
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அதே சமயம் காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 7 பேரையும் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேரின் இந்த முயற்சியானது முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 57 போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் போர் பதற்றம் காரணமாக இனி வரும் அனைத்து போட்டிகளையும் காலவரையறையின்றி ஒத்திவைக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. அதே சமயம் போர் பதற்றம் தொடர்பான நிலைமை சீரான பின்னர் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
போர் பதற்றம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் இது குறித்து ஆலோசித்து இந்த சீசனைத் தொடரலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் பாதுகாப்பு காரணங்கள் கருதி, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பாதியில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணம் கருதி அங்கு இருக்கக்கூடிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.