
இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சென்னையில் பல முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை கடற்கரை, மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் தினமான இன்று சென்னையில் கடலில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 16,000 காவலர்கள், 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள கடற்கரைகளில் கூடுதலாக காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினாவில் மூன்று தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், ஏழு காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை மணல் பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல இடங்களிலும் பொது இடங்கள், சுற்றுலாத் தலங்களில் காணும் பொங்கல் காரணமாக போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்