
'மெட்ராஸ் ஐ' உள்ளவர்கள் பாட்டி வைத்தியம் போன்ற சுய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மெட்ராஸ் ஐ விரைவாகப் பரவி வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரப்பகுதிகளில் அதிகம் பரவி வந்த இந்த நோய் தற்போது கிராமப்புறங்களிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாகக் கடந்த மூன்று நாட்களில் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், " தமிழகத்தில் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது.
தினசரி 4500க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் தயவு செய்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் சுற்றக் கூடாது. மேலும் தகுந்த சிகிச்சை எடுக்காமல் பாட்டி வைத்தியம் எடுக்கக் கூடாது. முறையான சிகிச்சை எடுத்தால் இந்த நோயை விரைந்து குணப்படுத்தி விடலாம்" என்றார்.