Skip to main content

’ஒரு அதிர்ச்சி செய்தி வந்திருக்கின்றது;இந்தச் செய்தி வந்திருக்கின்ற நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது....’-ஸ்டாலின் பேச்சு

Published on 23/01/2019 | Edited on 23/01/2019

 

s

 

இன்று (23-01-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற கழக நிர்வாகி பரணிக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். "மேகதாது அணையை கட்டுவதற்கு மத்திய அரசிடம் கர்நாடக அரசு முழு ஆய்வறிக்கை வழங்கியிருக்கிறது; இதுவரை தமிழக முதலமைச்சர் அதனைக் கண்டிக்கின்ற வகையிலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த பணிகளிலும் இறங்காதது ஏன்?”என்று கேள்வி எழுப்பினார். அதன் முழுவிவரம் :


’’உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.  தம்பி பரணிக்குமார் இல்லத்தில் நடைபெற்றிருக்கக் கூடிய மணவிழா நிகழ்ச்சியை நடத்திவைத்து அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். வாய்ப்பினை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய மணமக்களுக்கு, குறிப்பாக மணமக்களுடைய பெற்றோர் உற்றார் உறவினர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

s

 

தம்பி பரணிக்குமார் பற்றி எல்லோரும் இங்கே வாழ்த்துரை வழங்குகின்ற போது குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள். தம்பி பரணிக்குமாரின் தந்தை, நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய  பாலகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு முன்னோடியாக இந்தப் பகுதியில் விளங்கியவர். பெருமையோடு சொல்லவேண்டும் என்று சொன்னால் திருச்சியின் சிங்கமாக விளங்கிய மறைந்த அன்பிலார் அவர்கள், அன்பிலார் அவர்களுக்கு உற்றத் தோழனாக விளங்கியவர் மறைந்த பாலகிருஷ்ணன் .

 

அவருடைய இல்லத்தில் இன்றைக்கு இந்த விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைப்பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு காலையில் கூட பத்திரிகைகளில் வந்திருக்கக் கூடிய ஒரு செய்தி. மேகதாது அணை விவகாரத்தில் நம்முடைய தமிழகத்தில் டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி. இன்றைக்கு கர்நாடக அரசு அந்த மேகதாது அணை கட்டுவதற்கான முழு ஆய்வு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியிருப்பதாக ஒரு அதிர்ச்சி செய்தி வந்திருக்கின்றது. இந்தச் செய்தி வந்திருக்கின்ற நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, இதே மேகதாது அணை பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சநீதிமன்றத்தில் இருப்பது மட்டுமல்ல ஏற்கனவே இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏறக்குறைய 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கட்சிகளைக் கடந்து கட்சிக்கு அப்பாற்பட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரதமரிடத்தில் ஏற்கனவே நாம் வலியுறுத்தி இருக்கின்றோம். உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு அனுமதி தரக்கூடாது என்று சொல்லி இருக்கின்றோம். அவரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், இடையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். இடையில் கூட ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு கூட மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய நிதின் கட்கரி அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். மத்திய அரசினுடைய அனுமதி இல்லாமல் நிச்சயமாக எந்தப் பணியும் நடக்காது, தமிழ்நாட்டினுடைய அனுமதி கேட்டுக்கொண்டுதான் நாங்கள் எதையும் செய்வோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றார்கள்.

 

s

 

கேரளா மாநிலமாக இருந்தாலும் சரி, புதுவை மாநிலமாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி, கர்நாடக மாநிலமாக இருந்தாலும் அனைத்து மாநிலங்களையும் கலந்து முடிவெடுப்போம் என்று நிதின் கட்கரி அவர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய செய்தி என்ன என்று கேட்டீர்கள் என்றால், கர்நாடக மாநிலம் தன்னிச்சையாக ஒரு ஆய்வறிக்கையை ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் சென்று கொடுத்திருக்கிறது. மத்திய அரசும் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது என்று சொன்னால், அந்த செய்தி வந்ததற்குப் பிறகு கூட இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி இதுவரை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

ஆகவே, இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாத முடியாத நிலையில் இருக்கின்றார்கள். எனவே இப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் எல்லோரும் வரக்கூடிய சூழ்நிலையை பயன்படுத்தி அதற்கு ஏற்ற வகையில் நல்ல பாடத்தை வழங்குவதற்கு தயாராக இருக்கவேண்டும் என்று உங்களை எல்லோரும் நான் அன்போடு கேட்டுக்கொண்டு, மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்புகளைப் பெற்று வாழ்ந்திட வேண்டும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய் வாழுங்கள்! வாழுங்கள்!  என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்!

 

சார்ந்த செய்திகள்