முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்து! ஷாக் கொடுக்குமா பாக்.?
அயர்லாந்து கிரிக்கெட் தனது முதல் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே களம்கண்டு வந்த அயர்லாந்து அணி, அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
அயர்லாந்து அணி ஐரோப்பிய கண்டத்தில் விளையாடும் மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் தனித்துவமாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஆக்ரோஷமும், வேகமும் கலந்த ஆட்டமே அந்த அணியின் அடையாளம். ஆனால், டெஸ்ட் மாதிரியான பொறுமையை சோதிக்கும் ஆட்டத்தில் களமிறங்குவது, அதுவும் சர்வதேச தரமுள்ள அணியுடன் மோதுவது என்பது அந்த அணிக்கு பெருத்த சவாலாக இருக்கும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் பாகிஸ்தானை ’ரெட்-பால்’ போட்டியில் எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள் என பச்சைக் கொடி காட்டியிருக்கிறது ஐசிசி. அதேசமயம், இலங்கையுடனான டெஸ்ட் தோல்வியால் தரவரிசைப் பட்டியலின் அடிமட்டத்திற்கு சென்றிருக்கும் பாக். அணிக்கு இது மீண்டு வருவதற்கான வாய்ப்பு. இரண்டு அணிகளில் எது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதைக்காண அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும்.