
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 19,588 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 5,829 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,17,405 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 17,164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 10,54,746 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா முதல் அலையில் தமிழகத்தில் அதிகபட்ச ஒருநாள் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 127 என்று இருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் 147 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். முதல் அலையில் இல்லாத அளவிற்கு இரண்டாம் அலையில் ஒரு நாள் உயிரிழப்பு 147 ஆக உயர்ந்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 92 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 55 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 14,193 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் செங்கல்பட்டில் 1,445 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 1,127 பேருக்கும், திருவள்ளூரில் 779 பேருக்கும், மதுரையில் 711 பேருக்கும், சேலத்தில் 521 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.