Skip to main content

கொடுப்பதனால் ஆகும் பயன்...

Published on 03/10/2017 | Edited on 03/10/2017




'பாலம்' கல்யாணசுந்தரம் என்ற மனிதர், ஒரு காணொளி மூலமே எனக்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்த தேடுதல்கள் அவரை யார் என எனக்குக்  காட்டியது. அதே ஆவலுடனும், அவர் இருக்கும் வீட்டைப்பற்றிய கற்பனைகளுடனும் அவரது    வீட்டை நோக்கி நடந்தேன்.  வீட்டை அடைந்த எனக்கு  ஆச்சரியம் காத்திருந்தது, நான் எதிர்பார்த்த வரவேற்பறை, வரவேற்பாளர் யாருமில்லை, அவரே அங்கு அமர்ந்திருந்தார். சாதாரண வீடு, எளிமையான மனிதர் இவ்விரண்டையும் கண்ட எனக்கு ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. பின் அறிமுகம் செய்துகொண்டேன். இந்திய திரையுலகின் மிகப்பெரிய வியாபாரமாக இருக்கும்  'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், தனது தந்தையாக விரும்பித்  தத்தெடுத்த ஒருவர், நாட்டின் முதல் பிரதமரிலிருந்து, சிறந்த ஜனாதிபதியான அப்துல் கலாம் என அனைவராலும் பாராட்டப்பட்ட ஒருவர், ஒரு ரூபாயைக் கூட தனக்கென வைத்துக் கொள்ளாமல் உதவும் இவரை நம்பி கோடிக்கணக்கான பணத்தை இவர் வழியாக நற்பணிகளுக்குக் கொடுக்கும் பல பெரிய மனிதர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர், இப்படி இருப்பார் என நான் நினைக்கவில்லை. போன வாரம் தொண்டு நிறுவனம் ஆரம்பித்துவிட்டு, இந்த வாரம் ஸ்கார்பியோவிலும், இன்னோவாவிலும் அடிபொடிகளுடன்  சென்று தொண்டு செய்பவர்களையே பார்த்த எனக்கு, இவ்வளவு பெரிய மனிதர் இப்படி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டது நியாயம் தானே?         

கல்யாணசுந்தரம்,   கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த  காலகட்டம் அது. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போதைய பிரதமர்  நேரு, நாட்டு மக்களிடம்  உதவித்தொகை கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில் அன்றைய முதல்வர் காமராஜரிடம் போர்  நிதியாக தான் அணிந்திருந்த  எட்டு பவுன் தங்க நகையை  வழங்கினார். நாட்டிலேயே, நிதி வழங்கிய முதல் மாணவராகத்  திகழ்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். அதற்காக நேரு இவரை "இந்தியாவின் ஜோதி" (light of india) என பாராட்டினார். அன்றிலிருந்து பொது மக்களுக்கு மட்டுமல்ல, பரிசு, பாராட்டுகளுக்கும் இவரை மிகவும் பிடித்துவிட்டது. 

தனக்கு மட்டுமல்லாமல், தன் பிள்ளை, பேரன் என பல தலைமுறைகளுக்கு, அது வரை உலகம் இருக்குமோ அழியுமோ என்ற சந்தேகம் துளியுமில்லாமல், அடித்துப் பிடித்து, அடுத்தவர் வாழ்வைக்கெடுத்து, அரசங்கப் பணத்தை எடுத்து சம்பாரிக்கும் மனிதர்களிடையே,  தனது 35 வருட நூலகர் பணியில் கிடைத்த மொத்த ஊதியத்தையும் (மாதம் ரூ.20,000 சம்பளம்) தானம் செய்துவிட்டார். தனது உணவுக்கும் உடைக்கும் வேறு வேலைகள் செய்தார். இந்தப் பணிக்கு இடையூறாக இருக்குமோ என்று திருமண வாழ்வையும் தவிர்த்தார்.  உலகில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும்  இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millennium) என்ற விருதுக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.  




பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது, அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், இன்னொருவர் இவர். கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் 'உலகின் குறிப்பிடப்பிடத்தக்க மனிதர்'  (‘Most Notable intellectual’ in the World) என்ற பட்டத்தை வழங்கியதுடன், நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு' என்றும் குறிப்பிட்டது.  இவர் பாராட்டையும், பரிசையும் தனக்குள் எப்போதும் எடுத்துக்கொள்ள மாட்டார் என்பதற்கு சாட்சி, ரஜினி இவரைத்  தன் அப்பாவாகத்  தத்தெடுத்து இவரை வீட்டிற்கு அழைத்து சென்றார்.  அதை இவர் மறுத்து  எளிமையாகவே  வாழ்ந்தார். அவரது வீட்டில் அமர்ந்திருந்தபொழுது,  இந்த சம்பவங்களெல்லாம் என் மூளை மடிப்பை நிரப்பிக்கொண்டிருந்த பொழுது,  "ஐயா வெளியே போகணும்" என்ற  குரல் என்னை நிகழுக்குக் கொண்டுவந்தது.   "இவரையும் அழைத்து செல்வோம்" என்று கல்யாணசுந்தரம்  ஐயா கூறியது 'திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்கென வந்ததாம் கல்யாணம்' என்பதுபோல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் உரையாட சென்ற எனக்கு உடன் பயணிக்கும் வாய்ப்பும் கிடைத்தது அல்லவா... அதனால்தான்.

காரில் அவரருகில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த பயண நேரங்கள் எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது. தன் அம்மா தனக்கு மகிழ்ச்சிக்கான பாடத்தை கற்றுக்கொடுத்தது,  'பெற்றோர் வாங்கித்தந்த சங்கிலியை கொடுத்த நீ, உன் சம்பாத்தியத்தில் உதவுவாயா' என்ற  விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியத்தின்  சவால் மற்றும் அதைத்தொடர்ந்த 30 வருட பயணம், மீண்டும் அவருடன் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு ஆகியவற்றில் தொடங்கி, அன்புப்பாலம் என்ற தொண்டு மாத இதழ்,  இலட்ச கணக்கான மக்கள் பண ரீதியாகவும், பாசத்தின் ரீதியாகவும் காட்டிய  ஆதரவு (இவற்றில் முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஏ. பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒருவர்)  வரை அனைத்தையும் பகிர்ந்தார். 

முதுமையின் வலி, தனிமை இவரையும் விட்டுவைக்கவில்லை. தனக்கென எதையும், எதையுமே வைத்துக்கொள்ளாத இவர் தனிமையில் வாடினார். நல்லவேளை இவரை சுற்றியிருந்தவர்கள் இவரை அந்த கோர பிடியில் சிக்கி தவிக்க விடவில்லை. இவர் இன்றும் நம்முடன் ஆரோக்கியமாக வாழ இவர்கள் தான் காரணம். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை அவருக்குக்  கிடைக்காத புகழே இல்லை. ஆனால் அவர் எதையும் தனக்குள் ஏற்றிக்கொள்வதில்லை. அவர் எப்போதும் கூறுவது, 'நான் ஒன்றும் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை, மற்றவர்களுக்கு கொடுக்க மனமுண்டு ஆனால் வாய்ப்பு அமைவதில்லை.  எனக்கு வாய்ப்பு அமைந்துள்ளது அதனால்  நான் செய்கிறேன். இதில் பெரிதாய் கூற ஒன்றுமில்லை' என்பதுதான். "எதற்காகவும் பேராசைப்படாதே, எது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்,  தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்". இவையே மகிழ்ச்சிக்கான காரணிகளாக அவர் கூறுவது.

'இந்திய ஜோதி' என ஆசிய ஜோதியால் பாராட்டப்பட்டவர். பணம் எனும் காலணியை சரியாக பயன்படுத்துபவர். நாம் பார்க்க விரும்புபவர்கள் எல்லோரும்  இவரைப்  பார்க்க விரும்புவர். எளிமையின் சிகரம், ஆயிரம் ஆண்டுகளில் ஒருவர், ஏழைகளின் பாலம் என்ற வரிகள் நினைவில் வாசம் புரிய நான் நீங்கா விடைபெற்று திரும்பினேன். நினைத்து பாருங்கள், தலைப்பு சரிதான் என தோன்றும்.

கமல் குமார் 


சார்ந்த செய்திகள்