.’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

நாம் கருங்கல் ஜார்ஜை தொடர்பு கொண்டோம். “மு.க. ஸ்டாலின் நாடார் சமுதாயத்தினர் குறித்து தவறாகப் பேசினார் என்று யாரோ புரளியை கிளப்பி விட்டுட்டாங்க. அது சமூக வலைத்தளங்களில் தீயா பரவிருச்சு. நானும் போஸ்டர் அடிப்பதற்குத் தயாராகிவிட்டேன். போஸ்டர்கள் அச்சடிக்காத நிலையிலையே, அதன் டிசைன் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகிவிட்டது. அறிவாலயத்தில் இருந்து என்னிடம் பேசினார்கள். ஸ்டாலின் பேசிய வீடியோவையும் அனுப்பி வைத்தார்கள். நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். ஸ்டாலின் தனது பேச்சில்  களவாணிகள், புறம்போக்குகள் என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.” என்று விளக்கம் தந்தார். 

பா.ஜ.க.வினரின் குட்டு உடைந்தது!


சுப்பையா

”திமுக செயல் தலைவர்  மீது அபாண்டமாக பழி சுமத்தியன் பின்னணியில் தமிழக பா.ஜ.க.வினர் இருக்கிறார்கள்” என்று கூறிய விருதுநகர் மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா “நானும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவன்தான். என்னிடமும்  ‘ஸ்டாலின் இப்படி பேசலாமா?’ என்று சமுதாய பிரமுகர்கள் பலரும் கேள்வி கேட்டார்கள். பா.ஜ.க. நண்பர் ஒருவரிடமிருந்து நான் பெற்ற தகவலைச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினேன். அதாவது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைக் காட்டிலும் குறைவான வாக்குகளே தேசிய கட்சியான பா.ஜ.க.வுக்கு கிடைத்தது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தும் 1 சதவீத வாக்குகளைக் கூட பெறமுடியாமல் போனதால், கட்சித்தலைமையிடம் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தமிழக பா.ஜ.க.வினர் ஆளானார்கள். பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசையும், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் நாடார் சமுதாயத்தவர்களே. இதையே ஒரு கணக்காக வைத்து, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நாடார் சமுதாய வங்கியையும் பா.ஜ.க.வுக்கு கொண்டு வந்துவிட்டால், பா.ஜ.க. வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துவிடும் என்று நினைத்தார்கள். தமிழகத்தில் நாடார் சமுதாய மக்களில் பெரும்பாலானோர் திமுக அபிமானிகளே. அதனால்தான், மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் குறிவைத்து இப்படி ஒரு அவதூறு பரப்பியிருக்கிறார்கள். இதற்குமுன்பும் இப்படித்தான்.. காமராஜர் குறித்து என்றோ பேசிய வீடியோவை, இப்போது பேசினார் என்று பரப்பிவிட்டார்கள்.  தற்போது, பா.ஜ.க.வினரின் குட்டு  உடைந்துவிட்டது. குட்டையைக் குழப்ப நினைத்த பா.ஜ.க. விஷயத்தில், விழித்துக்கொண்டது நாடார் சமுதாயம்.” என்றார் ஆதங்கத்துடன். 

காதைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சிக்கிறதா தமிழக பா.ஜ.க.! வேடிக்கைதான்!

-சி.என்.இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்