Skip to main content

மெக்சிகோ-வின் நிர்பயாவிற்கு நீதிகேட்டு ஒன்று திரண்ட பெண்கள்!

Published on 18/09/2017 | Edited on 18/09/2017
மெக்சிகோ-வின் நிர்பயாவிற்கு நீதிகேட்டு ஒன்றுதிரண்ட பெண்கள்!



மெக்சிகோ நாட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்ககோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாக சென்று, பெண் விடுதலை முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

மெக்சிகோவின் பியூப்லா மாநிலத்தில் மாரா காஸ்டில்லா எனும் 19 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். ஒருவாரத்திற்குப் பின் பியூப்லா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று இரவு, மாரா காஸ்டில்லா நைட்க்ளப் சென்றுள்ளார். பின் அங்கிருந்து திரும்புகையில் வாடகை காரில் பயணம் செய்துள்ளார். அந்தக் காரின் ஓட்டுநர் மாராவை கடத்திக்கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, அவரைக் கடுமையாகத் தாக்கி கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைக் கண்டித்தும், மாராவிற்கு நீதிகேட்டும் மெக்சிகோவின் சொகாலோ வீதியில் வயது வித்தியாசமில்லாமல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாக நடந்துசென்றுள்ளனர். பல முழக்கங்களை எழுப்பிய அவர்கள், பெண் விடுதலை குறித்த பதாகைகளையும் அவர்கள் சுமந்துசென்றுள்ளனர்.

அதில் ஒருவர், ‘அது உன் தவறில்லை மாரா!’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி வெளி உலகத்திற்கு வரும்போது மாரா காஸ்டில்லா தனியாக நைட்க்ளப் சென்றதுதான் தவறு என்று பலர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவின் பியூப்லா பகுதியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 83 பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லா நாடுகளிலும் நிர்பயாக்களும், நந்தினிகளும் வக்கிரங்களால் கொலை செய்யப்பட்டு, தவறுகளுக்கு அவர்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்படுகின்றனர். நீதிதான் பொதுவானதாக இருப்பதில்லையே.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்