கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
கோவை மாவட்டம், அன்னூர் அருகிலுள்ள பூலுவம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுக்குட்டி (வயது-60). கடந்த இருநாட்களுக்கு முன், அங்குள்ள குளக்கரையில் தனது செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நீலநிற காரில் வந்த இரு இளைஞர்கள், தீபாவளி பண்டிகைக்காக தங்களுக்கு ஆடுகள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆறு ஆடுகளை விலைபேசி, 34-ஆயிரம் ரூபாய்க்கு ஆறு ஆடுகளையும் வாங்கிக்கொள்வதாக கூறிய அவர்கள், அப்பகுதியில் உள்ள வழக்கப்படி ரூ.500 முன்பணம் மட்டும் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை அங்குவந்த அந்த நால்வரும், ஆறுக்குட்டியிடம், 2,000 ரூபாய் நோட்டுகளாக, 16 நோட்டுகளும்; மூன்று 500 ரூபாய் நோட்டுகளும் கொடுத்து விட்டு, ஆறு ஆடுகளையும் தாங்கள் கொண்டுவந்த வேனில் ஏற்றிச் சென்று விட்டனர்.
ஆறுக்குட்டி, வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அந்த நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது குறித்து அன்னுார் போலீசில் ஆறுக்குட்டி புகார் செய்தார். அன்னுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடு வாங்கிச் சென்ற நபர்களை தேடிவருகின்றனர்.
- சிவசுப்பிரமணியம்