









சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (11.05.2023) மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு புதிய அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட டி.ஆர்.பி.ராஜா தலைமைச் செயலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தொழில்துறை அமைச்சராக முதல் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார். அதற்கு முன் அமைச்சர் செஞ்சி மஸ்தான், டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி அவரை இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். பின்னர் அதிகாரிகள், கட்சியினர் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் அத்துறைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.