
வரும் ஜுன் மாதம் 4-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டமன்றம் கூடுகிறது. துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் ஜுன் 4-ல் துவங்கி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மானிய கோரிக்கை தொடர்பாக துறை ரீதியிலான ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையை விரைவாக கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்தோ, ஜி.எஸ்.டி மசோதா தாக்கலாகுமா என்பது போன்ற தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.