
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல் அதற்கு அடுத்த நாளான மார்ச் 14 ஆம் தேதி முதல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022- 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும் அதே போல 11 ஆம் வகுப்பு தேர்வினை 7.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 3,225 மையங்களில் இந்த தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த தேர்வுப் பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கான பதிவெண்கள் தேர்வறைகளில் எழுதும் பணிகளும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது; “என் பேரன்புக்குரிய 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கிற மாணவர்களே, தேர்வு நினைத்து கவலையாக இருக்கிறீர்களா? எந்த பயமும் வேண்டாம். இது ஜெஸ்ட் இன்னொரு தேர்வு அவ்வளவுதான். இதை அப்படி தான் நீங்கள் அணுக வேண்டும். எந்த கேள்வியாக இருந்தாலும், நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால், உறுதியோடு அணுகுங்கள்.
உங்களுக்கு தேவையெல்லாம், தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்க பாதி வென்றுவிட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது இல்லை. உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது; உயர்த்திவிடுவது. அதனால், எந்த விதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள்; புரிந்து படியுங்கள். விடைகளை முழுமையாக எழுதுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோரும், ஆசிரியரும் போல் நானும் காத்திருக்கிறேன். முதல்வராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.