Skip to main content

ரசாயன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 'Chemical Ganesha idols cannot be allowed to dissolve in water bodies'- High Court orders

 

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நெல்லையில் வட மாநிலத்தவர் ஒருவர் செய்த விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இரசாயனங்கள் வைத்துத் தயாரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அந்த சிலை தயாரிக்கும் இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இருந்த அரங்கத்தை மூடி சீல் வைத்தனர்.

 

 'Chemical Ganesha idols cannot be allowed to dissolve in water bodies'- High Court orders

 

இதனால் அந்த சிலையை உற்பத்தி செய்த வடமாநில குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். இந்நிலையில் விநாயகர் சிலையை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்ற அந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு, 'சனாதனத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர். அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றித் தான் விநாயகர் சிலைகளைச் செய்தோம். ஆனால் முன்னறிவிப்பு இன்றி விற்பனையைத் தடை செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள விநாயகர் சிலைகள் தேங்கியுள்ளது. எனவே சிலையை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்' என வாதிடப்பட்டது.

 

இதனை விசாரித்த நீதிபதி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தாமிரபரணி ஆறு மாசடைந்துள்ளது. இந்நிலையில் கெமிக்கல் கலந்த சிலைகளை நீர்நிலையில் கரைக்கக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.  சிலைகளை விற்பனை செய்யலாம். ஆனால் அந்த சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது. அவரிடம் இருந்து யார் யாரெல்லாம் சிலைகள் வாங்கினார்கள் என்பது தொடர்பான முழு முகவரிகளை வாங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிலைகளைக் கரைக்க எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.’ என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்