தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு
பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
தீபாவளி நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்சி மாநகராட்சியில் சோதனையில் பணமும் தங்க காசுகளையும் கைப்பற்றினர்.
திருச்சி மாநகராட்சி 2-வது புளோரில் நதி கணக்கு அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆணையராக பிரபுகுமார் ஜோசப் இருக்கிறார். தீபாவளியை யொட்டி சிலர் ஒப்பந்தகாரர்களிடம் பணம் வசூல் வேட்டை நடத்துவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை மாநகராட்சி இரண்டாவது மாடியில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், சக்திவேல், சேவியர்ராணி, அருள்ஜோதி ஆகியோர் உள்பட 9 பேர் அடங்கிய குழுவினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் அங்கே இருந்த மேஜை டிராயர்கள், அலமாரிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடியும் வரை ஊழியர்கள் யாரும் அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னர், அங்கிருந்த ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அந்த அலுவலகத்தில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த முக்கிய ஆவணங்கள், கோப்புகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 560 ரொக்கம் மற்றும் 42 கிராம் எடையுள்ள மொத்தம் 32 தங்க காசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உதவி ஆணையர் பிரபுகுமார் ஜோசப், அலுவலர்கள் ராம்குமார், தங்கராஜ், அலுவலக உதவியாளர் பாலமுத்து, கார் டிரைவர் ராஜேந்திரன் ஆகிய 5 பேரிடம் இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணி, குடிநீர் பணி உள்ளிட்ட 4 பணிகளுக்கு 33 காசோலைகள் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே கணக்கில் வராத பணம், தங்க காசுகள் தீபாவளி பரிசாக கொடுக்கப்பட்டு இருக்கலாம். எனவே இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் தான் அவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பது தெரிய வரும் என்று கூறினர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பீதியை உண்டாக்கியிருப்பது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
- ஜெ.டி.ஆர்