
தென்காசி மாவட்டத்தின் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள ஆத்துவழியைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி டிரைவர். இவரது மனைவி மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த மீனா. இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள். ஆத்துவழியில் குடியிருந்த தம்பதியருக்கு தியா முமீனாள் (5) முகிஷா முமீனாள் (2) என்கிற இரு பெண் குழந்தைகள். இதில் மூத்தவர் அருகிலுள்ள பள்ளியில் படித்து வந்தார்.
இந்தச் சூழலில், மீனாவிற்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சந்தேகம் காரணமாக இந்தத் தகராறு தொடர்ந்து நீடித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதில் உண்டான விரக்தி காரணமாக மீனா ஏற்கனவே தீக்குளிக்க முயன்றும், விஷமருந்தியும் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற போது அவரை கணவர் காப்பாற்றியிருக்கிறார்.
நேற்று தம்பதியருக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மனமுடைந்த மீனா, அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் வீசிக் கொலை செய்துவிட்டு பின்னர் தானும் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தகவலறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையிலான தீயணைப்பு மீட்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து மீனா மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்து சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.